அதர்வா, ஹரீஷ் கல்யாணை விட எனக்கு இந்தக் கதாபாத்திரம் பொருந்தும்..லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் பேட்டி
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது
கோமாளி திரைப்படம் போலவே இந்தப் படமும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததுதான் இந்த மிகப் பெரிய வெற்றிக்கு காரணம்.
இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தில், தான் கதாநாயகனாக நடித்ததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பிரதீப்.

கோமாளி கண்ணீர்
கோமாளி திரைப்படம் வந்த பொழுது கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியது. படத்தினுடைய ரிலீசுக்கு முன்பு தேங்க்ஸ் கார்டில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை போட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டபோது நான் செய்யாத ஒரு குற்றத்திற்காக அப்படி பெயர் போட முடியாது, ஒருவேளை பெயர் போட்டால் நான் தவறு செய்தது போல் ஆகிவிடும் என்று பிரதீப் அழுதாராம். இருப்பினும் அது படத்தினுடைய வெளியீட்டை பாதிக்கும் என்பதால் தயாரிப்பாளர் தேங்க்ஸ் கார்டில் அந்த நபரின் பெயரை போடச் சொன்னாராம். கோமாளி திரைப்படம் முழுக்க முழுக்க என்னுடைய கதை என்று கூறியிருக்கிறார் பிரதீப்.

சத்யராஜ்
இந்தப் படத்தில் சத்யராஜ் கதாபாத்திரம் வில்லத்தனமாகவும் நகைச்சுவையாகவும் இல்லாமல் ஒரு மாதிரி விசித்திரமான கதாபாத்திரமாக இருக்கும். இதனை நான் இசையமைப்பாளர் யுவனிடம் சொல்லவே இல்லை. இருப்பினும் அதனை புரிந்து கொண்டு அவரும் வில்லத்தனமாகவும் நகைச்சுவையாகவும் இல்லாமல் விசித்திரமான ஒரு இசையை கொடுத்தார். அதுதான் யுவன் சங்கர் ராஜா. ஒரு காட்சியில் ஹீரோவிற்கும் ஹீரோயினுக்கும் பிரச்சனை நடக்கும்போது, சத்யராஜ் வீணை வாசிப்பார். அவரை ஒரு நாரதர் போல காட்டுவதற்காகத்தான் அவரை வீணை வாசிக்க வைத்தாராம் பிரதீப்.

ஒப்பீடு வேண்டாம்
நடிகர் தனுஷ் போலவும் பிரபுதேவா போலவும் சாயல் இருப்பதாக பலரும் பிரதிப்பை குறிப்பிடுகின்றனர். அதேபோல பாக்யராஜ், எஸ்.ஜே.சூர்யா போல தான் இயக்கும் படத்தில் தானே நடித்து வெற்றியும் காண்கிறார் பிரதீப் என்ற ஒப்பீடும் உள்ளது. தனுஷ், பிரபுதேவா, பாக்யராஜ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய அனைவருமே மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் என்னை ஒப்பிடுவதே தவறு என்று தன்னடக்கமாக கூறியுள்ளார்.

நான் ஏன் நடித்தேன்
இந்தப் படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தபோது நீ என் நடிக்கிறாய் என்று கேட்காத ஆளே இல்லை. ஆனால் நான் குறும்படங்களில் நடித்தபோதே இயக்குநர்கள் ராம், லிங்குசாமி, விக்னேஷ் சிவன் போன்றவர்கள் சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு கொடுத்துள்ளார்கள். அது மட்டுமின்றி அதர்வா, ஹரிஷ் கல்யாண் போன்ற நடிகர்களை விட நான் இந்தக் கதைக்கு சரியாக இருப்பேன் என்று எனக்கு தெரியும். ஏனென்றால் நான்தான் இயக்குநர் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிரதீப்.


Click it and Unblock the Notifications











