»   »  பிறழ் உறவுக் கதைகளில் அப்படி என்ன இருக்கிறது ? - நூல்வேலியை முன்வைத்து...

பிறழ் உறவுக் கதைகளில் அப்படி என்ன இருக்கிறது ? - நூல்வேலியை முன்வைத்து...

Posted By:
Subscribe to Oneindia Tamil
அபூர்வ ராகங்கள் தெரியும்... நூல்வேலி தெரியுமா?- வீடியோ

- கவிஞர் மகுடேசுவரன்

பிறழ் உறவுக் கதைகளை எடுத்தாண்ட படங்களைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' தவறாது இடம்பெற்றுவிடும். துரையின் 'பசி' திரைப்படம்கூட ஏறத்தாழ அவ்வகைதான். கணவனைப் பிரிந்து வாடும் தன் தாய், காமுகன் ஒருவனால் ஏமாற்றப்பட்டுக் கருவுறும்போது, அந்தக் குழந்தையைத் தனக்குப் பிறந்ததாக ஊராரை நம்பவைக்கும் மகளைப் பற்றிய கதை. 'அழகன்' திரைப்படத்தில் மகள் வயதொத்த சிறுபெண் மூத்த அகவையடைந்த நாயகனை ஒருதலையாய்க் காதலிப்பாள். தன் மகன் காதலிக்கும் பெண்ணின் விதவைத் தாயைத் தானே திருமணம் செய்துகொண்டு மகனின் காதலுக்குத் தடைபோடும் தந்தையை 'வானமே எல்லை'யில் பார்க்கலாம். கணவனைப் பிரிந்து வந்தவளும் மனைவியைப் பிரிந்து வந்தவனும் 'புதுப்புது அர்த்தங்களில்' சேர்ந்து திரிவர். திருமணமான பாடகர் ஜேகேபி, சிந்து என்னும் இளம்பெண் மீது காதலுறுவதுதான் சிந்து பைரவி. தமக்கையைப் பொருட்பெண்ணாய்க் கண்டவன் தங்கையைப் பெண்பார்க்க வரும் காட்சி 'அந்தரங்கம்' திரைப்படத்தில் இடம்பெறும். 'தப்புத் தாளங்களில்' கணிகை வாழ்விலிருந்து வெளியேறித் திருந்தி வாழும் பெண்ணின் பழைய வாழ்க்கையை அறிந்தவன் சுற்றி வந்து துன்புறுத்துவான். தன் காதலன் நீரில் மூழ்கி இறக்கும்போது காப்பாற்றாதவன் தன்னை அடையும் வேட்கையில் உள்ளான் என்பதை அறிந்து அவனுடைய தந்தையை மணப்பவள் 'மூன்று முடிச்சு' நாயகி.

Tamil cinema and incestuous relationship stories

இவ்வாறு பிறழ் உறவுக் கதைகளில் ஒரு முடிச்சைப் போட்டு அதை முழு நீளத் திரைக்கதையாய் மாற்றி விறுவிறுப்பு குன்றாமல் இயக்கியவர் கே. பாலசந்தர். அவ்வகைமைத் திரைப்படங்களில் 'நூல்வேலி' என்னும் படத்தைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். உறவுக்கும் உறவின்மைக்கும் இடையில் இருப்பது இரும்புக்கோட்டையோ பேரகழியோ இல்லை. தொட்டால் அறுந்து விழும் நூல் வேலிதான். அதற்குள் இணங்கி வாழ்வதும் அதையே பாதுகாப்பாய்க் கருதிக் காலந்தள்ளுவதும் அதை அறுத்து வெளியேறுவதும் நம் தேர்வுதான். நூல்வேலி திரைப்படத்தில் பாலசந்தர் கூற வருவது அதைத்தான்.

Tamil cinema and incestuous relationship stories

இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படிக்கும் என் நண்பர் ஒரு கேள்வியைக் கேட்டார். "ஏன் நேர்வழிக் கதைகள் யாரையும் ஈர்க்கவில்லை? உறவிலோ நடத்தையிலோ நடவடிக்கையிலோ ஏதேனும் ஒரு பிறழ்ச்சிக்கூறு தென்பட்டால் அதனை ஏன் இறுக்கிப் பிடித்துக்கொள்கிறீர்கள்? கதைகளும் இலக்கியங்களும் திரைப்படங்களும் நேர்வழியில் நடப்போரையும் இயல்பான அமைதியான வாழ்க்கை வாழ்வோரையும் ஏன் கண்டுகொள்வதில்லை? உங்கள் ஆர்வமும் அக்கறையும் இத்தகைய நோய்க் கூறுகளிலேயே சுற்றித் திரிவது ஏன்?" என்பது அன்னாரின் கேள்வி. நல்ல கேள்விதான்.

Tamil cinema and incestuous relationship stories

நல்லபடியாகப் பிறந்து, நல்லபடியாக வளர்ந்து, நல்லபடியாக வாழ்ந்து, நல்லபடியாக இறந்தான். இதை எழுதத்தான் எல்லாப் படைப்பாளர்க்கும் விருப்பம். ஆனால், இந்தச் சொற்றொடர் யாரேனும் ஒருவர்க்காவது பொருந்துமா? அரண்மனையிலேயே பிறந்திருந்தாலும் சித்தார்த்தனின் பாதை கல்லும் முள்ளும்தான். கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்ட அருந்தவப்புதல்வனே என்றாலும் இராமனின் வாழ்க்கை இனிமையாய் இருக்கவில்லை. சீதையைப்போல் ஒரு நல்லாள் இல்லை எனினும் அவள் உதிர்க்காத கண்ணீரா? ஆக, ஒரு கலைப்படைப்பில் சீர்மிகு தன்மைகளையுடையவர்களே தலையாய பாத்திரங்கள் ஆகிறார்கள். அப்படியிருந்தும்கூட அவர்கள் அடைகின்ற துயர்களுக்கு அளவில்லை. எந்நிலையிலும் அவர்கள் துன்பத்திற்கு ஆளாகத் தகாதவர்கள்தாம். ஏதோ ஒரு நிலையில் அவர்களை எல்லாத் துன்பங்களும் இலக்கு வைத்துத் தாக்குகின்றன. இது ஏன் எப்படி எதனால் எவ்விடத்தில் என்பதை ஆராய்வதுதான் ஒரு படைப்பாளியின் நோக்கம். அதற்கு வாய்ப்பாக அத்தகைய வாழ்க்கைக் கோணல்களால் நெறி மாறியவர்களைத் தன் பாத்திரங்களாக ஆக்கிக்கொள்கிறான். அவ்விடத்தில் படைப்பாளியின் நோக்கம் தீர்ப்பு கூறுவதன்று. இவை நேர்ந்தன, இவற்றிலிருந்து நாம் வகுத்துக்கொள்ள வேண்டிய நெறிகள் என்னென்ன என்று உங்கள் தரப்புக்கே விட்டுவிடுவதுதான் நோக்கம். ஒரு வாழ்க்கைக்கு வெளியேயிருந்து அவ்வாழ்க்கையைப் பற்றிய பட்டறிவைப் பெற்றுவிடுவதுதான் அவற்றால் நாமடையும் பயன். உணர்ச்சிகளைப் புறந்தள்ளி வாழ்வதைப் பற்றி யாரேனும் வகுப்பெடுத்தால் அங்கே கலைஞனுக்கு வேலையில்லை.

Tamil cinema and incestuous relationship stories

நூல்வேலி படத்தின் கதை என்ன ? முன்னாள் நடிகை ஸ்ரீமதியின் பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறுகிறார்கள் வித்யா - பாபு குடும்பத்தினர். வித்யா புகழ்பெற்ற எழுத்தாளர். பாபு கட்டடக் கலைத்திட்டப் பொறிஞர். அவர்களுக்குப் பள்ளி செல்லும் சிறுமியாய் ஒரு மகள். நடிகை ஸ்ரீமதி ஓர் அரசியல்வாதியின் முன்னாள் நாயகியாய் இருந்தவள். ஸ்ரீமதிக்கும் அரசியல்வாதிக்கும் பிறந்தவள் பேபி. துடுக்கும் மிடுக்கும் குறும்பும் மிக்கவள். பேபியின் குறும்புகள் கலகலப்பாகின்றன. அடுத்தடுத்த இரு வீட்டாரும் பழகிக் கலந்து வாழ்கின்றனர்.

Tamil cinema and incestuous relationship stories

இந்நிலையில் ஸ்ரீமதி இறந்துவிட, மகள் பேபிக்கு உறவுகள் யாருமில்லா நிலை. பாபும் வித்யாவும் அரசியல்வாதியிடம் பேபியைச் சேர்ப்பிக்க முயல, அவர் 'நூறோ இருநூறோ' தருவதாகச் சொல்கிறார். சரி, பேபியை நாமே தத்தெடுத்துக்கொள்வது என்று வித்யா முடிவெடுக்கிறாள். அதைப் பாபு ஏற்றுக்கொள்கிறான். பேபியைக் கல்லூரியில் சேர்க்கின்றனர். அடைமழை நாளொன்றில் நனைந்தபடியே கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வருகிறாள் பேபி. அவள் உடைமாற்றுவதைக் காணும் பாபு அவளுடைய இளமை அழகில் தன்னிலை இழந்தவளாகிறான். இருவரும் உடல் கலக்கின்றனர். அந்நேரத்தில் அங்கே வரும் வித்யா இருவரையும் பார்த்துவிடுகிறார். இப்போது ஒருவரையொருவர் வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் மருகிக் கிடக்கின்றனர்.

Tamil cinema and incestuous relationship stories

நடந்தவற்றை அறிந்திருந்தும் பேபியை மணந்துகொள்ள வித்யாவின் தம்பி வேண்டுகிறான். வித்யாவின் தம்பி ஒரு மருத்துவன். முன்பே பேபியைக் காதலித்தவன். தான் கருவுற்றிருப்பதால் அவனுடைய கோரிக்கையைப் பேபி ஏற்கவில்லை. வித்யா தன் கணவனை விட்டுப் பிரிந்து தந்தை வீட்டுக்குச் சென்று விடுகிறாள். பேபிக்குக் குழந்தை பிறந்ததும் அவளும் வெளியேறி வேலை பார்த்துப் பிழைக்கிறாள். பேபியின் குழந்தைக்கு வித்யாவின் தம்பியே மருத்துவம் பார்க்கிறான். அவர்கள் பழையபடி ஒற்றுமையாய் வாழ்ந்து மகிழ்வதற்கு இடமே இல்லையா? அதற்கான முடிவையும் பேபியே எடுக்கிறாள். எல்லாரையும் ஒரு கட்டடத்தின் ஒன்பதாம் தளத்திற்கு விருந்திற்கு அழைக்கிறாள். பாபு - வித்யா இருவரையும் பொறுத்தருளல் கேட்க வைத்து, தன் குழந்தையை வித்யாவின் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு அக்கட்டடத்திலிருந்து கீழே குதித்துவிடுகிறாள். பேபியின் இறப்பு எல்லாவற்றுக்கும் தீர்வாகிறது.

வளர்ப்பு மகளாய் ஏற்கப்பட்டவள் குடும்பத்தளைக்குள் அடக்கி வீழ்த்தப்படுவதைப் பேசிய வகையில் இப்படம் பொருட்படுத்தத்தக்கதுதான். புதுமையை விரும்பும் எழுத்தாளர்தான் எனினும் அவளும் ஒரு பெண்ணே. அவளும் இன்னொரு பெண்ணுக்கு எதிராகவே நடந்துகொண்டாள். அதைத் தவிர்க்க முடியவில்லை. ஆண் பெண் இணைவானது அவ்வுறவுச் சங்கிலியில் தொடர்புடைய எல்லாரையும் வதைக்கும் நினைவாக மாறுவதை இப்படம் எடுத்துக் கூற முயன்றது. பாலசந்தரின் அம்முயற்சி தோல்வியுற்றது என்றே சொல்ல வேண்டும். 1979ஆம் ஆண்டு தெலுங்கு தமிழ் ஆகிய இருமொழிகளில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இப்படம் அன்றைய பார்வையாளர்களை எத்தகைய அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கும் என்பதையும் கணிக்க முடிகிறது. ஐவி சசி இயக்கிய 'ஆ நிமிசம்' என்னும் மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பே இப்படம்.

English summary
Magudeswaran's article on K Balachander's 70's classic Nool Veli movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X