»   »  திறனாய்வாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் - தைப்பொங்கல்

திறனாய்வாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் - தைப்பொங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

பெண்ணியக் கதையாடல்களை ஓரளவேனும் நிகழ்த்திய திரைப்படங்களைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் 'அவள் அப்படித்தான்' என்ற படத்தைத்தான் அறிவாளிகள் தொடர்ந்து கூறுகின்றனர். அவர்களிடம் 'தைப்பொங்கல்' என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து நான் நினைவூட்டி வருகிறேன். "அப்படி ஒரு படம் வந்ததா? எங்களுக்குத் தெரியாதே... யாருடைய படம் அது? என்ன கதை?" என்றுதான் கேட்பார்கள்.

தைப்பொங்கல் திரைப்படத்தில் இராதிகா ஏற்று நடித்த 'தமிழ்ச்செல்வி' என்னும் அந்தக் குணவார்ப்பு மிகவும் பொருட்படுத்தத்தக்கது. சொல்லி வைத்ததுபோல, அந்தப் பாத்திரத்தை எவரும் நினைவில் கொள்ளவில்லை. யாரும் எங்கும் மேற்கோள் காட்டவில்லை. உள்ளடுக்குகள் மிகுந்திருந்த அப்படத்தை நம் மக்கள் தோல்வியுறச் செய்தார்கள். ஆனால், திரைப்படக் கதையாடல்களில் ஆழங்கால் பட்ட பண்டிதர்களின் பார்வைக்குக்கூட அப்படம் தட்டுப்படாததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தைப்பொங்கல் படத்தின் கதை முடிச்சுகளை அறிந்தால் அது எப்படிப்பட்ட படம் என்பது தெரியும்.

Thai Pongal, an underrated progressive movie

அந்தச் சிற்றூரில் தமிழ்ச்செல்வியும் மேரியும் தோழியர். மேரியின் கிறித்தவத் தன்மையின்மீது ஈர்ப்புகொண்ட தமிழ்ச்செல்வி மாதாகோவிலுக்குச் செல்பவள். குங்குமம் இடாத வெற்று நெற்றியோடு துணிந்து இருப்பவள். அவ்வூர்க் கோவில் அர்ச்சகர் அவளை வேண்டிக்கொண்டும்கூட, "எனக்கு இது பிடிச்சிருக்கு..," என்று கூறிவிடுகிறாள். தமிழ்ச்செல்வியின் இரண்டாம் அகவையிலேயே அவள் தந்தை இறந்துவிட்டார். வைரம் என்னும் முரட்டு வாலிபனின் தாலிகட்டாத மனைவியாக தமிழ்ச்செல்வியின் தாய் வாழ்ந்து வருபவள். இவர்களுடைய தகாத உறவு தமிழ்ச்செல்விக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. மேரியின் அண்ணன் சூசைக்குத் தமிழ்ச்செல்விமீது ஒருதலைக் காதல். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாதவன். தட்டச்சு பயிலச் சென்ற இடத்தில் அங்கிருக்கும் பயிற்றுநன் சுதாகர் தமிழ்ச்செல்வியைக் காதலிப்பதாகக் கூறுகிறான். தமிழ்ச்செல்வியும் அவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். கோவிலில் அவன் தமிழ்ச்செல்விக்குக் குங்குமம் வைக்கிறான். அவ்வூர்ப் பெரிய செல்வரின் ஒரே மகனான சுதாகர் எதற்கெடுத்தெடுத்தாலும் அஞ்சுபவன். தான் படித்த பட்டத்திற்கேற்ப ஒரு வங்கி வேலைக்கு மனுப்போட்டுக்கொண்டிருக்கிறான்.

அதே ஊரில் திருமணத் தரகு வேலை பார்க்கும் கையாலாகாத தந்தையோடும் தம்பி இராஜாவோடும் இருப்பவள் சொர்ணா. ஊரார்க்கெல்லாம் மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைக்கும் தரகரான தன் தகப்பனால் தனது திருமணத்துக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கின்ற குறை சொர்ணாவுக்கு. சிறுவன் இராஜாதான் தமிழ்ச்செல்விக்குத் தோழன். ஓடையில் தண்ணீர்க் குடம் நீரோட்டத்தில் அடித்துச் சென்றுவிட்டால் மூழ்கி எடுத்துக்கொடுப்பவன். சொர்ணா அன்றாடம் பணிக்குச் சென்று திரும்புவதில் அவருடைய தந்தைக்கு ஐயத்தோடு கூடிய மனக்குறை. ஆனால், அவரால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.

மேரிக்குத் திருமணம் நிச்சயமாகிறது. தமிழ்ச்செல்வியைவிட இரண்டாண்டுகள் இளையவளான மேரிக்குத் திருமணமாவதைக் குறிப்பிட்டு, "அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டி வைங்க...," என்று தமிழ்ச்செல்வியின் தாய் வைரத்திடம் வேண்டுகிறாள். "உன் மக ரோட்டில ஒருத்தன் விடாம கைநீட்டிடறா... பொண்ணு பொண்ணா இருந்தா இந்நேரம் எத்தனையோ மாப்பிள்ளைக வந்திருப்பானுக... அவளைக் கட்டிக்கிறதா இருந்தா நான்தான் கட்டிக்கணும்...," என்கிறான் வைரம். தமிழ்ச்செல்வியின் தாய் அதிர்ந்து நிற்க, இவ்வுரையாடலைத் தமிழ்ச்செல்வியே கேட்டுவிடுகிறாள்.

சுதாகரிடம் சென்று, "இனி என் வீட்டில் சற்றும் இருக்க முடியாது... எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளலாம்... என்னை அழைத்துச் சென்று கூலிக்குழைத்தாவது காப்பாற்று...," என்கிறாள். மேரியின் திருமணத்திற்குச் செல்வதாக வீட்டில் கூறிவிடுவதால் மேரி, சூசை செல்லும் மகிழுந்திலேயே நகரத்துக்கு வந்திறங்குகிறாள். தமிழ்ச்செல்வி எடுத்துள்ள முடிவு சூசைக்குத் தெரியும் என்றாலும் கண்ணீரோடு தன்னை அடக்கிக்கொள்கிறான். தொடைநடுங்கியான சுதாகரும் கையில் காசில்லாமல் ஒளிந்து மறைந்து வந்து சேர்கிறான்.

அன்றிரவு ஒரு விடுதியில் அறையெடுத்துத் தங்கிவிட்டு மறுநாள் பதிவுத்திருமணம் செய்துகொள்வது அவர்கள் திட்டம். சுதாகர் தன்னிடம் பணமில்லை என்று கூறியதும் தமிழ்ச்செல்வி தன் தங்க வளையல்களைக் கழற்றித் தருகிறாள். அதை அடகு வைத்துப் பணம்புரட்டி அறையெடுத்துத் தங்குகிறார்கள். அவ்விரவில் அவர்கள் தனித்தனியாகத்தான் படுத்துக்கொள்கிறார்கள். அடுத்த நாள் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்கிறார்கள். அன்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் பதிவாளர் அலுவலகம் பூட்டியிருக்கிறது. மீண்டும் அறைக்குத் திரும்புகிறார்கள். தமிழ்ச்செல்வியோடு அரை மனத்தினனாகத் திரியும் சுதாகர் அன்றிரவு அவள் உறங்கியதும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடுகிறான். விடிந்ததும்தான் தமிழ்ச்செல்விக்கு எல்லாம் விளங்குகிறது.

Thai Pongal, an underrated progressive movie

அந்நேரத்தில் விடுதிக்குள் நுழையும் காவலர்கள் அங்குள்ள பொருட்பெண்டிரைக் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். தமிழ்ச்செல்வியையும் அவ்வாறே கருதி மிரட்டி அவர்கள் அணியில் நிற்கவைக்கின்றனர். விடுதியின் இன்னோர் அறையிலிருந்து வெளிப்படும் சூசை இக்காட்சியைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறான். காவலாய்வாளரிடம் கெஞ்சிப் பேசி அவளை ஊர்க்கு அழைத்து வருகிறேன். "நடந்ததை மறந்து ஊருக்கு வா...," என்பது அவன் வேண்டல்.

வீட்டுக்குள் நுழைந்து தன் தகப்பன் படத்தருகே அமர்ந்து அழும் தமிழ்ச்செல்வியை அவள் தாய் எதுவுமே கேட்பதில்லை. குளம்பி கொடுத்து உபசரிக்கிறாள். "நீ என்மகள். உனக்கு எதிராக எது நடந்தாலும் அதைப் பொறுத்திருக்க மாட்டாய். உனக்கே சரியில்லை என்று பட்டதால்தான் திரும்பி வந்தாய்...," என்று ஆறுதல் கூறுவாள். "நான் ஓடிப்போனதைப் பத்தி வருத்தப்படவேயில்லை.... ஆனால், ஒரு கோழையோடு ஓடிப்போனேனே அதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை...," என்பது தமிழ்ச்செல்வியின் குமுறல்.

தமிழ்ச்செல்விக்குத் மாப்பிள்ளை பார்க்கும்படி சொர்ணாவின் தந்தையிடம் அவள் தாய் கூறுகிறாள். பெண்பார்க்க வரும் மாப்பிள்ளைக்கு சொர்ணாவைப் பிடித்துவிடுவதால் அந்த ஏற்பாடு சொர்ணாவின் திருமணத்தில் முடிகிறது. தன் தலைமுறைப் பெண்கள் மணமாகி வெளியேறிக்கொண்டே இருக்க, தமிழ்ச்செல்வி மேலும் தனியள் ஆகிறாள். "ஏன்மா எனக்குச் செல்வின்னு பேரு வெச்சே ? காலம்பூராவும் செல்வியாகவே இருந்துடுவேன் போலிருக்கே...," என்கிறாள்.

மேரியிடமிருந்து வரும் கடிதம் தன் அண்ணன் சூசைக்குத் தமிழ்ச்செல்வி மீது இருக்கும் காதலைச் சொல்லி அவள் இசைவைக் கோருகிறது. சூசையின் காதலை ஏற்பதா வேண்டாவா என்று அவள் எம்முடிவுக்கும் வராத நிலையில் சூசை ஊரைவிட்டு வெளியேற எண்ணுகிறான். இனியும் இப்படியிருத்தல் முறையில்லை என்று நகரத்திற்கு ஏதேனும் வேலை தேடிச் செல்ல நினைக்கிறாள் தமிழ்ச்செல்வி. ஒரு சீட்டு நிறுவனத்தில் அவ்வூர்ப் பொறுக்கி இளைஞன் இரமேஷ் பரிந்துரைத்தால் தமிழ்ச்செல்விக்கு வேலை கிடைக்கும் என்னும் நிலை. அது குறித்துப் பேசுவதற்கு வீட்டுக்கு வரும் இரமேஷ் அவள் தாயிடம் படுக்கைக் கைம்மாறு கேட்கிறான். அதனால் அவன் கடிந்து விரட்டப்படுகிறான். அன்று வீட்டுக்கு வரும் வைரத்திடம் தனக்குத் தாலி கட்டி மனைவியாக்கிக்கொள்ளும்படி தமிழ்ச்செல்வியின் தாய் வேண்டுகிறாள். சரியென்று சொல்லும் வைரம், வேறொரு வாய்ப்பில் தமிழ்ச்செல்வியைக் கெடுக்க முனைகிறான். இடையே வந்துவிடும் தாய் வைரத்தைக் கொன்று விடுகிறாள். தமிழ்ச்செல்வியின் தாய் சிறைக்குச் சென்ற நிலையில், சுதாகர் வேறொருத்தியைத் திருமணம் செய்துகொள்ள, சூசையின் தட்டுமுட்டுச் சாமான்களின் வண்டி கிளம்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்ச்செல்வி ஒரே முடிவாக அவனோடு ஊரைவிட்டுப் புறப்படுகிறாள். படம் முடிகிறது.

எம்.ஜி.வல்லபன் எழுதி இயக்கிய இப்படம் திரைப்படத் திறனாய்வாளர்களால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. 1975 முதல் பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கு வெளிவந்த புதிய போக்குப் படங்களின் நீண்ட வரிசையில் இப்படத்திற்கு நிரந்தர இடமுண்டு. இளையராஜாவின் பாடல்களும் பின்னணியிசையும் படத்திற்குப் பக்கபலங்கள். காலத்தை மீறிய சிந்தனைதான் படம் தோற்றதற்குக் காரணமோ என்னவோ !

தைப்பொங்கல் திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் எல்லாக் காட்சிகளும் கதைநாயகி தமிழ்ச்செல்வியை மையப்படுத்தியே நகர்கின்றன. அதனால் படம் நெடுகிலும் ஒரு பெண்மொழி பரவியிருக்கும். படத்தில் நாயகன் என்று யாரையும் கூறுவதற்கில்லை. இராதிகாவிற்கு இத்திரைப்படம் தொடக்கக் காலப்படம்தான். விருப்பமே இல்லாமல் திரைப்படத்தில் நடிக்க வந்தவர் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர்தான் தனியொருவராக எல்லாக் காட்சிகளையும் மெருகேற்றி இருக்கிறார். ஆண்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்க எண்ணாத பெண் சமூகத்தை இந்தக் கேடுகெட்ட ஆண்கள் ஏன் இவ்வளவு வஞ்சிக்கிறார்கள் என்பதுதான் தைப்பொங்கல் திரைப்படத்தின் வழியாக எம்.ஜி. வல்லபன் எழுப்பும் கேள்வி.

English summary
MG Vallaban's Thai Pongal, an underrated progressive movie that released in the early eighties.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X