twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதலீடு இல்லாத, நஷ்டத்தைச் சந்திக்காத வியாபாரமாக மாறிப்போன அரசியல்.. தங்கர் பச்சான் விளாசல்!

    By
    |

    சென்னை: அரசியல் என்பது மிகப்பெரும் வியாபாரமாக மாறிப்போனதுதான் மக்களாட்சியின் மிகப்பெரும் சோகம் என்று இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் தங்கர்பச்சான், சமூக பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார். வீடியோவாகவும் அறிக்கைகளாகவும் வெளியிட்டு வருகிறார்.

    இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மக்களாட்சியின் சோகம்

    மக்களாட்சியின் சோகம்

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய், முதலீடு இல்லாமல், நட்டத்தைச் சந்திக்காத, மிகப்பெரும் வியாபாரமாக மாறிப்போனதுதான் நம் மக்களாட்சியின் மிகப்பெரும் சோகம். அளவுக்கு அதிகமாகக் கோடி கோடியாகப் பணம் குவிக்க, மற்றவர்களை மிரட்ட, விரும்பியபடி எல்லாம் குற்றங்களைச் செய்ய, செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள என இதற்காகவே பெரும்பாலும் மேலும் மேலும் அரசியல் கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

    குற்றம் சொல்வது

    குற்றம் சொல்வது

    24 மணி நேரத்தில், தூங்குகிற நேரம் போக மற்ற நேரங்கள் முழுக்க இந்த மண்ணுக்கும், இனத்துக்கும், மொழிக்கும், மக்களுக்கெல்லாம் எந்தெந்த விதங்களில் நன்மைகளைச் செய்யலாம் எனச் சிந்திப்பதைவிட, எப்படி எல்லாம் தங்களின் பெருமைகளைப் பறைசாற்றிப் பீற்றிக்கொள்வது, மற்றவர்களின் செயல்பாடுகளைக் குற்றம் சொல்வது, எந்தக் கட்சியும் தங்களுடைய கட்சியை மிஞ்சாமல் பார்த்துக்கொள்வது, இதுபோக முக்கியமாக எவ்வாறு மக்களைத் தங்களின் கட்சியின் வலையில் விழவைப்பது எனச் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    நாசமாக்கி விட்டார்கள்

    நாசமாக்கி விட்டார்கள்

    இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி, ஆளாளுக்கு ஒரு பத்திரிகை என நடத்துகிறார்கள். எவ்வாறு நேர்மையான செய்தியையும் நியாயமான கருத்துகளையும் மக்களுக்கு அவர்களால் தர முடியும்? குடிக்கும் நீரிலிருந்து, உணவளிக்கும் மண்ணிலிருந்து, உயிர் வாழத் தேவையான உள்ளிழுக்கும் காற்றிலிருந்து எல்லாவற்றையுமே நாசமாக்கிவிட்டார்கள்.

    மக்களா செய்தார்கள்?

    மக்களா செய்தார்கள்?

    இவற்றை எல்லாம் செய்யச் சொன்னவர்கள், அனுமதி கொடுத்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் எல்லாம் யார்? அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு திரியும் இந்த மக்களா செய்தார்கள்? இத்தகைய திட்டங்களால் இந்த மக்களின் எதிர்கால வாழ்வு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதாகவே இருந்ததன் விளைவுதானே இந்நிலைக்குக் காரணம்!

    வெள்ளை உடை உடுத்தி

    வெள்ளை உடை உடுத்தி

    தன்னைப் போல தங்களுடன் இருந்த சாதாரணமானவர்கள் இன்று அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதை ஒரு தொழிலாகவே நடத்திப் பணம் குவிப்பதைக் கண்டு, மனசாட்சிகளை உதறித் தள்ளிவிட்டுத் தாங்களும் வெள்ளை உடை உடுத்தி வெளிப்படையாகத் தெரிந்தும் தெரியாத மாதிரிச் சட்டைப் பையில் தங்கள் தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு, கொடியுடன் தொழிலுக்குப் புறப்பட்டு விடுகிறார்கள்.

    அரசியல் தொழில்

    அரசியல் தொழில்

    இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிற மும்முரமான வியாபாரம், அரசியல் எனும் தொழில்மட்டும்தான்! அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்தத் தொழிலையும் தொடங்கி விடலாம். எதையும் சாதித்துவிடலாம் என்கிற நிலையைத்தான் இந்தச் சுதந்திரம் நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்தத் தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டிருக்கின்றன.

    வாய்ப்புள்ளதா?

    வாய்ப்புள்ளதா?

    இதில் சுதந்திரம் எனச் சொல்லப்படுகிற விடுதலை என்ன சாதித்துக் கொண்டிருக்கிறது? அப்பழுக்கற்ற, தூய்மையான எண்ணத்தோடு மக்களுக்குப் பாடுபடுவது என்ற எண்ணத்தோடு மட்டுமே உருவாக்கப்பட்ட தேர்தலில், ஒரு ரூபாய் கூடச் செலவழிக்க முடியாத ஒருவர் இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா?

    தலைவர்கள் ஆன்மா

    தலைவர்கள் ஆன்மா

    வெள்ளையனின் அடிமைத்தனத்திலிருந்து இன்னுயிர்களை இழந்து நமக்கான விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோடித் தலைவர்களின் ஆன்மா, நிச்சயம் அரசியலை ஒரு தொழிலாக மாற்றிவிட்டவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கும் என நினைக்கிறேன். கேட்டால், ஆமாம்! தொழில்தான் செய்கிறோம் என அவர்களையாவது மதித்து உண்மையை ஏற்றுக்கொள்வார்களா? அடுத்த ஆண்டும் இதேபோல் சுதந்திரதின வாழ்த்துகளை மட்டுமே சொல்லிக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்போம்! இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Director Thangar bachan statement about political business
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X