The Conjuring: மதராஸி முதல் பாகி 4 வரை பாக்ஸ் ஆபீஸில் மரண பயத்தைக் காட்டிய தி கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ்!
சென்னை: 'தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம், இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உலகளவில் பிரபலமான ஹாரர் படமான இது, இந்தியாவில் இந்த வாரம் வெள்யான 'பாகி 4', 'தி பெங்கால் ஃபைல்ஸ்', மற்றும் 'மதராஸி' போன்ற பெரிய பட்ஜெட் படங்களை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
ஒரு ஹாரர் திரைப்படம், அதிலும் ஹாலிவுட் திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படத்தை முந்துவது என்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பாலிவுட்டின் முன்னணி இளம் நட்சத்திரம் நடித்த ஆக்ஷன் படத்தை 'தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' வென்றது ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் இப்படம் ₹18 கோடி வசூலித்து, இந்த வாரத்தில் வெளியான புதிய ஹிந்தி படங்களான 'பாகீ 4' மற்றும் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' ஆகியவற்றை மிஞ்சியுள்ளது.
'தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம், பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா ஃபார்மிகா ஆகியோரின் வாரன்ஸ் கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாகும். இந்தியாவில் வெளியான முதல் நாளில் ₹18 கோடி நிகர வசூலை ஈட்டியது, இது ஒரு ஹாரர் படத்திற்கு மிகச் சிறந்த தொடக்கமாகும்.
இந்த வசூல் மற்ற ஹாலிவுட் ஹாரர் படங்களை மட்டுமல்லாமல், பல உள்நாட்டு ஹாரர் படங்களையும் முறியடித்தது. சர்வதேச அளவில், 'தி கான்ஜூரிங்' தொடரின் இறுதிப் பாகம் பெரும் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் தகவல்படி, ப்ரீமியர் காட்சிகளிலேயே $8.5 மில்லியன் வசூலித்த இப்படம், வட அமெரிக்காவில் $65 மில்லியன் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வார இறுதியில் உலகளவில் $100 மில்லியனுக்கும் அதிகமாக வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவில் மட்டும் $7 மில்லியனுக்கும் அதிகமாக வசூலிக்க வாய்ப்புள்ளது. 'தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம் இந்திய திரையரங்குகளில் மூன்று இந்தியப் படங்களுடன் வெளியானது.
டைகர் ஷெராஃபின் 'பாகீ 4', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' ஆகிய படங்கள் செப்டம்பர் 5 அன்று வெளியான போதிலும், பாக்ஸ் ஆபிஸ் போரில் 'லாஸ்ட் ரைட்ஸ்' வெற்றி பெற்றது.
உள்நாட்டு சந்தையில், 'மதராஸி' (₹13 கோடி), 'பாகீ 4' (₹12 கோடி), மற்றும் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' (₹1 கோடி) மட்டுமே வசூல் செய்த நிலையில், அந்த படங்களை விட, 'லாஸ்ட் ரைட்ஸ்' ₹18 கோடி வசூல் செய்து முன்னிலை வகித்தது.
மைக்கேல் சாவெஸ் இயக்கிய இந்த சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரைப்படம், வெற்றியடைந்த 'கான்ஜூரிங்' சீரிஸின் இறுதிப் படமாகும். இதில் பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா ஃபார்மிகா ஆகியோர் வாரன்ஸ் கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றி, ஒரு இறுதி பேய் வேட்டை சாகசத்தில் ஈடுபடுகிறார்கள்.
காஞ்சனா பாகங்களை போல கான்ஜூரிங் பாகங்களுக்கும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் இந்த படம் வெளியாகி பல பெரிய படங்களுக்கு கடும் சவாலை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் இந்த படம் தான் அதிகளவில் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











