»   »  2015: ஏராள நம்பிக்கை + கனவுகளுடன் தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' யான புதுமுகங்கள்!

2015: ஏராள நம்பிக்கை + கனவுகளுடன் தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' யான புதுமுகங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடம் தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுகங்கள் நாயகன், நாயகியாக அறிமுகமாகி, அவர்களில் ஒருசிலர் வெற்றிக்கொடியையும் நாட்டியிருக்கின்றனர்.

முன்னணி நடிகர், நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இவர்களின் படங்கள் வசூலில் சாதனை படைத்து கோலிவுட்டினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த வருடம் அறிமுகமான நடிகர், நடிகையர் அவர்கள் நடித்த படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் ஜி.வி.பிரகாஷ் இந்த வருடம் டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அறிமுகமான படம் பென்சில் என்றாலும் டார்லிங் முந்திக்கொண்டு விட்டது. அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படமும் வெற்றி பெற்றதில் தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக மாறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லி போன்ற படங்களில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் இந்த வருடம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த பேய் படங்களை தனது டார்லிங் படத்தின் மூலம் தொடங்கி வைத்தவர் என்ற பெருமையையும் ஜி.வி.பிரகாஷ் கைப்பற்றி இருக்கிறார்.

சண்முகப் பாண்டியன்

சண்முகப் பாண்டியன்

கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். சகாப்தம் பெரிதும் கைகொடுக்காத நிலையில் தற்போது தனது தந்தை விஜயகாந்த்துடன் இணைந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழன் என்று சொல் சண்முகப் பாண்டியனுக்கு கைகொடுக்குமா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.

விஜய் யேசுதாஸ்

விஜய் யேசுதாஸ்

பாடகர் விஜய் யேசுதாஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் மூலம் நடிகராக மாறியிருக்கிறார். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அதிரடி காட்டியிருந்தார் விஜய் யேசுதாஸ். கிரிஷ், ஹரிஷ் ராகவேந்தர் போன்ற பாடகர்களின் வரிசையில் நடிகராக மாறியிருக்கும் விஜய் யேசுதாஸ் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தவிருக்கிறார். விரைவில் இவர் நாயகனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமான இது என்ன மாயம் திரைப்படம் வெளியாவதற்குள் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி அனைவரையும் ஆச்சரியப் படுத்தினார் கீர்த்தி சுரேஷ். தற்போது சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினிமுருகன் பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து பாபி சிம்ஹாவின் பாம்புச்சட்டை, தனுஷின் புதிய படம் ஆகியவற்றில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் சரியாக ஓடாவிட்டாலும் கூட புதிய படங்கள் பலவற்றில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தீபா சன்னிதி

தீபா சன்னிதி

சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தீபா சன்னிதி. கன்னடப் படங்களில் நடித்து வந்த இவரை தனது எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் சித்தார்த். கன்னடத்தில் ஹிட்டடித்த இப்படம் தமிழில் சரியாகப் போகவில்லை. தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து யட்சன் படத்தில் நடித்தார். யட்சனும் இவருக்கு கைகொடுக்காத நிலையில் அடுத்து ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார் தீபா சன்னிதி.

அமைரா தஸ்தூர்

அமைரா தஸ்தூர்

தனுஷ் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற அனேகன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பெரிய வெற்றிப்படம் என்ற அளவில் இல்லாவிடினும் ஓரளவு வெற்றிகரமாக ஓடிய இப்படத்திற்குப் பின் வேறு தமிழ்ப் படங்கள் எதிலும் இவர் நடிக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அமைரா தஸ்தூர்.

ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அடுத்து இவர் நடித்த பாயும்புலி பெரிதாக கைகொடுக்கவில்லை. தற்போது அருள்நிதியின் ஆறாது சினம், சட்டம் மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்.

இவர்களில் எத்தனை பேர் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
In 2015 The Following Actor, Actress G.V.Prakash, Shanmuga Pandian, Vijay Yesudas, Aishwarya Dutta,Keerthy Suresh, Amyra Dastur and Deepa Sannidhi Introducing Debutants in Tamil Cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil