For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்த அரையாண்டில் வெளிவந்த சிறந்த 5 இந்தியப் படங்கள்

  By Manjula
  |

  மும்பை: இந்த ஆண்டில் இதுவரை பல சினிமாக்களை இந்தித் திரையுலகம் கொடுத்திருக்கிறது. அதிசயமாக இந்த வருடம் கமர்சியல் நெடி அதிகம் இல்லாமல் வெளிவந்த 5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கின்றன. சமீப காலமாக கமர்சியல் மசாலா இல்லாமல் வெளிவரும் சினிமாக்களையும் ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கி விட்டனர்.

  அதுமட்டுமின்றி வசூலிலும் இந்தப் படங்கள் சாதனை படைப்பதால் தொடர்ந்து பல தரமான படங்கள் வெளிவரத் துவங்கி இருக்கும் இந்த வேளையில், இதுவரை இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த 5 இந்திப் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

  இந்த 5 இந்தியப் படங்களுமே பெரிய நடிகர்களின் படங்கள் (பிக்குவைத் தவிர்த்து) அல்ல என்பதோடு, கதையை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப் பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்கா சர்மாவின் நடிப்பில் வெளிவந்த NH 10, இயக்குநர் சோனாலி போஸின் மர்கரிட்டா வித் எ ஸ்டிரா, ஹர்ஷவர்த்தன் குல்கர்னியின் ஹன்டர், அமிதாப் மற்றும் தீபிகாவின் நடிப்பில் வெளிவந்த பிக்கு, இயக்குநர் ஷரத் கட்டாரியாவின் இயக்கத்தில் வெளிவந்த தும் லகா கே ஹெய்ஸா'. போன்ற 5 படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் சிறந்த படங்கள் என்று சத்தியம் செய்துக் கூறலாம்.

  கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார்கள் படங்களில் நடித்தவர்கள், பிக்கு மற்றும் NH 10 படத்தைத் தவிர மற்ற படங்களில் நடித்தவர்கள் பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லை எனினும் எந்தவித பாரபட்சமுமின்றி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கின்றன இந்தப் படங்கள்.

  இந்த 5 படங்களுமே சிறந்த படங்கள் என்று கூற மற்றுமொரு காரணம் யாரும் சொல்லத் துணியாத ஒரு விஷயத்தை, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் சொன்ன விதமும்தான் என்று தாராளமாகக் கூறலாம்.

  NH 10

  NH 10

  இந்திய சினிமாக்களில் அதிகம் வெளிவராத நெடுஞ்சாலைகளைப் பற்றிய ஒரு படம். நெடுஞ்சாலைகளின் வேகம் மட்டுமே தெரிந்த நமக்கு இரவில் அததற்கு மற்றொரு கோரமான முகமும் உண்டு என்று காட்டிய ஒரு சிறந்த படம். நடிகை அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்த படம் NH 10. தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உதயம் NH4, இந்தி நடிகை அலியா பட் நடிப்பில் வெளிவந்த ஹைவே படங்களைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளைப் பற்றி இந்தியில் வந்திருக்கும் மற்றொரு மிகச்சிறந்த படம் NH 10. கதை இதுதான் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கும் இளஞ்ஜோடிகளான மீராவும்(அனுஷ்கா சர்மா), அர்ஜுனும்(நெய்ல் பூபாளம்) விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெல்லி மற்றும் ஹரியானா பகுதிகளை இணைக்கும் NH10 சாலையில் காரில் பயணிக்கின்றனர்.

  இடையில் உணவகம் ஒன்றில் இளைப்பாறுவதற்காக இருவரும் செல்லும் பொழுது இவர்கள் கண் முன்னாலேயே ஒரு காதல் ஜோடியை அடித்துத் துன்புறுத்தி காரில் கடத்திச் செல்கின்றனர் சிலர்.

  இதைக் கண்டு கொதித்து எழும் அர்ஜுன் மீரா தடுத்தும் கேளாமல் காரில் அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல அதற்காக அர்ஜுன் கொடுக்கும் விலையும், மீரா சந்திக்கும் போராட்டங்களும் தான் கதை.

  நெடுஞ்சாலை மற்றும் கவுரவக் கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூலிலும் சாதனை புரிந்தது. 130 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சுமார் 321 மில்லியனை வசூலித்து தயரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது.

  மர்கரிட்டா வித் எ ஸ்ட்ரா

  மர்கரிட்டா வித் எ ஸ்ட்ரா

  செரேப்ரல் பாலிசி என்னும் நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் லைலாவிற்கு அன்றாட வாழ்வை நகர்த்த பிறரின் உதவி தேவைப்படுகிறது. அவள் பேசுவது மற்றவர்களுக்கு எளிதில் புரியாது ,வீல் சேரில் அமர்ந்தே வாழ்க்கையைக் கழிக்கும் அவளின் முதல் காதல் முறிந்து போகிறது. இந்நிலையில் மேலே படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் லைலாவிற்கு அங்கு ஒரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. தனது சுதந்திரத்திற்காக எந்தவித சமரசமும் மேற்கொள்ள விரும்பாத லைலா இந்த ஓரினச்சேர்க்கை காதலின் முடிவில் என்ன முடிவை எடுக்கிறாள் என்பதே கிளைமாக்ஸ்.

  லைலாவின் தாயாக ரேவதி நடித்திருந்த இந்தப் படத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆசைகள் உண்டு என்பதை எடுத்துக் கூறியிருப்பார் இயக்குனர் சோனாலி போஸ். எந்தவிதத்திலும் காட்சிகளை தவறாக சித்தரிக்காத இந்தப் படம் 3.42 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது.

  ஹன்டர்

  ஹன்டர்

  இயக்குநர் ஹர்ஷவர்தன் குல்கர்னி இயக்கத்தில் வெளிவந்த படம் ஹன்டர் , நடிகர் குல்சான் தேவைய்யா நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் வெளிவந்த ஹன்டர் படமானது இளம்வயதில் செக்ஸுக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

  படத்தின் நாயகனுக்கு 3 விதமான காரணங்களால் திருமணம் தடைபடுகிறது. திருமணத்தின் மீது பயம், காதல் விஷயத்தில் நம்பிக்கை இல்லாமை மற்றும் திருமணம் செய்தால் மகிழ்ச்சி காணாமல் போய்விடும் என்பதுதான் அந்த மூன்று விதமான காரணங்கள். பின்பு நாளடைவில் மகிழ்ச்சியாக வாழ ஒரு பெண் தேவை என்பதைப் புரிந்து கொள்ளும் நாயகன், திருமணமான ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவன் வீட்டில் திருப்தியை( ராதிகா ஆப்தே) நிச்சயதார்த்தம் செய்ய முடிவில் நாயகன் மனதில் ஏற்படும் மாற்றங்களே கிளைமாக்ஸ்.

  கதை நல்ல கதை என்றாலும் காட்சிகளில் போதிய கவனத்தை இயக்குநர் செலுத்தவில்லை என்பது படத்தில் ஆங்காங்கே நன்கு தெரிகிறது. எனினும் குல்ஷான் மற்றும் ராதிகாவின் நடிப்பு படத்தைத் தூக்கி நிறுத்தியதில் 5 கோடிக்கு உள்ளாக எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 12 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்து சாதனை புரிந்தது.

  பிக்கு

  பிக்கு

  டோனர் படத்தின் மூலம் விந்தணு தானம் பற்றி கூறிய இயக்குநர் சுஜித் சிர்காரின் மற்றுமொரு உன்னத படைப்பு பிக்கு. தந்தை(அமிதாப்), மகள் (தீபிகா) மற்றும் டிராவல்ஸ் ஓனர் ரானா(இர்பான்) மூவரையும் வைத்து திரைக்கதை அமைத்து அந்த முயற்சியில் மாபெரும் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர். மலச்சிக்கலால் அவதிப்படும் முதிய தந்தையாக வரும் அமிதாப்பிற்கு நிம்மதியாக வயிற்றுக் கழிவினை அகற்றுவது தான் தலையாய கடமை.

  மகள் பிக்குவிற்கு அலுவலகத்தை கவனித்துக் கொள்வதை விடவும் தந்தையைக் கவனித்துக் கொள்வது பெரும் வேலையாக இருக்கிறது. இந்த நிலையில் சொந்த ஊரான கல்கத்தாவிற்கு செல்ல வேண்டும் என்று அமிதாப் அடம்பிடிக்க, பிக்குவின் பேரைக் கேட்டாலே டாக்ஸி ஓட்டுனர்கள் தெறித்து ஓடுகின்றனர்.

  வேறு வழி இல்லாமல் ட்ராவல்ஸ் ஓனரான இர்பான் தானே அவர்களைக் கல்கத்தாவிற்கு கூட்டிச் செல்கிறார். இம்மூவரின் பயணம் உண்டாக்கும் மாறுதல்களே படத்தின் கதை. பலரும் மூக்கைப் பிடிக்கின்ற ஒரு விஷயத்தைக் கையில் எடுத்து அதனை முகம் சுளிக்காமல் தந்த விதத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் சுஜித்.

  விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் சுமார் 350 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு 100 கோடிக்கும் சற்று அதிகமாகவே வசூல் செய்தது. இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் 1௦0 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற பெயரையும் பாக்ஸ் ஆபிசில் பெற்றது.

  தும் லகா கே ஹெய்ஸா

  தும் லகா கே ஹெய்ஸா

  ஷரத் கட்டாரியாவின் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, பூமி பெட்னெகர் நடிப்பில் வந்திருக்கும் இந்தப் படத்தின் கதை சிம்பிள். படிக்காத அழகான ஹீரோவுக்கு படித்த குண்டுப் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். திருமண நாளில் இருந்து மனைவி மீது விருப்பமே இல்லாமல் ஒதுங்கி ஒதுங்கிப்போகும் ஹீரோ ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே ஓடிவிட முடிவெடுக்கிறான்.

  குடும்பத்தினர் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போகிறது. டைவர்ஸ் வரை போகும் சூழலில் மனைவியின் அன்பு புரியவருகிறது. ஆனாலும் எல்லாமே கைமீறிப் போன சூழல். பிரிந்திருக்கும் மனைவி மீது காதல் அரும்புகிறது ஹீரோவுக்கு. அதன் பிறகு அந்த ஊரில் மனைவியை முதுகில் தூக்கிக்கொண்டு ஓடும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள முடிவெடுக்கிறான். காதலின் சக்தியால் அந்தப் பந்தயத்தில் ஜெயிப்பதோடு இருவரும் க்ளைமாக்ஸில் இணைகிறார்கள்.

  பொதுவான ஒரு குடும்பக் கதை, கொஞ்சம் காதல், வட இந்தியப் பெண்களின் குண்டான உடல்வாகு மற்றும் 1980, 90 வருடங்களில் கலக்கி எடுத்த கேசட் ரெக்கார்டிங் செண்டர் போன்ற மிகக் குறைவான அம்சங்களை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் இயக்குநர் ஷரத் கட்டாரியா. 150 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 300 மில்லியன்கள் வசூலித்து சாதனை புரிந்தது.

  English summary
  We're halfway through 2015, and it's been an interesting six months for Indian cinema. The Best 5 Hindi Movies in 2015. 'NH10' (Directed by Navdeep Singh), Margarita With A Straw(Directed by Shonali Bose), Hunterrr (Directed by Harshavardhan Kulkarni), Piku (Directed by Shoojit Sircar), Dum Laga Ke Haisha (Directed by Sharat Katariya).

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more