For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கிராமத்து அத்தியாத்தின் கதை!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  தமிழ்த் திரைப்படத்துறை சார்ந்த அறிவாளிகள் அடிக்கடி கூறும் பெயர் ருத்ரையா. உருத்திரையா என்றுதான் சொல்லவேண்டும். அவ்வடமொழிப் பெயரைத் தற்பவமாக்கினால் விளங்காமைப்பட வாய்ப்பிருப்பதால் ருத்ரையா என்றே கொள்வோம். அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தின் வழி கறுப்பு வெள்ளைக் காலத்திலேயே கற்புடைமைக்கு எதிரான கருத்துகளைக் கூறியவர். மஞ்சு என்னும் அந்த ஒற்றைக் கதாபாத்திரம் ஆணாட்சிக்கு எதிரான எல்லாக் கலகச் சொற்களைப் பேசியது. அவள் அப்படித்தான் முதற்காட்சிக்கு மொத்தம் மூன்று பேரே அமர்ந்திருந்தோம் என்று எம்மூர்த் திரைப்படச் சங்கத்தைச் சேர்ந்த விடி சுப்பிரமணியன் தெரிவித்தது நினைவிருக்கிறது.

  The story of Gramathu Athiyayam

  கமல்ஹாசனும் இரஜினிகாந்தும் வளர்நிலைப் பெருநடிகர்களாக இருந்த 1978ஆம் ஆண்டு தீபாவளிக்கு அப்படம் வெளியானபோதும் தோல்வியையே தழுவியது. ஆனால், இன்றுவரை அத்திரைப்படம் பெண்ணியக் கருத்துகளுக்கான பேசுபொருளில் தனியிடம் பெறுகிறது. இக்கட்டுரை அவள் அப்படித்தான் படத்தைப் பற்றியதன்று. ருத்ரையாவின் அடுத்த படமான 'கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தைப் பற்றியது.

  என் பார்வையில் 'கிராமத்து அத்தியாயம்' ஒரு திரைப்படத்திற்குரிய செறிவான உள்ளடக்கக் கூறுகளால் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. ஒரு படத்தில் எவ்வளவு கதைத் தன்மைகளை நெருக்கிக் கோக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாய்க் கோத்திருந்தார். நம்மவர்கள் கிராமத்து அத்தியாயம் என்ற படத்தைப் பற்றி பெயரளவில் கூறுவார்களே தவிர, அந்தப் படத்தின் கதையை ஒருவரி கூடக் கூற மாட்டார்கள். அந்தக் கதையை நான் இங்கே கூறியே தீர்வேன். அப்போதுதான் அந்தப் படம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் ஓரளவேனும் உணர முடியும்.

  The story of Gramathu Athiyayam

  ஒரு கூத்து ஒத்திகைக் காட்சியோடு படம் தொடங்குகிறது. கூத்து வாத்தியார் எல்லார்க்கும் இல்லையென்னாமல் அள்ளி வழங்குகின்றவர். அவரிடம் அவ்வூரார் சிலர் பகுதி நேரக் கலைஞர்களாகச் சேர்ந்திருக்கின்றனர். அவர்களுள் அவ்வூர்த் தபால்காரரும் ஒருவர். சிறுமதியரான அந்தத் தபால்காரர் மக்கள் அனுப்பும் பணவஞ்சல்களைக் கையாடல் செய்து எடுத்துக்கொள்பவர். அவ்வூர்க்காரி இலட்சுமியை அடைய முயல்பவர். இளமை வளப்பத்தோடு இருக்கும் இலட்சுமிக்கு இரண்டு பெண்பிள்ளைகள். ஆறும் மூன்றும் என்னும் அகவையுடைய தம் பிள்ளைகளோடு தனியளாய்ப் போராடிக்கொண்டிருப்பவள். இரண்டாவது பிள்ளை பிறந்தவுடன் இலட்சுமியின் கணவன் அவளைக் கைவிட்டுவிட்டு ஓடியவன். ஆள் எங்கே இருக்கிறான் என்னாயிற்று என்று எந்தச் செய்தியும் இல்லை. தனித்தவளான அவளை அடைய தபால்காரன், மளிகைக் கடைக்காரன் என்று பலர்க்கும் ஏக்கம்.

  The story of Gramathu Athiyayam

  இலட்சுமிதான் நாயகியா என்று நினைத்துவிடாதீர்கள். அவள் சிறு கதாபாத்திரம், அவ்வளவுதான். பவானி என்பவள்தான் நாயகி. இளங்குமரியான பவானியின் தந்தை சுப்பையா பெருங்குடிகாரன். வீட்டுப் பாத்திரத்தை மறைவாக எடுத்துச் சென்று விற்றுக் குடிப்பவன். பவானியும் இலட்சுமியும் சகோதரிகளைப்போல் பழகுபவர்கள். இலட்சுமியின் இரண்டு பிள்ளைகளும் பவானியிடம் 'அக்கா அக்கா' என்று ஒட்டிக்கொள்பவை. கூத்து வாத்தியார்க்குப் பவானிமீது காதல். ஆனால், அவளிடம் சொல்லும் துணிவற்றவர். அவளை நினைத்து கூத்துக் காட்சிகளை எழுதிக்கொண்டிருப்பார். குடிப்பதற்காக சுப்பையா ஒரு பாத்திரத்தை எடுத்துச் செல்கையில் அதைப் பிடுங்கிக்கொண்டு, அவர் குடிப்பதற்குக் காசு கொடுத்து அனுப்புவார் கூத்து வாத்தியார். அந்தப் பாத்திரத்தைப் பவானியிடம் கொடுக்கும் சாக்கில் ஏதேனும் பேசி வரலாம் என்ற நப்பாசை கூத்து வாத்தியார்க்கு ஏற்பட, அரச நடையில் அடைப்பலகாரம் வாங்கிக்கொண்டு பவானி வீட்டுக்குச் செல்வார். அங்கே இலட்சுமியின் பிள்ளைகள் அடையைப் பெற்றுக்கொண்டு தின்னும். "இருக்கட்டும்... பிள்ளைங்களுக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன்," என்றபடி தாம் எண்ணியதைச் சொல்லாமல் திரும்புவார் கூத்து வாத்தியார்.

  அவ்வூரில் இரும்படிக்கும் கொல்லன் இலட்சுமியின் பிள்ளைகள்மீது பாசத்தோடு இருப்பான். அப்பிள்ளைகள் 'மாமா மாமா' என்று கொல்லனிடம் சென்று ஒட்டிக்கொள்ளும். அவர்களுக்கு ஊதுபை, இனிப்பு என்று வாங்கிக்கொடுப்பான். ஒருநாள் குடிவெறியில் இலட்சுமியை நாடி வந்து அவளை அணுகும்விதமாகப் பேச முயல்வான். அவனால் அவளை வா என்று கேட்க முடிவதில்லை. திரும்பிச் சென்றுவிடுவான். மறுநாள் வீதியில் இலட்சுமியை எதிர்கொள்ளும் கொல்லன் தன் செயலுக்குப் பொறுத்தருள் கோருவான். மதுவருந்தாமல் தான் பேச நினைத்ததைப் பேசும் துணிவு எனக்கில்லை என்பான். இதனால் இலட்சுமிக்கு அவன்மீது கருணை சுரந்துவிடும். பிறகொருநாள் அவளை அடைவதற்கென்று தபால்காரனும் மளிகைக்கடைக்காரனும் குடிபோதையில் இலட்சுமியின் வீட்டுக்குள் நுழைவார்கள். தபால்காரனை அடித்து உதைத்து வெளியேற்றுவான் வீட்டுக்குள் இருக்கும் கொல்லன்.

  கிராமத்துப் பண்ணையார்க்கு ஒரே மகன் அருண். கல்லூரித் தேர்வுகளில் தோற்றதால் அவனை ஊர்க்குத் திரும்பும்படி பண்ணையார் கூறிவிடுவார். மிரட்டல் உருட்டல் கறார்ப் பேர்வழியான பண்ணையார்க்கு மனைவியில்லை. விதவைத் தங்கைதான் வீட்டு நிர்வாகம். கல்லூரியிலிருந்து ஊர்திரும்பும் அருண் அத்தை வழியாகவே தந்தையிடம் பேசுகிறவன். ஊர்க்கு வந்து பொறுப்பில்லாமல் சுற்றும் அருண் பவானியைப் பார்த்துவிடுவான். ஒரு நாட்டுப்புறப் பாட்டைப் பவானி பாடுகையில் அப்பாட்டில் சொக்கி அவளைக் காண்பான். அவளுடைய அழகில் மயங்கியவன் அவளைக் காதலிக்கவும் தொடங்கிவிடுவான். பல்வேறு தனிமை வாய்ப்புகளில் அவளோடு கொஞ்சலாக உரையாடத் தொடங்கும் அருண் அவளைக் காதலில் வீழ்த்துவான். "அப்பனிடம் அஞ்சி நடுங்கும் நீ அவரிடம் எப்படி நம் விசயத்தைச் சொல்வாய் ?" என்று பவானி கேட்கையில் "சொல்லிப் பார்ப்பேன், இல்லாவிட்டால் உன்னைக் கூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவேன்," என்பதைப்போன்ற உறுதியளித்திருப்பான்.

  The story of Gramathu Athiyayam

  இவ்வுரையாடல் நிகழ்ந்த நாள் மாலை சுப்பையா பவானிக்குத் திருமண நிச்சய ஏற்பாடுகள் செய்துவிட்டு வந்திருப்பார். "நாளைக்கு உன் மாமன் மகன் நிச்சயம் பண்ண வர்றான்மா," என்று கூறுகையில் பவானி உடைந்துபோவாள். இரவில் பண்ணையார் வீட்டுக்குச் சென்று அருண் வெளியே வருகிறானா என்று காத்திருக்கையில், அருண் தற்செயலாக வெளியே வருவான். அருணிடம் தன் நிலையைச் சொல்லி அழுவாள். அவனோ காலையில் தன் தந்தையிடம் எப்படியாவது சொல்லி வீட்டுக்கு வருகிறேன் என்று துணிவுகூறி அனுப்புவான். ஆனால், விடிகாலையில் பண்ணையார் அருணை மிரட்டிக் கிளப்பித் தன்னோடு வேறிடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்.

  அழுது தவிக்கும் பவானியை ஊராரும் இலட்சுமியும் தேற்றி விடுவர். நிச்சயதார்த்தம் நடந்துவிடும். அன்றிரவு அருண் தன் வீட்டு மாடியில் உறக்கமின்றி நின்றுகொண்டிருக்கும்போது ஓரு உருவம் கிணற்றை நோக்கி ஓடும். அவன் ஓடிச்சென்று பிடிப்பதற்குள் கிணற்றில் குதித்துவிடும். அது பவானி. அருணும் கூடவே குதித்து பவானியைக் காப்பாற்றுவான். "ஊரார் எல்லாரும் பார்க்க நிச்சயம் நடந்துவிட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை," என்பாள் பவானி. "உன் கல்யாணத்துக்குப் பின்னாடியும் என்னோடு சினேகமாக இருப்பாயா பவானி ?" என்று கேட்பான் அருண். "உன்னை எப்படிச் சின்னையா மறக்க முடியும் ?" என்று அணைத்து அழுவாள்.

  பவானிக்குத் திருமணமும் நடந்துவிட, பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுவாள். பவானியின் கணவன் தங்கவேல் நல்லியல்புகளின் தொகுப்பு. முதலிரவில் அவளை நெருங்கும்போது, அவள் முகந்திருப்பிக்கொள்வாள். "சரி.. உனக்குக் களைப்பாக இருக்கும் தூங்கு" என்று அடங்குபவன். மறுநாள் வீட்டுக்கு வேண்டிய தண்ணீரைத் தானே சுமப்பான். "என்னை எழுப்ப வேண்டியதுதானே ?" என்று பவானி கேட்கும்போது "இத்தனை நாள் நான் செய்த வேலைதானே?" என்பான். "இன்னைக்கிச் சமைக்க வேணாம். நான் இட்லி வாங்கிட்டு வந்துடறேன்" என்று கிளம்புவான். பவானிக்குப் புதுப்புடைவை வாங்கித் தருவான். அவள் அதில் ஆர்வம் காட்ட மாட்டாள். ஒருநாள் பவானியின் தந்தையைப் பார்த்துவிட்டு வரும் தங்கவேல், அவளுடைய தந்தையிடம் பேசியவற்றைக் கூறுவான். "பவானி ஒரு குழந்தை... அவளேதும் தப்பு செஞ்சா திட்டவோ அடிக்கவோ செய்யாதீங்க," என்று சுப்பையா கேட்டுக்கொண்டதைக் கூறும் தங்கவேல் தான் சொன்ன பதிலாக இதைச் சொல்வான். "எனக்கு பவானிதான் மாமா எல்லாம். அவளைவிட்டா எனக்குன்னு யார் இருக்கா ?" - அதைக்கேட்டதும் பவானி தங்கவேலின் மடியில் சாய்ந்துவிடுவாள்.

  பவானியும் தங்கவேலும் இனிய இல்லறத்தைத் தொடங்குவார்கள். அவர்கள் களித்தாடுவதைக் கூத்து வாத்தியார் கண்ணுற்றுவிடுவார். பவானியின் திருமணத்துக்குப் பிறகு அவர் நடுக்கூத்தினிடையே காணாமல் போனவர். "யார் அந்தாளு ?" என்று தங்கவேல் கேட்க, "எங்கூர்ல கூத்து கட்டிக்கிட்டு இருக்கும். தீடீர்னு காணாமல் போயிடுச்சு... பைத்தியம்" என்று கூறிவிடுவாள். ஒருநாள் பவானியைத் தேடி தலையாரி வருவான். "அப்பா போய்ட்டாரு தாயி," என்பது அவன் கொண்டு வந்த செய்தி. பவானியின் பிறப்பூர்க்கு வந்து இழவு காரியங்கள் முடித்தபிறகு கொல்லன் தங்கவேலுக்கு ஒன்றைச் சொல்வார். "அந்த ஊர்ல இருந்து என்ன பண்ணப்போறே ? இங்கேயே ஒரு காடு குத்தகைக்குப் பிடிச்சு ஓட்டு... இடையில பண்ணையார் வீட்ல வேலையும் பார்த்துக்கலாம்," என்னும் அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படும்.

  சொந்த ஊரிலேயே வாழும் பவானி அருணை எதிர்கொள்ள நேரும். அவன் தாடி வைத்துக்கொண்டு பற்றில்லாமல் வாழ்வான். அவளோடு பேச முயல்வான். "என்னை மறந்துட்டியா பவானி ?" என்று கேட்பான். பவானியோ "அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதா ?" என்று எரிந்து விழுவாள். அருண் வெறுப்புற்றவனாகித் தற்கொலைக்கு முயல்வான். ஆனால் காப்பாற்றப்படுவான். அதன்பிறகு அவனைச் சந்தித்துப் பேச வரும் பவானியிடம் " உன் கல்யாணத்துக்குப் பின்னாடி உன் ஊருக்கு நான் எத்தனை வாட்டி வந்தேன் தெரியுமா ? வந்து உன்னைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டுப் போயிடுவேன்... உண்மையைச் சொல்லு. நீ சந்தோசமாத்தான் இருக்கியா ?" என்று கேட்க, பவானி அழுவாள். "நான் உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேன்...," என்பது அவளுடைய ஒப்புதல். இன்றிலிருந்து நமக்குப் புதுவாழ்வு என்று அருண் தேறுவான். இச்சந்திப்பை அந்தக் கூத்து வாத்தியார் பார்த்துவிடுவார். "பவானி... இரட்டை வேசம் போடறியாம்மா ? வேணாம்மா ? நான் வேசம் போட்டவன், இரட்டை வேசம் கஷ்டமம்மா," என்பார். பவானியை அவளறியா வண்ணம் தொடர்ந்து தொலைவிலிருந்து கண்காணிப்பவராக கூத்து வாத்தியார் மாறியிருப்பார்.

  கொல்லனோடு வாழும் இலட்சுமியிடம் உரையாட வாய்த்த பொழுதில் பவானி கேட்பாள், "ஏன்க்கா... இப்ப திடீர்னு உன் பழைய புருசன் வந்துட்டா என்ன பண்ணுவ ?" அதற்கு இலட்சுமியின் பதில் "பொம்பளையை மதிக்கிற ஆம்பளதான்டி முக்கியம்," என்பது. இதற்கிடையில் ஒருநாள் பவானியின் புறக்கணிப்பு பொறாத அருண் வீட்டுக்கே வந்துவிடுவான். "அடப்பாவி... வீட்டுக்கே வந்துட்டியா ?" என்று பவானி மிரள, "இன்று மாலை என்னைச் சந்திக்க வராவிட்டால் என் சாவுச்செய்தி வரும்," என்று கூறிச்செல்வான் அருண்.

  இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக மாலையில் அருணைத் தேடிச் செல்வாள் பவானி. தன் மனைவி எங்கோ செல்வதைத் தற்செயலாகக் காணும் தங்கவேல், ஐயுற்று அவளைப் பின்தொடர்ந்து செல்வான். அருணைப் பார்த்து ஆறுதல் கூறும் பவானி, "தன்னை நம்பியே ஒரு குழந்தையைப்போல் என் கணவன் இருக்கிறான். அவனுக்கு என்னைவிட்டால் யாருமே இல்லை," என்பாள். அவ்வுரையாடல் முற்றி பவானி திரும்பி வரும்போது தங்கவேல் நின்றுகொண்டிருப்பான். "ஐயோ...." என்று அவன் காலடியில் வீழ்ந்தழுகையில், அவன் அனைத்தையும் விளங்கிக்கொண்டவனாகி அவளை அணைத்துக்கொண்டு தேற்றுவான். பவானியின் நிம்மதியின்மைக்கு அருணே காரணம் என்பதால் அவ்விடத்தில் தோன்றும் கூத்து வாத்தியார் அருணைக் கொன்றுவிடுவார். பவானியின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

  ஓர் ஆவேசத்தில் படக்கதையை ஓரளவுக்குச் சொல்லிவிட்டேனேயன்றி, இதன் முழு வீச்சைப் படத்தில்தான் உணர முடியும். தமிழ்த் திரைப்படங்களின் மிகச்சிறந்த முதற்பத்து என்னும் என் பட்டியலில் இப்படத்திற்கு ஏழு அல்லது எட்டாமிடத்தைத் தவறாமல் தருவேன். யூடியூப் இணையத்தில் படம் இருக்கிறது. பாருங்கள். திரைக்கதையின் செறிவான உள்ளடக்கம், மானுட உணர்ச்சிகளின் பெருந்தவிப்பு என்று பலவற்றையும் உணர்வீர்கள்.

  Read more about: kollywood tamil movies
  English summary
  Poet Magudeswaran's article on late director Rudhraiya's Gramathu Athiyayam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X