யோகி பாபு தலையில் கொட்டிய சிறுமி.. தூய்மை மிஷனின் அட்டகாசமான ஒரு விழிப்புணர்வு வீடியோ!
சென்னை: தமிழ்நாட்டில் தூய்மைப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. "கொட்டுனா வலிக்குமா?" என்ற தலைப்பில் உருவான இந்த வீடியோவில், பிரபல நடிகர் யோகி பாபுவும், ஒரு பள்ளிச் சிறுமியும் நடித்துள்ளனர்.
இந்தக் காணொலி மூலம், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையைப் பிரித்து அப்புறப்படுத்துவதன் முக்கியத்துவம் நகைச்சுவையாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தலைநகர் சென்னை மட்டுமின்றி, கோவை, மதுரை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரங்களின் விரிவாக்கம் போன்ற காரணங்களால், குப்பைகளை நிர்வகிப்பது அரசுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. மாநகராட்சிகள் முதல் ஊராட்சிகள் வரை திடக்கழிவு மேலாண்மை என்பது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இச்சூழலில், களப்பணியாளர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அரசு திடக்கழிவு மேலாண்மையின் பலன்கள் மற்றும் குப்பைகளைப் பிரித்துப் போடுவதன் அவசியத்தைப் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும், பல நகரங்களில் குப்பைகள் முறையாகக் கையாளப்படுவதில்லை என்ற புகார்கள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், "கொட்டுனா வலிக்குமா, தூய்மை மிஷன்" என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டார். சுமார் 38 விநாடிகள் ஓடும் இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், யோகி பாபு சிறுமியிடம் "கொட்டுனா வலிக்குமா.. வலிக்காதா?" என்று கேட்கிறார். அதற்குச் சிறுமி "கொட்டுனா வலிக்கும்" என்று பதிலளிக்கிறார். யோகி பாபு உச்சுக் கொட்டிவிட்டு "வலிக்காதுமா" என்கிறார். எதிர்பாராத விதமாக, சிறுமி யோகி பாபுவின் தலையில் கொட்டிவிட்டு "வலிக்குதுல்ல" என்று கேட்கிறார்.
யோகி பாபு, "சரியா கொட்டினால் வலிக்காது" என்று கூறுகிறார். சிறுமி "அப்போ இன்னொரு முறை கொட்டவா?" என்று கேட்க, யோகி பாபு "ஏய், நான் குப்பையை கொட்டினால் வலிக்காதுன்னு சொன்னேம்மா. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துத் தனியாகக் கொட்டினால் வலிக்காதுன்னு சொன்னேன். புரியுதா இல்லையா?" என்று விளக்குகிறார்.
அதற்குச் சிறுமி "எனக்கு புரியுது. உங்களுக்கு புரியுதா?" என்று திருப்பி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடல் நகைச்சுவையாகவும், அதே சமயம் குப்பைப் பிரிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications











