துரோணாச்சாரியார் முதல் ராஜாஜி வரை.. நம்மள படிக்க விடாம தடுத்தாங்க.. தியாகராஜன் குமாரராஜா கொந்தளிப்பு!
தியாகராஜன் குமாரராஜா கல்வியின் முக்கியத்துவம், சமூக நீதி குறித்து ஆழமாகப் பேசினார். திராவிடக் கருத்தியல், ஆரியக் கருத்தியல் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கினார். தமிழக அரசின் கல்வித் திட்டங்களையும், மத்திய அரசின் நிதி மறுப்பையும் சுட்டிக்காட்டி, கல்வி மூலம் சமூக மாற்றத்தை வலியுறுத்தினார்.
சென்னை: "கீழ இருக்கிறவன் படிச்சா, மேல இருக்கிறவனும் மதிச்சு அவனோடு சேர வேண்டிய கட்டாயம் வரும்" என்று கல்வியின் முக்கியத்துவத்தை தியாகராஜன் குமாரராஜா அழுத்தமாக குறிப்பிட்டது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.
திராவிட கருத்தியல் எப்படியாவது எல்லாரும் படிக்க வேண்டும், அறிவாளிகளாக ஆக வேண்டும் என்று நினைக்கிறது. பாண்டிய நெடுஞ்சழியன் காலத்திலிருந்து பாரதியார் வரை ஏழைக்கு கல்வி அறிவித்தல் கோடி புண்ணியம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆரிய கருத்தியலில் ஏகலைவணின் கட்டை விரலை வாங்கியது முதல் கர்ணனை கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார் போன்றோர் படிக்க விடாமல் தடுத்தனர். ராஜகோபால ஆச்சாரியார் வரைக்கும் நாம் படிப்பதை தடுத்துக்கொண்டே இருந்தனர். இதற்கு எதிராக சமத்துவமும் சமூக நீதியும் இருக்க வேண்டும் என்று ஒரு கட்சி நினைக்கிறது.
சமத்துவம் இருக்கக்கூடாதுன்னு சொல்ற இடத்தில சமத்துவமும், சமூக நீதியும் இருக்கணும்னு சொல்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அவங்க எல்லாரையும் படிக்க வைக்கிறதுக்கு எத்தனை திட்டங்கள் முடியுதோ அத்தனை திட்டங்களையும் போடுறாங்க. காலை உணவு கொடுக்கறாங்க, நான் முதல்வன் இருக்கு, தமிழ் புதல்வன் இருக்கு.
புதிய கல்விக் கொள்கை மூலம் உங்களைப் படிக்கவிடாமல் தடுக்க பார்க்கிறார்கள். இதை ஏற்க மாட்டோம்னு சொன்னவங்களுக்கு நியாயமா வரவேண்டிய 2150 கோடி பணத்தை தரமாட்டேங்குறாங்க. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உதவ மறுக்கிறது வருத்தமளிக்கிறது.
எந்த உதவியும் இல்லாமல் கைகளை கட்டி, கால்களை கட்டி தண்ணீரில் போட்டதுக்கு அப்புறமா நீந்தலாம் என்று பார்க்காமல், நீந்தி தமிழக மக்களையும் கரை சேர்க்கக்கூடிய உழைப்பை செலுத்தி இருக்கக்கூடிய முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தியாகராஜன் குமாரராஜா கூறினார்.
ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு கொடுத்தால் குறைந்துவிடும். ஆனால், கல்வி அறிவு எத்தனை பேருக்கு கொடுத்தாலும், குறையவே குறையாது. வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் அழியாது, கொடுத்தாலும் குறையாது என கல்வியின் பயன் குறித்து சங்க பாடல்களில் இருந்த குறிப்புகளையும் மேற்கோள் காட்டி சூப்பர் டீலக்ஸ் பட இயக்குநர் சூப்பராக பேசியுள்ளார். வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மிஷ்கின் என பலரும் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்கள் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











