தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் நடிகர் தாரகா ரத்னா... பாலய்யா, ஜூனியர் NTR மருத்துவமனைக்கு விசிட்
பெங்களூரு: மறைந்த நடிகரும், ஆந்திர முதலமைச்சருமான என்.டி.ராமராவின் பேரனான தாரகா ரத்னாவும் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர்கள் பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் உறவினரான தாரகா ரத்னா, சித்தூர் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்டார்.
தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் நடைபயணம் சென்று கொண்டிருந்த தாரகா ரத்னா மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாரகா ரத்னா உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்.டி. ராமாராவ் பேரன்
தெலுங்கு சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் என்.டி.ஆர் எனப்படும் என்.டி ராமாராவ். தமிழ்நாட்டில் எம்ஜிஆரைப் போல தெலுங்கில் நடிகராக இருந்து ஆந்திராவின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்.டி.ஆர். அவரது பேரன் தாரகா ரத்னாவும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் என்.டி.ஆர் குடும்பத்தில் இருந்து திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில், 'ஒகடோ எண் குராடு' படத்தில் ஹீரோவாக அறிமுகமான தாரகா ரத்னா, தெலுங்கில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார்.

மயங்கி விழுந்த தாரகா ரத்னா
தாரகா ரத்னா நடிகராக மட்டும் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியமான பிரமுகராகவும் காணப்படுகிறார். இந்நிலையில், அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் நடத்திய யுவகலாம் என்ற நடை பயணத்தில் தாரகா ரத்னா கலந்துகொண்டார். தொண்டர்கள், ரசிகர்களுடன் நடை பயணத்தில் பங்கேற்ற தாரக் ரத்னா, திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார். இதனையடுத்து அவர் குப்பத்தில் உள்ள கேசி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் தாரகா?
உடனடியாக முதலுதவி வழங்கப்பட்ட தாரகா ரத்னா, அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தாரகா ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது வால்வுகளில் 90 சதவீதம் அடைப்பு இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரகா தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாரகா ரத்னா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால். இரண்டு நாட்களுக்கு பிறகே அவர் அபாய கட்டத்தை தாண்டுவாரா என்பதை சொல்ல முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர் நேரில் விசிட்
இதனையறிந்த தாரகா ரத்னாவின் மாமாவும் நடிகருமான பாலய்யா பெங்களூரு விரைந்து சென்றார். அதேபோல் முன்னணி நடிகரான ஜூனியர் NTR-ம் பெங்களூருவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாரகா ரத்னாவை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளார். இருவரும் மருத்துவமனை சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர்கள் இருவருமே தாராகா ரத்னாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. 39 வயதே ஆன தாரகா ரத்னா மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், Speedy Recovery Taraka Ratna என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் தாரகா ரத்னா விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











