»   »  இவன்(ர்)தான் பாலா!

இவன்(ர்)தான் பாலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குற்றம்பரம்பரை சர்ச்சை குறித்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று பார்த்த பாலா, இத்தனை நாள் நாம் பார்த்த சினிமா இயக்குநர் அல்ல. அறச் சீற்றமும், தன்மான உணர்வும், நியாமான கோபமும் நிறைந்த வேறு பாலா!

பொதுவாக தனது படங்களின் விழா, சந்திப்பு அல்லது வேறு படங்களின் நிகழ்வுக்கு வரும் பாலா இரண்டொரு வார்த்தைகளில் பேச்சை முடித்துக் கொள்வார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நக்கலும், சிரிப்புமாக பதில் தருவார்.

This is real Bala

நேற்று அந்த பாலா இல்லை.

'யாராக இருந்தால் என்ன... நியாயம் ஒன்றுதானே. அந்த நியாயத்தைப் புரிந்து கொள்ளாதவர் எப்படிப்பட்ட பெரிய மனிதனாக இருந்தால் எனக்கென்ன?' என்ற மனநிலையில் செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் பாலா.

குற்றப்பரம்பரை என்ற தலைப்பில் கைரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டத்தினர் பற்றி படமெடுக்கப் போவதாக நீண்ட ஆண்டுகளாக இயக்குநர் பாரதிராஜா கூறி வந்தார். இப்போது பாலா அதே பெயரில் அதே கதையை எடுக்கப் போகிறார் என்பதுதான் பாரதிராஜாவின் குற்றச்சாட்டு.

ஆனால் பாலா பல முறை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார், 'நான் எடுக்கும் படத்துக்கும், தலைப்புக்கும் பாரதிராஜா படத்துக்கும் தொடர்பே இல்லை. நான் ஒரு கற்பனைக் கதையை எடுக்கப் போகிறேன். பாரதிராஜா வரலாற்றுச் சம்பவத்தை எடுக்கப் போகிறார். எனவே இரண்டும் வேறு,' என்று.

இது பாரதிராஜாவுக்குப் புரியவில்லையா அல்லது அவரைத் தொடர்ந்து உசுப்பேற்றி வரும் ரத்னகுமார் புரிந்தே இந்த உசுப்பேற்றலைத் தொடர்கிறாரா? என்ற செய்தியாளர்களைக் கேட்க வைத்துவிட்டது பாலா வெளியிட்ட விளக்கங்கள்.

அதுவும் ரத்னகுமார் தன்னிடம் பாரதிராஜா பற்றி பிதாமகன் ஷூட்டிங்கில் கேவலமாகப் பேசியதை வெளியிட்ட பாலா, 'ச்சே... இதையெல்லாம் சொல்ல வேண்டி வந்துவிட்டதே' என்று வருந்தினார். ரத்னகுமாரை வெளுத்துக் கட்டினார் பாலா. அவன் இவன் என்றுதான் அவரைக் குறிப்பிட்டார். காரணம், பொய்யான விஷயத்துக்காக அவமானப்பட வைத்துவிட்டாரே என்ற கோபம்.

This is real Bala

ரொம்ப எளிதாக முடிந்திருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் மிகவும் சிக்கலாக்கப்பட்டு, இரண்டு பெரிய இயக்குநர்களை மோத வைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக ரத்னகுமாரைக் குற்றம்சாட்டியுள்ளார் பாலா.

'இதுவரை நடந்தது போதும். நான்கு முறை என்னை காயப்படுத்தினார்கள். அமைதியாக இருந்தேன். மன்னித்துவிட்டேன். ஆனால் இனியும் ரத்னகுமாரும் பாரதிராஜாவும் என்னைப் பற்றி தவறாகப் பேசினால்...' என்று அவர் எச்சரித்து பிரஸ்மீட்டை முடித்த போது இந்தப் பிரச்சினைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி விழும் என்றே பலரும் எதிர்ப்பார்த்தனர்.

அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

பாலாவின் இந்த பிரஸ் மீட் கொந்தளிப்பு குறித்து பாரதிராஜாவிடம் இன்று கருத்துக் கேட்டோம். "நிறையப் பேரு கேட்டுட்டாங்கய்யா.. யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. உனக்கும்தான். பாலா நினைச்சதை பேசியிருக்கான். பேசட்டும். நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேறொன்றும் பேசப் போவதில்லை," என்றார்.

அர்த்தமே இல்லாமல், ஒருவரைப் பற்றி இன்னொருவர் தவறாகச் சொன்னதன் விளைவுதான் இந்த மோதல் என்பது மட்டும் புரிந்துவிட்டது. அதே நேரம் குற்றப்பரம்பரை சர்ச்சையில் பாலா பக்கம் எந்த தவறும் இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது!

English summary
In Kutra Paramparai controversy director Bala shows his other face before media and cleared that there is no mistake on his side.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil