’மிராய்’ டிரைலர் வெளியானது.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் போட்டியில்லை!
ஹைதராபாத்: கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள மிராய் படத்தின் மிரட்டலான டிரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், சூப்பர் ஹீரோ படத்தையே ஆன்மிக டச்சுடன் கொடுத்து அசத்தி வருகிறார் தேஜா சஜ்ஜா.
கடந்த ஆண்டு வெளியான அவர் நடித்த ஹனுமான் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. ஜெய் ஹனுமான் என அதன் 2ம் பாகத்தை ஒரு பக்கம் உருவாக்கி வரும் நிலையில், அதற்கு முன்னதாக மிராய் எனும் படத்திலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் மோதும் என செப்டம்பர் 5 ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மிராய் டிரைலர் வெளியானது: மிராய் படத்தின் டீசரை பார்த்தே இந்திய திரையுலகம் மிரண்டுப்போன நிலையில், தற்போது அதை விட பிரம்மாண்டமான காட்சிகளுடன் டிரைலர் வெளியாகி இருக்கிறது. த்ரேதா யுகத்தில் இருந்த ஆயுதம் தான் மிராய் என்றும் வில்லன் கையில் 9 நூல்கள் கிடைத்து விட்டால் கங்கையே ரத்த வெள்ளமாக மாறும் என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் புராண டச் கலந்த சூப்பர் ஹீரோ படமாக இந்த மிராய் படம் உருவாகி இருக்கிறது.
அம்மாவாக ஸ்ரேயா: 40 பிளஸ் வயதைக் கடந்தாலும் இன்னமும் பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை சொக்க வைத்து வரும் நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் ஹீரோ தேஜா சஜ்ஜாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். ஹனுமான் படத்தில் வரலட்சுமி சரத்குமார் அக்காவாக நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட்டை டச் செய்திருக்கிறார் தேஜா சஜ்ஜா. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா நாயக் நடித்துள்ளார்.வில்லனாக மனோஜ் மஞ்சு நடித்துள்ளார். ஜெயராம், ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இறங்கி ஆடும் டோலிவுட்: பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலே தமிழ் சினிமா தயங்கி நிற்கும் நிலையில், டோலிவுட்டில் லோகா, மிராய் என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ மற்றும் இதிகாச கதையம்சம் கொண்ட படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மதராஸி உடன் மோதல் இல்லை: செப்டம்பர் 5ம் தேதி மிராய் திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியான நிலையில், அதில், படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 12ம் தேதி என குறிப்பிட்டுள்ளனர். இதனால், மதராஸி படத்துடன் மிராய் மோதாது என்பது உறுதியாகி உள்ளது.
அடுத்த 300 கோடி: 30 கோடி பட்ஜெட்டில் உருவான ஹனுமான் திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தில் ஹனுமான் விஷயத்தைக் கொண்டு வந்தது போல இந்த படத்தில், ராமரையே கொண்டு வருகின்றனர். ராமராக யார் நடித்திருக்கிறார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கண்டிப்பாக இந்த படத்தின் பட்ஜெட் அதை விட அதிகம் என்பதால் பெரிய வசூல் அள்ளுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











