For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள்! - தங்கர் பச்சான் கண்டனம்

  By Shankar
  |

  Thankar Bachan
  சென்னை: இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல். அதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

  சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

  "அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆளக்கூடியவர்களை தேர்வுசெய்யக்கூடிய பொறுப்பும், கடமையும் வாக்காளர்களாகிய நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. சரியானவர்களை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு பின்னர் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

  மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளின் வேலை. ஆனால், ஏலம் போடுவது மாதிரி உங்களை விட நான் என்னவெல்லாம் தருகிறேன் பாருங்கள் என்று சொல்லி மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல்கள்தான். அவரவர்கள் சொந்த காலில் நின்று உழைத்து பொருளாதாரத்தை உயர்த்தி தன் உழைப்பில் குடும்பத்தை நடத்திக் கொள்வதற்கான எந்த திட்டமும் இந்த வாக்குறுதிகளில் இல்லை.

  ஏற்கனவே தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ சிந்திக்காமல் உழைக்கத் தயங்கி மாதத்திற்கு 10 நாட்கள் வேலைசெய்தால் போதும் என அந்த பணத்தில் முக்கால்வாசியை டாஸ்மாக் கடைக்கு செலவழித்துவிட்டு கால்வாசியைக்கூட தன்னையே நம்பி இருக்கிற குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பெற்றோருக்கும் தராமல் சோம்பேறியாக அலைந்து கொண்டிருக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

  இந்த நிலையில், அவனுக்கு எல்லாவற்றையுமே அரசாங்கம் வீட்டுக்கு வந்து இலவசமாக கொடுத்துவிட்டால் அவன் உழைத்து முன்னேற வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் பிச்சைக்காரன் போல் எல்லா தேவைக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்கக்கூடிய காலம் வந்துவிடும்.

  தங்கள் பொருட்களை மக்களிடத்தில் விற்பனை செய்ய வியாபாரிகள் மேற்கொள்ளும் விளம்பர தந்திரங்களைத்தான் இப்போது ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் போல மேற்கு வங்காள மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

  35 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுகொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்iனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் மம்தா பானர்ஜியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், எந்த ஒரு இலவச திட்டமும் இல்லை. எல்லா திட்டங்களுமே வேலைவாய்ப்பு, தொழில்நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான, மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் திட்டங்கள்தான்.

  தமிழகத்தில் சாராய கடைகளை மூடாமல் எத்தனை திட்டங்கள் கொண்டுவந்தாலும் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறாது. எனவே, மதுவிலக்கை அறிவிக்கப்போகும் கூட்டணிக்குத்தான் பெண்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்."

  -இவ்வாறு தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

  English summary
  Film director Thankar Bachan slammed political parties for offering freebies for votes in this assembly election. in a statement, he urged people to reject all these false promises.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X