»   »  தொண்டன் – இங்கு சிறந்த முறையில் கருத்துக்கள் சொல்லப்படும்!!

தொண்டன் – இங்கு சிறந்த முறையில் கருத்துக்கள் சொல்லப்படும்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சமுத்திரக்கனியைப் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்தமான ஒரு சிறந்த நடிகர். ஆனால் இயக்குநர் சமுத்திரக்கனி பெரும்பாலானோரின் நன் மதிப்பைப் பெற்றிருந்தாலும், ஒரு சாரர் அவர் இயக்கும் படங்களைக் கண்டாலே "அய்யய்யோ...அட்வைஸ் பண்ணியே கொன்னுருவாருப்பா" என்று பயந்து ஓடுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. சமூகக் கருத்துக்களை காட்சிப் பிணைப்புகளோடு ஒரு திரைப்படத்தின் வாயிலாக வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்வது என்பது ஒரு கலை. அந்தக் கலையில் சமுத்திரக்கனி நிச்சயம் தேர்ச்சி பெற்ற ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை. நாடோடிகளுக்குப் பிறகு அவர் எடுத்த அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் சாதனைகளை படைக்காவிட்டாலும் Critically Acclaimed படங்களாகவே இருந்திருக்கின்றன.

சமுத்திரக்கனியின் முந்தைய படைப்பான அப்பா பெரும்பாலனவர்களிடம் பாரட்டைப் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம். இப்படியிருக்க, அவரின் இயக்கத்தில், அவரே நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் இந்த தொண்டன்.


Thondan - Audience Review

சிம்பிளா இந்த தொண்டன் படத்தப் பத்தி சொல்லனும்னா, இதுக்கு முன்னால வந்த சமுத்திரக்கனியோட படங்கள்ல படத்தோட கதைக்கு நடுவுல கொஞ்சம் கருத்து சொல்லுவாரு. ஆனா இந்தப் படத்துல கருத்துக்கு நடுவுல கொஞ்சம் கதை சொல்லிருக்காரு. அம்புட்டுத்தேன். கருத்து சொல்வதற்கென்றே எடுக்கப்பட்ட ஒரு படம்.


எந்த ஒரு சினிமாவானாலும் கதை, திரைக்கதை சரியா இல்லைன்னா என்னதான் நல்ல கருத்து சொன்னாலும், எவ்வளவுதான் நல்ல விஷயங்கள் படத்துல இருந்தாலும் எடுபடாது. அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் இந்தப் படம்.


ராணுவத்துல வேலைப் பாத்துக்கிட்டு இருந்த சமுத்திரக்கனி வேலைய விட்டுட்டு ஊர்ல வந்து ஆம்புலன்ஸ் ஓட்டிக்கிட்டு இருக்காரு. கருத்து சொல்றது, அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது போன்ற விஷயங்கள மெயின் தொழிலாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுறத சைடு தொழிலாவும் வச்சிட்டு வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்காரு.


அதுவும் அவரு ஆம்புலன்ஸுல பிரசவத்துக்கு அழைச்சிட்டு போனா பொறக்குற கொழந்தைக்கு எல்லாரும் இவரு பேரத்தான் வைக்கிறாங்க. ஆண் பிள்ளையா இருந்தா விஷ்ணு பிரியன், பெண் பிள்ளையா இருந்த விஷ்ணுப் பிரியான்னும்.. யப்பா... மிடியல.


கூட இருக்க நண்பனே அவரோட தங்கைய லவ் பண்றேன்னு சொல்லி கலாட்டா பண்றப்போ, கொஞ்சம் கூட கோவப்படாம, அவனுக்கு சப்போர்ட் செஞ்சி அட்வைஸ் பண்றாரு. நாடோடிகள்லருந்தே இதே ஃபார்முலாவ ஃபாலோ பண்ணிட்டு வர்றாரு. என்னதான் ஆயிரம் அட்வைஸ் அடுத்தவங்களுக்கு பன்னாலும் நம்ம தங்கச்சின்னு வரும்போது யாரா இருந்தாலும் வெட்டுக்குத்து லெவலுக்கு போயிரும். "என் தங்கச்சின்னு மட்டும் இல்லை.. யார் தங்கச்சியா இருந்தாலும் இதத்தான் செய்வேன்"ன்னு சொல்றாரு. அவரு சொல்ல வர்ற கருத்து ஓக்கேன்னாலும் அது போன்ற காட்சியோட ஒன்ற முடியல. அயன் படத்துல ஜெகன் அவரோட தங்கச்சி தமன்னாவ சூர்யாவ லவ் பண்ண வைக்கிற அளவுக்கு இங்க மோசமா போயிடல.. ஒரளவுக்கு டீசண்டுதான்.


இடையில ஒரு சின்ன அரசியல்வாதியோட மோதல். அதனால வர்ற ப்ரச்சனைகள்னு படம் எதோ ஒரு மாதிரி போகுது. இடைவேளையில கூட படம் எத நோக்கி போயிட்டு இருக்கு, நம்மாளு என்ன சொல்ல வர்றாருங்குற க்ளாரிட்டியே இருக்க மாட்டுது. அப்புறம் படம் முடியிறதுக்கு ஒரு 20 நிமிஷம் முன்னாடிதான் படத்தோட ஒன்லைன் தெரியிது. அது என்னன்னா "ஒரு கொடிய மிருகம் நம்மள கடிக்க வருதுன்னா அத கட்டிப்புடிச்சி புரள்றது புத்திசாலித்தனம் இல்லை. ஒண்ணு நாம விலகிறனும்... இல்லை அந்த மிருகத்த திசை திருப்பி விட்டுறனும்," இவ்வளவுதான் மேட்டர்.


அவரு கருத்து சொல்றதக் கூடத் தாங்கிக்கலாம் போல. ஆனா காமெடி பண்றேங்குற பேர்ல ஏரியா திருடனப் புடிக்கிற சீக்குவன்ஸ் ஒரு ரெண்டு வச்சிருக்காரு பாருங்க. பிரமாதம். சார்.. நீங்க சீரியஸாவே பேசுங்க சார்!


சமுத்திரக்கனியோட ஜோடியா கொஞ்ச நேரம் ஸ்கிரீன்ல வர்றாங்க சுனைனா. நடிக்க பெரிய ஸ்கோப் எல்லாம் இல்லை. சமுத்திரக்கனியின் தங்கச்சியாக வர்ற second ஹீரோயின் சூப்பரா இருக்கு. வழக்கமான ஹீரோயின்கள் மாதிரி ரொம்ப அந்நியமா தெரியாம, நம்ம படிக்கிறப்போ ஸ்கூல்ல காலேஜ்லலலாம் நம்ம க்ளாஸ்லயே ஒரு அழகான பொண்ணு இருக்குமே.. அந்தப் பொண்ணை பாக்குற மாதிரியே ஒரு ஃபேஸ்கட் அந்தப் பொண்ணுக்கு. விக்ராந்த் கொஞ்சம் பெரிய அமெரிக்க மாப்பிள்ளை ரோல் பண்ணிருக்காரு. அவ்வளவுதான்.


இதுக்கு முன்னால சமுத்திரக்கனி எடுத்த படங்கள்ல ஒரு சமுத்திரக்கனிதான் இருப்பாரு. ஆனா இந்தப் படத்துல வர்றவன் போறவன் எல்லாம் சமுத்திரக்கனி மாதிரியே வசனம் பேசிக்கிட்டு இருக்காய்ங்க. ஒருத்தர் பேசுறதே பொறுக்க முடியல... அத்தனை பேரும் அதே மாதிரியா?


காட்சிகள் கதையோட ஓட்டத்த சப்போர்ட் பண்ணாம, கருத்து சொல்றதுக்காகவே நிறைய திணிக்கப்பட்டுருக்கு. சிங்கம் 2 படத்துல ஒரு காமெடி நோட் பண்ணீங்கன்னா, சூர்யா போலீஸ் ஸ்டேஷன்ல ஆக்ரோஷமா வசனம் பேசிட்டு வேகமா வண்டிய எடுத்துட்டு பாயை பாக்கப் போவாரு. அங்க பாய் பாவமா செவனேன்னு உக்காந்துருப்பாரு. அவருக்கிட்ட இவரே தம் கட்டி, ஊரு விட்டு ஊரு கண்டம் விட்டு கண்டம், ஏவுகணைடா பீரங்கிடான்னு வசனம் பேசி இவரு வண்டிக் கண்ணாடிய இவரே உடைச்சிக்கிட்டு திரும்ப வருவாரு. "ஏண்டா நா செவனேன்னு தானடா இருந்தேன்.. நீயா வந்த... பேசுன.. உடைச்ச... பொய்ட்ட"ன்னு பாய் மைண்டுல ஓடிருக்கும்.


அதே மாதிரி இங்க ஒரு சீன். ஒரு அரசியல்வாதி சமுத்திரக்கனியப் பாக்கனும்னு கூப்டு வரச்சொல்றாரு. அவ்வளவுதான்.. 'கூப்டுவரச்சொன்னது ஒரு குத்தமாடான்னு' கதறுற அளவுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாம வசனத்த அள்ளித் தெளிக்கிறாப்ள நம்மாளு. அதுவும் நம்மூர்ல எத்தனை வகை காளைகள் இருந்துச்சின்னு மூச்சுவிடாம ஒரு லிஸ்ட் படிக்கிறாரு.


முதல் பத்து வகைய சொல்லும்போது தியேட்டர்ல கைதட்டுனாயங்க. அடுத்த பத்து வகைய சொல்லும்போது விசிலடிச்சி கைதட்டுனாய்ங்க. அடுத்த பத்து வகைய சொல்லும்போது சவுண்டு கம்மி ஆயிருச்சி. அடுத்த பத்து வகைய சொல்லும்போது 'போதும்ப்பா.....' ன்னாங்க. அடுத்த பத்து வகைய சொல்லும்போது வெறியாயிட்டனுங்க... எவ்வளவு நீளம்.. யய்யாடி!


சரி இதுவரைக்கும் பாத்ததெல்லாம் படத்தோட மைனஸ்.. ப்ள்ஸ்ஸூன்னு பாக்கப்போனா முதல்ல படத்தோட மேக்கிங்... காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் மற்றும் ஒவ்வொரு காட்சியிலயும் வர்ற ஒரு சில ஒன்லைனர் ரொம்ப நல்லா இருந்துச்சு.


ஒரு சில வசனங்களும் ரொம்ப சூப்பர். 'உங்கள மாதிரி கெட்டவங்களையெல்லாம் ஒரு அளவுக்குத்தான் இந்த பூமி பொறுக்கும். கோவப்பட்டு ஒரு சிலுப்பு சிலுப்பிச்சின்னா கெட்டதெல்லாம் உள்ள போய் நல்லது மட்டும் மேல நிக்கும். அதுலருந்து இந்த உலகத்துக்கு தேவையான ஒரு தலைவன சல்லடை போட்டு சலிச்சி முன்னால வந்து நிறுத்தும்... அதுதான் இப்ப நடந்துக்கிட்டு இருக்கு'ன்னு ஒருவசனம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி.


'ஏண்டா பொண்ணுங்க உங்க மூஞ்சிய புடிக்கலன்னு சொன்னா புடிக்காத மூஞ்சிய ஏண்டா திரும்ப திரும்ப கொண்டு போய் காட்டுறீங்க.. அதுங்களுக்கு புடிக்கிற மாதிரி எதாவது பன்னுங்களேண்டா..' இன்னும் நிறைய வசனங்கள் ஞாபகம் இல்லை.


இன்னொன்னு படத்தோட நடிகர்கள் தேர்வு. வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, கு.ஞானசம்பந்தம், தம்பி ராமய்யா, நமோ நாராயணா எல்லாருமே நல்ல ஸ்க்ரீன் பிரசன்ஸ் உள்ளவங்க. வேல ராமமூர்த்தி பெண் கேக்கப் போற சீன்ல செமையா பண்ணிருக்காரு.


இப்போ இருக்க நடிகர்கள் பட்டாளத்துல தம்பி ராமைய்யா ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர். எந்த கேரக்டரா இருந்தாலும், நகைச்சுவையா இருந்தாலும், செண்டிமெண்ட்டா இருந்தாலும், Cunning ஆனா ரோலா இருந்தாலும் பிரிச்சி மேயிறவரு. இதுல IT ஆஃபீசரா ஒரு பத்து நிமிஷம்தான் வருவாரு. அவர் உடல்மொழியும், வசன உச்சரிப்பும் அப்டியே ஆஃபீசர் மாதிரி.. செம கெத்து. சூரியோட 10 நிமிட எண்ட்ரியும் அதகளம்..


ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு நல்ல கதையோட காட்சிகள் நகராம, சமீபத்துல நடந்த நிகழ்ச்சிகளையும், இளைஞர்கள் உணர்ச்சிகளையும் மையமா வச்சி, காட்சிகள அமைத்து அதன் மூலமா பணம் பன்ன பாத்ததுதான் இந்தப் படத்தோட ப்ரச்சனை. அதுவும் அவசர அவசரமா எடுக்கப்பட்டது மாதிரி தெரியிது. அதுமட்டும் இல்லாம சமுத்திரக்கனி ஸ்க்ரீன்ல இல்லாத காட்சிகள்லாம் ரொம்ப மோசமா ஏனோ தானோன்னு எடுத்த மாதிரி இருக்கு. சிலரோட நடிப்பு ரொம்ப செயற்கைத்தனம்.


படம் முடிஞ்சப்புறம், 'இந்த உலகில் வாழ்ந்ததற்கான அடையளத்தைப் பதிவு செய்யுங்கள்' எழுத்து போட்டு முடிச்சாரு, 'ஏண்ணே... ஆதார் கார்டு எடுக்கனும்ங்குறதுக்குத்தான் இப்புடி ரெண்டு மணி நேரம் சுத்தி சுத்தி எடுத்துருந்தியா? இத முன்னாலயே சொல்லிருக்கலாமேன்'னு நினைச்சிக்கிட்டேன்.


மொத்தத்துல தொண்டன் சமுத்திரக்கனியோட முந்தைய படைப்புகள் அளவு தரமானதுன்னு சொல்ல முடியாது. நடிகர்களோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்காகவும், ஒருசில நல்ல வசங்களுக்காகவும் ஒரு தடவ பாக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Audience review of Samuthirakkani's Thondan movie.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more