twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ. 5 கோடி கேட்டு கடத்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர் மகன் மீட்பு: கார் டிரைவரிடம் தீவிர விசாரணை

    By Siva
    |

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கடத்தலில் கார் டிரைவருக்கு தொடர்புள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி பிரையன்ட் நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சினிமா படத்தயாரிப்பளரான இவர் தூத்துக்குடியில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பிளவர் தூத்துக்குடி நகாட்சியில் 16வது வார்டு திமுக கவுன்சிலர் ஆவார். இவர்களுக்கு லட்சணம் (10), உமா(8) என்ற 2 மகள்களும், விஷால் உமேஷ்(4) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் மகள்கள் தூத்துக்குடி விஇ ரோட்டிலுள்ள பள்ளியில் 5,3 வகுப்புகள் படித்து வருகின்றனர். மகன் உமேஷ் மில்லர்புரத்தில் உள்ள பள்ளியில் எல்ஜேசி படித்து வந்தான். இவர்கள் 3 பேரையும் கார் டிரைவான தூத்துக்குடி கே.வி.கே. நகரைச் சேர்ந்த கருப்பசாமி தான் தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வார். அதே போல் நேற்று முன்தினமும் அவர்களை பளளிக்கு அழைத்து சென்றார்.

    முதலில் இரு பெண் குழந்தைகளையும் பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு பிறகு உமேஷை மட்டும் அழைத்து சென்றார். இந்நிலையில் சிறுவனின் தாய் பிளவரின் செல்போனுக்கு கார் டிரைவரின் செல்போனில் இருந்து மிஸ்டுகால் வந்தது. இதை தொடர்ந்து டிரைவருக்கு கவுன்சிலர் பிளவர் போன் செய்தார். அப்போது அந்த போனில் வேறொரு நபர் பேசினார். அந்த நபர் சிறுவன் உமேஷை, கார் டிரைவருடன் கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர் பிளவர் தனது கணவருடன் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார்.

    மறுபடியும் பேசிய கடத்தல்காரன் ரூ. 75 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க செயின்களை கொண்டு வந்து புதுக்கோட்டையில் பாலம் அருகே போட்டிவிட்டுச் செல்லுமாறு பிளவரிடம் கூறினான். போலீசின் அறிவுரைப் படி கடத்தல்காரன் கேட்டபடி ரொக்கமும், நகையும் புதுக்கோட்டை பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு போட்டனர். ஆனால் அதை எடுக்க கடத்தல்காரன் வரவில்லை.

    இரவை 10. 30 மணிக்கு மீண்டும் பேசிய கடத்தல்காரன் எதற்காக போலீசுக்கு போனீர்கள்? உங்கள் மகன் உயிருடன் வேண்டாமா? எனக்கு ரூ. 5 கோடி தான் வேண்டும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.

    போலீசார் செல்போன் டவர் மூலம் கடத்தல்காரன் தூத்துக்குடி, புதுக்கோட்டை, வாகைகுளம் பகுதியைத் தான் சுற்றி வருகிறான் என்பதைக் கண்டு பிடித்தனர். அந்த பகுதிகளில் தீவிரமாகத் தேடி வந்தனர். கடத்தல்காரனை முடிந்த வரையில் உயிருடன் பிடிக்கவும், இல்லையென்றால் சுட்டுப்பிடிக்கவும் முடிவு செய்தனர்.

    இந்நிலையில் சிறுவனும், கார் டிரைவர் கருப்பசாமியும் நேற்றிரவு 8.45 மணி அளவில் தென்பாகம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் சிறுவன் கூறியதும், டிரைவர் தெரிவித்த விவரங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.

    இதையடுத்து சிறுவன் கூறியதும், டிரைவர் கூறியதும் உண்மைதானா என்று விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் டிரைவருக்கு பங்கு உள்ளதா என்று விசாரணை நடத்தப்படுகிறது.

    சிறுவன் உமேஷ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். சிறுவன் சோர்வாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் உடல்நிலை சரியான பிறகு அவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கார் டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    
 Tuticorin-based cinema producer's 4-year old son Umesh was kidnapped for Rs. 5 crore. The boy is rescued and handed over to his parents. Police are investigating the car driver to know the truth behind the kidnap drama.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X