»   »  தமிழ் ஹீரோக்கள் VS தெலுங்கு ஹீரோக்கள்… தொடங்கிய வரப்பு தகராறு!

தமிழ் ஹீரோக்கள் VS தெலுங்கு ஹீரோக்கள்… தொடங்கிய வரப்பு தகராறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாய்ப்பு கிடைக்கும்போதே முடிந்த அளவுக்கு சம்பாதித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துடிக்கும் தலைமுறை இது. தமிழ் சினிமா இப்போது ஹீரோக்கள் பஞ்சத்தால் தவிக்கிறது (மோடியின் அறிவிப்பால் தமிழ் சினிமாவே பஞ்சத்தால் தவிப்பது தனிக்கதை). அதனை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் இடம்பிடிக்க வரிசையாக படையெடுக்கின்றனர் தெலுங்கு ஹீரோக்கள். அதேபோல் தமிழில் இருந்து தெலுங்கு நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இங்கிருக்கும் ஹீரோக்கள்.

தள்ளாடும் தமிழ் சினிமா

தள்ளாடும் தமிழ் சினிமா

சில ஆண்டுகளாக ரொம்பவே தடுமாறிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. அதற்கு முக்கிய காரணம் தியேட்டர்கள் எண்ணிக்கை குறைந்ததே. மூவாயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்கள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது ஆயிரம் தியேட்டர்கள் கூட இல்லை. சாட்டிலைட்டை நம்பி தியேட்டர்கள் அழிவதை வேடிக்கை பார்த்த தமிழ் சினிமாக்காரர்கள் சேனல்கள் கைவிட்டதால் தவிக்கிறார்கள். முந்நூறு படங்களுக்கு மேல் ரிலீஸ் பண்ண முடியாமல் முடங்கி கிடக்கின்றன. ரிலீஸ் ஆகும் படங்கள் எல்லாம் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றன. ஹீரோக்கள் பிடியில் தமிழ் சினிமா போனதன் விளைவு இது. ஹீரோக்கள் முடிவு செய்வதுதான் இங்கே சட்டம். அவர்கள் தான் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோயின் உட்பட அனைவரையும் முடிவு செய்கிறார்கள். மார்க்கெட் உள்ள நான்கைந்து ஹீரோக்களை தொங்கியபடியே கதறிக்கொண்டே இருக்கிறது தமிழ் சினிமா.

ஆசைகாட்டும் தெலுங்கு சினிமா

ஆசைகாட்டும் தெலுங்கு சினிமா

தெலுங்கு சினிமாவிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். ஹீரோக்கள் தான் எல்லாமே. முக்கியமாக இரண்டு குடும்பத்து வாரிசுகள் தான் தெலுங்கு சினிமாவை ஆக்ரமித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா அளவுக்கு மோசமான நிலையில் தெலுங்கு சினிமா இல்லை. எந்த படம் வந்தாலும் மினிமம் கேரண்டி வசூல் உண்டு. காரணம் மூவாயிரத்து ஐநூறு கொண்ட தியேட்டர் எண்ணிக்கை. அதில் பெரும்பாலும் பி. சி எனப்படும் தியேட்டர்கள் தான். இந்த தியேட்டர்களில் ஐம்பது ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை கிடையாது. எனவே பாமர மக்கள் சினிமாவை ஆதரிக்கின்றனர். தமிழ் சினிமா போல பரிட்சார்த்த முயற்சிகள் எதுவும் பண்ணுவதில்லை. ஆனால் வருகிற ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு மசாலா சேர்த்து சமைக்கின்றனர்.

மகேஷ்பாபுவும் அல்லு அர்ஜுனும்

மகேஷ்பாபுவும் அல்லு அர்ஜுனும்

நாகார்ஜுனா சென்ற ஆண்டு தமிழ், தெலுங்கு இருமொழிகளில் உருவான தோழா படத்தில் நடித்தார். இப்போது மகேஷ் பாபுவும் இங்கே களம் இறங்குகிறார். விஜய் ரசிகர்களுக்கு மகேஷ் பாபுவின் அறிமுகம் தேவையில்லை. கில்லி முதல் போக்கிரி வரை விஜய் நடித்த அத்தனை ஹிட் படங்களுமே மகேஷ்பாபு நடித்தவை தான். விஜய்யின் மேனரிஸமே மகேஷ்பாபுவின் ஜெராக்ஸ் தான். நம் படங்களை ரீமேக் செய்து விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். அப்படி ஏன் விட வேண்டும்? நாமே அதனை தமிழில் பண்ணலாமே? இந்த யோசனை பல ஆண்டுகளாக இருந்து வந்தது மகேஷ்பாபுவுக்கு. அதற்கு தூபம் போட்டது முருகதாஸ். இயக்குநர் முருகதாஸ் தான் அஜித்துக்கு தல பட்டம் கொடுத்தவர். தடுமாறிக்கொண்டிருந்த விஜய்க்கு துப்பாக்கி, கத்தி என ஹிட்களை கொடுத்தவர். ஆனால் தல, தளபதி இருவருமே அவரை காக்க வைக்க கடுப்பான முருகதாஸ் மகேஷ்பாபுவை இப்போது தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தில் எஸ்ஜே.சூர்யா மிரட்டல் வில்லன். இரு மொழிகள் என்றாலும் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தந்து காட்சிகள் வைக்கப்படுகின்றன. மகேஷ்பாபுவின் தமிழ் எண்ட்ரியை பார்த்த அல்லு அர்ஜுன் இப்போது லிங்குசாமி இயக்கத்தில் தமிழுக்கு வருகிறார். தெலுங்கை விட தமிழில் ஹீரோக்களுக்கு சம்பளமும் அதிகம். மதிப்பு மரியாதையும் அதிகம்.

சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி

சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி

தெலுங்கு ஹீரோக்களாவது இப்போது தான் தமிழைக் குறி வைக்கிறார்கள். தமிழ் சினிமா அழிவை நோக்கி செல்ல ஆரம்பித்த உடனேயே சூர்யா, விஷால், கார்த்தி போன்றோர் தெலுங்கு பக்கம் அடிவைக்க தொடங்கி விட்டனர். தங்களது படங்கள் வரிசையாக தெலுங்கில் ரிலீஸ் ஆவதுபோல் பார்த்துக்கொள்ளும் இவர்கள் கதை கேட்கும்போதே இரண்டு மொழிகளுக்கும் ஏற்றாற்போலயே கேட்கிறார்கள். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தவர்கள் விஜய் ஆண்டனியும் சிவகார்த்திகேயனும். விஜய் ஆண்டனி நடித்த பிளாக்பஸ்டர் படமான பிச்சைக்காரன் பிச்சகாடுவாக மூன்று மாதங்கள் கழித்து ரிலீஸானது தெலுங்கில். அங்கேயும் பிளாக்பஸ்டர் தான். ஐம்பது லட்சத்துக்கு போன டப்பிங் உரிமை சம்பாதித்தது மட்டும் முப்பது கோடிகள். இவற்றை பார்த்த சிவகார்த்திகேயன் தனது ரெமோ படத்தை இரண்டு மாதங்கள் கழித்து தெலுங்கில் ரிலீஸ் செய்திருக்கிறார்.

பச்சோந்தி ஹீரோக்கள்

பச்சோந்தி ஹீரோக்கள்

தெலுங்கு ஹீரோக்கள் தமிழுக்கு வந்தாலும் தாய்மொழியை விட்டுக் கொடுப்பதில்லை. தமிழ் ஹீரோக்களோ அப்படியில்லாமல் ஆந்திர பக்கம் போனால் தெலுங்கு ரசிகர்களுக்கு அடிவருடிகளாக மாறிவிடுகின்றனர். உதாரணமாக கார்த்தி பேசியது சர்ச்சையானது. ஹைதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘'எனக்கு தெலுங்கு ரசிகர்களைத் தான் அதிகம் பிடிக்கும். காரணம் அவர்கள் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் நேர்மையானவர்கள்'' என்று சொல்லப்போக அது சர்ச்சையானது.

தமிழ், தெலுங்கு படங்களின் ரீமேக், டப்பிங் உரிமைகளை பார்த்துவரும் வினியோகஸ்தரான ஏஆர்கே.ராஜாராஜனிடம் இதுபற்றி கேட்டோம். ‘'தமிழ் ஹீரோக்கள் தெலுங்கு பக்கம் அதிக ஆர்வம் காட்ட காரணம் பரந்து விரிந்த மார்க்கெட் தான். காஷ்மோரா தெலுங்கில் நன்றாக போனது. பிச்சைக்காரன் வெற்றியால் சைத்தான் படம் டப்பிங் உரிமை 1.75 கோடிக்கு போனது. அதை 3 கோடிக்கு விற்று ஒரு கோடிக்கு மேல் டேபிள் லாபம் பார்த்தார் அந்த வினியோகஸ்தர். நான் படம் முதலே விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவானது. சலீம் படத்தை வெங்கடேஷே ரீமேக் செய்து நடிக்க ஆசைபட்டார். ஆனால் விஜய் ஆண்டனி தரவில்லை. இப்போது எமன் படத்தின் டப்பிங் உரிமை 3 கோடி வரை போயிருக்கிறது. தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு நேரடி படங்களை விட தமிழ் டப்பிங் படங்கள் பிடித்திருக்கிறது. தமிழில் பெரிதாக போகாத இருமுகன் கூட தெலுங்கில் நன்றாக போனது. தெலுங்கை விட தமிழில் கதையும், தொழில்நுட்பமும் நன்றாக இருக்கிறது என்பதால் ரசிக்கிறார்கள்.

ஊர்க்குருவி என்னதான் பறந்தாலும் பருந்து ஆகமுடியாது என்பதைப்போல தெலுங்கு படங்கள் என்றைக்குமே தெலுங்கு படங்கள்தான். தெலுங்கு படங்களுக்கு ஆந்திராவைத் தவிர அமெரிக்காவில் மட்டுமே மார்க்கெட் இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது. தமிழ் கலைஞர்களை போல தெலுங்கு கலைஞர்களை உலக நாடுகளில் பரிச்சயம் இல்லை. தமிழ் மக்கள் உலகம் முழுக்க பரவி இருக்கிறார்கள். இதுதான் தமிழை நோக்கி தெலுங்கு ஹீரோக்கள் வர காரணம். ஹிந்திக்கு அடுத்து தமிழ் தான் பாப்புலாரிட்டியில் பெஸ்ட். ஆனால் தமிழ் ஹீரோக்களை தெலுங்கில் ஏற்றுகொள்வது போல தெலுங்கு ஹீரோக்களை இங்கே ஏற்றுகொள்வது இல்லை. கோடிக்கணக்கில் வாங்கி வெளியிடப்படும் டப்பிங் படங்கள் அந்த அளவுக்கு கலெக்‌ஷன் ஆவதில்லை. நம்ம் மக்கள் தெலுங்கு ஹீரோக்களை தள்ளியே வைக்கிறார்கள்.

இவ்வளவு நடந்தாலும் தெலுங்கு இயக்குநர்கள் தமிழுக்கு வர தயங்குகிறார்கள். காரணம் தமிழில் சம்பளம் மிக மிகக் குறைவு. தெலுங்கில் இயக்குநர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். அதேபோல் ஸ்க்ரிப்ட் எழுத்தாளர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். இங்கே இவர்களை மதிப்பதே இல்லை. தெலுங்கில் வசனம் எழுதுபவர்களே நான்கைந்து கோடிகளை சம்பளம் வாங்குகிறார்கள்'' என்று விளக்கினார்.

தமிழ் நடிகர்களில் விஜயகாந்த் மட்டும் தான் தமிழைத் தவிர வேறு மொழிகளில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தவர், இருப்பவர். ஹீரோயின்களை பற்றி கேட்கவே வேண்டாம். குறுகிய காலம் தான் கேரியர் என்பதால் ஒரே நேரத்தில் எல்லா மொழிகளிலும் நடிக்கிறார்கள். தமிழ் இரண்டாம் பட்சம்தான். நயந்தாராவே சொந்த மொழியான மலையாளத்தில் இருபது லட்சம் சம்பளத்தில் நடிப்பவர், தமிழில் நடிக்க மூன்று கோடி வரை கேட்கிறார்.

தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க ஆசைப்படும் ஹீரோக்கள் முக்கிய பொறுப்பில் இருக்கும்போது தென்னிந்திய நடிகர் சங்கம் எப்படி தமிழ் நடிகர்கள் சங்கமாக பெயர் மாறும் என எதிர்பார்க்க முடியும்?

- ஆர்ஜி

English summary
Here is an article on the clash between Tamil heroes and Telugu heroes

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil