twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் 2: எட்டி உதைப்பதும் எகத்தாளமாகப் பேசுவதும்!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    நண்பர்களுடன் சுற்றுலா செல்கையில் பல்வேறு பொருள்களில் நாங்கள் கலந்துரையாடுவது வழக்கம். அவ்வாறு ஒருநாள் பேசப்பட்ட பொருள் தமிழ் நகைச்சுவை நடிகர்கள். தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒரேயொருவர் பெயரைச் சொல்ல வேண்டுமென்றால் யாரைச் சொல்வீர்கள் என்பது கேள்வி. பலரும் பலரைச் சொல்கையில் நான் கவுண்டமணி பெயரைச் சொன்னேன்.

    Tamil Cinema Comedians Part 2

    கவுண்டமணியின் நகைச்சுவையில் என்ன சிறப்பு என்று கேட்டார்கள். எப்போதும் நம்மை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு பிறரைத் தாழ்த்திப் பேசிக்கொண்டிருப்போமே, அவ்விடத்திலிருந்து எழும் நகைச்சுவை அவருடையது, அதுதான் எல்லாருக்குமானது, அதனால்தான் அவர் சிறந்த நகைச்சுவை நடிகர் என்று கூறினேன். ஒரு பணக்காரன் இவ்வுலகையும் பிறரையும் எப்படி ஏளனமாகப் பார்ப்பானோ அதை பார்வையில்தான் ஒரு பிச்சைக்காரனும் பார்ப்பான். இருவரும் தம்மிடத்திலிருந்து பிறரை எள்ளலோடு காண்பதைத்தான் குணப்பாங்காகக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் மனித இயல்பும்கூட. பொதுமனிதப் பாங்காகிய அதை இறுக்கிப் பிடித்துக்கொண்டமைதான் கவுண்டமணி அடைந்த வெற்றிக்குக் காரணம். எட்டி உதைப்பதையும் எகத்தாளமாகப் பேசுவதையும் பிறர் கூறுவதைப்போல எளிமையாக விளங்கிக்கொள்ளக் கூடாது. உரிய வாய்ப்பு கிடைக்குமானால் நாம் பிறரை எட்டி உதைக்கவும் எடுத்தெறிந்து பேசவும் தயங்குவதேயில்லை.

    Tamil Cinema Comedians Part 2

    நகைச்சுவை நடிகர்களில் வேறு யார்க்குமே கிட்டாத ஓர் அரிய வாய்ப்பு கவுண்டமணிக்குக் கிட்டியது. ஏறத்தாழ நாற்பதாண்டுகள் அவர் தமிழ்த்திரையைக் கட்டி ஆண்டுவிட்டார். அவருடைய நகைச்சுவைக்கு மூன்று தலைமுறைச் சுவைஞர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவை நடிகராக இவ்வளவு பெருங்காலம் நின்று நீடித்தவர் கவுண்டமணியாகத்தான் இருக்க முடியும். பதினாறு வயதினிலே திரைப்படம்தான் அவர்க்கு முதற்படம் என்று ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளலாம். அதில் அவருடைய இயற்கையான தோற்றத்தில் தோன்றினார். முதற்படத்திலேயே தம் குரலாட்சியால் பார்வையாளர்களையும் சொல்ல வைத்தார் : "பத்த வைச்சிட்டியே பரட்டை...". அப்போதைய உடல் தோற்றத்தை வைத்துப் பார்க்கையில் அவர்க்கு நடுத்தர வயது இருக்கலாம் என்றே தோன்றுகிறது. வாழ்வின் பிற்பாதியில் வெற்றி கண்டவர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு ஓய்வுப்பேறு என்பதே இராது. கவுண்டமணி உள்பட்ட பலர்க்கும் அஃதே நடந்தது.
    Tamil Cinema Comedians Part 2

    பதினாறு வயதினிலே திரைப்படத்தை அடுத்து கிழக்கே போகும் இரயில். அதில் நாயகியின் அக்கா கணவர் பாத்திரம். "பாஞ்சாலி... நான் உன்னத் தூக்கிவுடுவனாம்... நீ அதை எடுத்துக் குடுப்பியாம்..." என்று நாயகியைப் பரண்மீது ஏற்றிவிடும் வேடம். அதற்கடுத்து வந்த புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அமாவாசை என்ற பெயரில் ஊர்த்தலைவரின் அடிப்பொடியாக உடனொட்டி வரும் பாத்திரம். "என்ன அமாவாசை ?" என்றதும் "ஐயா... உள்ளதச் சொல்றீங்க..." என்று ஒத்தூதும் வசனம். இம்மூன்று படங்களும்தான் கவுண்டமணி என்னும் நடிகரை மக்கள் மனத்தில் பதிய வைத்தவை. பாரதிராஜா அறிமுகப்படுத்திய நகைச்சுவை நடிகர்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை.

    கவுண்டமணியை நன்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய படம் 'சுவரில்லாத சித்திரங்கள்.' நாயகி வீட்டுக்கு எதிரிலிருக்கும் ஒரு பெட்டிக்கடைத் தையற்காரர். அக்கடையைச் சாக்காக வைத்துக்கொண்டு அங்கே வரும் நாயகனிடமே தன் பராக்கிரமங்களைக் கூறுகின்ற வெள்ளந்தி. "அந்தப் பொண்ணுக்கு என்மேல ஒரு கண்ணு" என்று கதைவிடுபவர். பாக்யராஜுக்குத் தொடக்கக் காலங்களில் அறைத்தோழராக இருந்தவர் கவுண்டமணி. கல்லாப்பெட்டி சிங்காரம், கவுண்டமணி இருவரில் யாரைத் தம் படங்களில் நகைச்சுவை வேடத்திற்குத் தேர்வது என்ற குழப்பம் பாக்யராஜுக்கு வந்திருக்கிறது. முதிர்ச்சியின் அடிப்படையில் கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கே அவ்வாய்ப்புகளை வழங்கினார் பாக்யராஜ். பிறகு பாக்யராஜின் படங்களில் கவுண்டமணி நடிக்கவில்லை.

    Tamil Cinema Comedians Part 2

    அவர்தான் கவுண்டமணி என்று நான் அறிந்துகொண்டது மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில்தான். கவுண்டமணி சின்ன பண்ணையாக நடித்த அப்படத்தில் செந்திலுக்கும் ஒரு வேடம். மம்பட்டியானிடம் அடிபட்டு கிழிகோலத்தில் வரும் சின்ன பண்ணையை ஒரு காவலர் விசாரிப்பார்.

    "யோவ்... யாருய்யா நீ ?"

    "நான் யாருன்னு எனக்கே தெரியலயேப்பா..."

    "அதெல்லாம் இருக்கட்டும்... மூஞ்சில என்னய்யா சோறு ?"

    "அடிக்கணும்னு நினைக்கறவன் கையைக் கழுவிட்டு வந்தா அடிப்பான்... நினைச்சான் அடிச்சான்... முடிஞ்சு போச்சு..."

    இப்படம் வெளியாகையில் நான் இரண்டாம் வகுப்புச் சிறுவன். கவுண்டமணியின் இந்நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரித்தோம். இன்றைக்கு மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தைப் பற்றி ஒருவர்க்கும் தெரியாது. ஆனால், எண்பதுகளின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று அது. அப்படத்தில் இடம்பெற்ற எல்லாருமே பிற்பாடு பெரிய வளர்ச்சியை அடைந்தார்கள்.

    Tamil Cinema Comedians Part 2

    இடையிடையே ஆகாயகங்கை, குடும்பம் ஒரு கதம்பம் போன்ற படங்களில் பல்வேறு வேடங்களில் கவுண்டமணி நடித்தார். அவற்றிலெல்லாம் அவருடைய முழுத்திறனுக்குப் போதிய வாய்ப்புகள் இல்லை. கவுண்டமணியை இன்றுள்ள கவுண்டமணியாக மாற்றியதில் முதல் அடியை எடுத்து வைத்தவர் இயக்குநர் சுந்தரராஜன். இருவரும் கோவை மாவட்டத்தவர்கள். சுந்தரராஜன் உருவாக்கிய நகைச்சுவைப் பாத்திரங்களை மேலும் ஒரு சுற்று வனைந்தெடுப்பதில் கவுண்டமணி வெற்றிபெற்றார்.
    Tamil Cinema Comedians Part 2

    வாடகை வீட்டு முதலாளியாகப் "பயணங்கள் முடிவதில்லை" திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு. "இந்தச் சென்னை மாநகரத்திலே..." என்னும் அவருடைய இழுப்பே ஒரு நகைச்சுவை. அடுத்த வந்த படம்தான் கவுண்டமணியைக் கவுண்டமணியாக்கியது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா. "டேய்... எனக்கிருக்கிற அறிவுக்கும் அழகுக்கும் நான் அமெரிக்காவுல பொறந்திருக்க வேண்டியவன்டா... என் நேரம் இந்த ஊர்ல வந்து பழனியப்பன் சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டறேன்..." என்று அவர் கிளப்பிய நகைச்சுவைப் புயற்காற்று பிறகு ஓயவேயில்லை. அதற்கடுத்த படம் 'நான் பாடும் பாடல்'. பாலுக்குக் காசு கேட்கும் பால்காரனிடம் "பாதிதான் கொடுப்பேன், மீதியை முனிசிபாலிடில கொண்டுபோய்க் கட்டிடறேன்..." என்று தண்ணீர்ப் பாலுக்குச் சொல்கிற அந்த எடுத்தெறிவும் எகத்தாளமும் பிறகு குறையவேயில்லை. கவுண்டமணி தம் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டம் கரகாட்டக்காரனுக்குப் பிறகு தொடங்குகிறது.

    அதை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

    English summary
    Poet Magudeswaran's article on Tamil Cinema Comedians part 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X