For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அன்று முதல் இன்று வரை... கோடம்பாக்கத்தில் காதல் பட்ட பாடு!

  By Shankar
  |

  தமிழ் சினிமாவைத் தற்போது வேண்டுமானால் பேய்கள் வாழ வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் 100 ஆண்டைத் தொடும் தமிழ் சினிமாவை அன்றும் இன்றும் என்றும் வாழ வைப்பதில் காதல் படங்களுக்கே முதலிடம்.

  காதலை இளநெஞ்சங்களில் விதைத்ததில் சினிமாவிற்கே முதலிடம். அன்றைய பழம்பெரும் நடிகர்கள் தொடங்கி நேற்று வந்த அறிமுக நடிகர்கள் வரை காதல் படங்களில் நடிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.

  சினிமாவில காதலிச்சா ரசிக்குதப்பா உள்ளம், நெஜ வாழ்க்கையில காதலிச்சா பறிக்குதப்பா பள்ளம் என்ற வரிகள் இன்றைய காதலுக்கு மட்டுமல்ல என்றைய காதலுக்கும் பொருந்தக் கூடியவை.

  காதலை எத்தனையோ வழிகளில் காட்டிவிட்டாலும், இன்னும் படமெடுப்பதற்கு கோடிக் கணக்கான காதல் கதைகள் இந்த உலகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

  காலம் காலமாக தமிழ் சினிமாவை வளர்த்தும் வாழவைத்தும் கொண்டிருக்கிற காதல் படங்களில் இருந்து மிக வித்தியாசமான சில காதல் படங்களை இங்கு பார்ப்போம். இங்கு இடம்பெற்றுள்ள காதல் படங்களில் ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு விதத்தில் காதலை வித்தியாசமாகக் காட்டியவை.

  நெஞ்சம் மறப்பதில்லை

  நெஞ்சம் மறப்பதில்லை

  1963 ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை ஒரு காவியம் என போற்றப்பட்டது. முன்ஜென்மத்துக் காதல் இந்த ஜென்மத்திலும் தொடர்வதைக் காட்டிய தமிழ் சினிமாவின் முதல் திரைப்படம் இதுவே. தற்போது வந்து வெற்றிகரமாக ஓடிய மகதீரா, அநேகன் போன்ற படங்களின் முன்னோடி நெஞ்சம் மறப்பதில்லை படம்தான். கல்யாண்குமார், தேவிகா, நாகேஷ், நம்பியார் மற்றும் மனோரமா நடித்திருந்தனர்.

  அந்த 7 நாட்கள்

  அந்த 7 நாட்கள்

  1981ம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் தான் அந்த 7 நாட்கள். என் காதலி உங்கள் மனைவியாகலாம், ஆனால் உங்கள் மனைவி என் காதலி ஆக முடியாது என்ற ஒருவரிதான் படத்தின் கதை. நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் எல்லாம் கலந்த கலவையாக பெண்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூலில் சக்கைபோடு போட்டது.

  புதுக்கவிதை

  புதுக்கவிதை

  தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்களில் இதுவும் ஒன்று. 1982ம் ஆண்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த புதுக் கவிதை, தலைப்பைப் போலவே புதுமையான கதையைக் கொண்டது. ரஜினி நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நாயகிக்கு வேறு திருமணம் ஆகிவிடும், ஒரு விபத்தில் நாயகியின் கணவன் இறந்து போக காதலனான ரஜினி நாயகியை மீண்டும் கரம் பிடிப்பார். விதவை மறுமணம் என்ற கருத்தை துணிச்சலாகச் சொன்ன மிகச் சிறந்த படம். எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார்.

  முதல் மரியாதை

  முதல் மரியாதை

  1985ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் ஒரு முதியவருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சொன்ன இயக்குநர் பாரதிராஜாவின் படைப்பு முதல் மரியாதை. சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். துளிகூட விரசமின்றி காதலைச் சொன்ன விதத்தில், படம் இன்றளவும் பேசப்படுகிறது. இளையராஜா இசையில் உருவான அனைத்துப் பாடல்களும் அத்தனை இனிமையானவை.

  கேளடி கண்மணி

  கேளடி கண்மணி

  1990 ம் ஆண்டு வசந்தின் இயக்கத்தில் வெளிவந்த படம் கேளடி கண்மணி. மனைவியை இழந்த எஸ்.பி.பி ராதிகாவை விரும்ப, இவர்கள் இருவரையும் இணைய விடாமல் எஸ்.பி.பியின் மகள் அஞ்சு தடுக்கிறாள். பின்பு வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிய பின் இருவரையும் சேர்த்து வைப்பாள் மகள் அஞ்சு.பாடகர் இசைஞானி இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட்டடித்தன.

  குணா

  குணா

  1991 ம் ஆண்டில் கமல் மனநிலை சரியில்லாதவராக நடித்திருந்த படம் குணா. மனநிலை சரியில்லாத கமல் நாயகியைக் கடத்தி வந்து காதலை யாசிப்பார். முடிவில் காதல் வென்றதா என்பதை உருக்கமாகக் காட்டியிருப்பார்கள். காதல் கொண்டேன், மைனா போன்ற படங்களுக்கு முன்னோடி இந்த குணாதான். இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்ற பாடல் இன்றளவும் காதலர்களின் தேசிய கீதமாக விளங்குகிறது.

  காதல் கோட்டை

  காதல் கோட்டை

  1996 ம் ஆண்டில் இயக்குநர் அகத்தியன் இயக்கி வெளிவந்த காதல் கோட்டை திரைப்படம், தமிழில் வெளிவந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. சேசிய விருது பெற்ற இந்தப் படத்தில், நேரில் பார்த்துக் கொள்ளாமல் கடிதம் மூலம் காதலை வளர்க்கும் ஜோடிகளாக அஜித்தும்- தேவயானியும் நடித்திருந்தனர். அகத்தியன் இயக்கிய இந்தப் படம் அன்றைய ட்ரென்ட் செட்டராக அமைந்தது.

  அலைபாயுதே

  அலைபாயுதே

  மணிரத்னம் இயக்கத்தில் 2௦௦௦ ல் வெளிவந்த அலைபாயுதே, காதலர்கள் மத்தியில் தனியிடம் பெற்றது. வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் இளஞ்ஜோடிகளாக வாழ்ந்திருந்தனர் மாதவனும்- ஷாலினியும். காதலின் அடுத்த பரிமாணத்தை தமிழ் சினிமாவில் கொண்டுவந்த படம் இது என போற்றப்பட்டது. ரஹ்மானின் இசை படத்துக்கு முக்கிய பலமாக இருந்தது.

  காதல்

  காதல்

  2004 ம் ஆண்டில் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காதல். சாதாரண பைக் மெக்கானிக் பரத்தை விரட்டி விரட்டிக் காதலிப்பார் சந்தியா, வீட்டிற்கு தெரியாமல் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வார்கள். சந்தியாவின் அப்பா இருவரையும் பிரித்து வேறொரு நபரை தன் மகளுக்கு மணமுடிக்கிறார். காதலால் பைத்தியமாகி அலையும் பரத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிப்பார்கள் சந்தியாவும் அவர் கணவரும். அதுவரை திரையில் பதிவு செய்யாத புதிய காதலாக அந்தப் படம் பார்க்கப்பட்டது.

  ஆதலால் காதல் செய்வீர்

  ஆதலால் காதல் செய்வீர்

  2013 ல் இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வெளிவந்த இந்தத் திரைப்படம், இன்றைக்கு காதல் என்ற பெயரில் இளைஞர்கள் எப்படி வழிதவறி நிற்கிறார்கள் என்பதை பொட்டில் அடித்ததுபோன்று வெளிப்படுத்தியது.

  அவசர அவசரமாகக் காதலில் விழுந்து, கர்ப்பமாகி முடிவில் குழந்தையை அனாதையாக்கி விட்டு ஆளுக்கொரு திருமணம் செய்து கொள்ளும் கதை மாந்தர்கள். ஆதியில் காதல் எப்படி ஆத்மார்த்தமாக ஆரம்பித்து, இன்று வெறும் உடற்கவர்ச்சியில் வந்து நிற்கிறது என்பதை அழுத்தமாகக் காட்டிய படம். இளையோருக்கு ஒரு பாடம்.

  English summary
  These are different love stories from Tamil cinema . Love Is Whether judged by hankies used, sighs heaved, or pulses quickened, a truly fine romantic movie can burn its way into generations of hearts. Love in its various forms acts as a major facilitator of interpersonal relationshipand, owing to its central psychological importance, is one of the most common themes in the creative arts.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more