twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பறிவாளன்... மிஷ்கின் திரும்பவும் அதேதானா?

    |

    பூவே உனக்காக படத்துல விஜய்க்கும் சார்லிக்கும் ரூம் மேட்டா மதன் பாப் இருப்பாரு.. சார்லி அவர் கிட்ட 'நீங்க என்ன பன்றீங்க?'ன்னு கேட்டதும் மதன்பாப் 'கதை எழுதுறேன்'ம்பாறு. உடனே சார்லி 'வந்த படத்துக்கா வராத படத்துக்கா?'ன்னு நக்கலா கேப்பாறு. அதுமாதிரி வந்த படங்களுக்கு கதை எழுதுற இயக்குநர்கள் நிறைய பேரு இருக்காங்க. அதுல ஒருத்தர் மிஷ்கின். மக்கள் பாக்க நல்ல படங்கள் எடுக்குறது இயக்குநர்கள் ஒரு வகை. அவங்க பாத்த நல்ல படங்களையே திரும்ப எடுக்குற இயக்குநர்கள் ஒருவகை. இயக்குநர் மிஷ்கின் ரெண்டாவது வகை. அவர் பார்க்குற பிறமொழிப் படங்கள்ல அவருக்கு பிடிச்சதையெல்லாம் இறக்குமதி செஞ்சி நம்மூர்ல படமா எடுத்து நமக்கு போட்டுக்காட்டுவாரு.

    Thupparivaalan audience review

    மிஷ்கின் இதுவரை எடுத்த அனைத்து படங்களுமே வேற எதாவது ஒரு படத்துல இன்ஸ்பையர் ஆகி எடுத்ததுதான். கிஹூஜூரோ, பேட் மேன் போன்ற படங்கள்ல இன்ஸ்பையர் ஆகி நந்தலாலா, முகமூடி போன்ற படங்கள நமக்கு எடுத்துக் காமிச்ச மாதிரி இந்த தடவ ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சீரிஸ்ல இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம்தான் துப்பறிவாளன். டிடெக்டிவ் ஷெர்லாக்கும் அவருடைய நண்பர் டாக்டர் வாட்சனும் துப்பறியும் கதைகள் மிக சுவாரஸ்யமானவை. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படங்கள் பல வந்திருந்தாலும் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்த 'ஷெர்லாக்' என்ற ஆங்கில சீரிஸ் மிகவும் பிரபலம். அதுலதான் நம்மாளு இப்ப இன்ஸ்பையர் ஆகிருக்காரு. என்னது காப்பின்னு சொல்லணுமா? அய்யய்யோ அப்டியெல்லாம் சொல்லக்கூடாது. காப்பின்னு நம்ம சொன்னா அப்புறம் காப்பின்னா என்ன இன்ஸ்பிரேசன்னா என்ன, காப்பிக்கும் இன்ஸ்பிரேசனுக்கும் உள்ள வித்யாசம் என்னன்னு நமக்கு அரை மணி நேரம் விளக்கம்லாம் குடுப்பாங்க. ஏன் வம்பு.

    எடுக்குற படம் ஒழுங்கா இருந்தா இன்ஸ்பையர் ஆனாலும் காப்பி அடிச்சாலும் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சித்திரம் பேசுதடி நல்லாருந்துச்சி. நந்தலாலா நல்லாருந்துச்சி. ஆனா முகமூடிய கிரிஸ்டோஃபர் நொலனுக்கு போட்டுக்காமிச்சோம்னா அவர் நெஞ்சு வெடிச்சி செத்துருவார். அந்த அளவுக்கு இருந்துச்சி. இப்ப இந்த துப்பறிவாளன் எப்புடி இருந்துச்சின்னு பாப்போம்.

    ஒன்றுக்கொண்று தொடர்பில்லாத மூணு சம்பவங்கள் ஆரம்பத்தில் நடக்க, தனியார் துப்பறிவாளரான கணியன் பூங்குன்றனும் அவரது நண்பனும் துப்பறியிறதுதான் படத்தோட கதை. துப்பறியும் கதைங்குறதால கதைக்குள்ள ரொம்ப டீப்பா உள்ள போகத் தேவையில்லை. துப்பறியும் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுறதுக்கு பதிலா சொத சொதவென இழுக்குது. ஒரு க்ளூவிலிருந்து ன்னொரு க்ளூ.. அதை தொடர்ந்து போறப்போ தொடரும் கொலைகள்னு வழக்கமான அதே டெம்ப்ளேட் தான். சமீபத்துல வந்த குற்றம் 23 படத்துல வர்ற இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் ஏற்படுத்துன அளவு தாக்கத்துல பாதியை கூட இந்த துப்பறிவாளன் ஏற்படுத்தலன்னு சொல்லலாம்.

    விஷால் பெரிய ப்ரில்லியண்டுங்க.. அவரு பயங்கரமா கேஸெல்லாம் சால்வ் பன்னிருவாருங்கன்னு படத்துல இருக்கவங்கதான் சொல்லிட்டு இருக்காங்களே தவற பாக்குற நமக்கு அப்டி ஒண்ணும் தெரியல. கடைசி வரைக்குமே அவரும் பெருசா எதுவும் பண்ணல.

    ஷெர்லாக் சீரிஸ்ல ஷெர்லாக்கா வர்றவன் ஒரு வித்யாசமான மாடுலேஷன்ல கடகடன்னு பேசிக்கிட்டே இருப்பான். அதையே விஷால பண்ண வைக்க முயற்சி பண்ணிருக்காரு மிஷ்கின். விளைவு... மேல கிரிஸ்டோஃபர் நொலனுக்கு முகமூடிய போட்டுக்காட்டுனா என்ன நடக்கும்னு சொன்னோமோ அதேதான் இப்ப ஷெர்லாக்குக்கும்.

    அதுவும் விஷாலோட கெட்டப் இருக்கே... அபாரம். கவுண்டர் ஒரு படத்துல 'பிக்பாக்கெட் பெரியசாமி'ங்குற பேர்ல கழுத்துல கர்சீஃப் கட்டிக்கிட்டு ஒரு மாதிரி சுத்துவாரு. அதே பிக்பாக்கெட் பெரியசாமி கெட்டப்ப விஷாலுக்கு போட்டுவிட்டு, ஷெர்லாக் சீரிஸ்ல நடிச்ச பெனடிக்ட் கும்பர்பேட்ச் போட்டுருக்க தொப்பிய மாட்டிவிட்டு, மிஷ்கின் நைட்டுல நடக்குற ப்ரஸ் மீட்டுலயெல்லாம் போட்டுருப்பாரே ஒரு கருப்பு கண்ணாடி.. அதயும் எடுத்து விஷாலுக்கு போட்டுவிட்டா டிடெக்டிவ் கணியன் பூங்குன்றனுக்கான கெட்டப் ரெடி.

    மொத்த படத்திற்கும் விஷாலின் இந்த கெட்டப்பும், அவரின் வசன உச்சரிப்புகளும் ஒரு மிகப்பெரிய மைனஸ். அதுவும் ஹீரோயினிடம் விஷால் பேசுற விதம் நம்ம கடுப்பாகுற அளவுக்கு எரிச்சல்.

    கேமராவ நேராப் பாத்து பேசுனா அவர் சாதா பூபதி... கேமராவுக்கு சைடுல பாத்து பேசுறவந்தான் ஆல்தோட்ட பூபதி... படத்துல யாருமே கேமராவப் பாத்து பேசமாட்டேங்குறாங்க. கலகலப்பு படத்துல இளவரசுவ ஓங்கிக் குத்தி அவரோட கழுத்த ஒருபக்கமா திருப்பிருவாங்க. அதுக்கப்புறம் ஒரு சைடாவே பாத்துக்கிட்டு இருப்பாரு. எந்த வசனம் பேசுறதா இருந்தாலும் 'இரும்மா ஒரு பொசிசன்ல போய் நின்னுக்குறேன்'ன்னு ஒரு சுவத்து ஓரமாவோ இல்லை ஜன்னல் ஓரமாவோ போய் நின்னுட்டுதான் பேசுறாரு. மத்தவங்கள விடுங்க. ஒரு சின்னப்பையன் விஷாலப் பாக்க வருவான். அவன் கூட அப்டித்தான் எங்கயோ பாத்து பேசிக்கிட்டு இருக்காரு.

    மிஷ்கினுக்கு 'மொட்டை' செண்டிமெண்டுங்குறது ரொம்ப முக்கியம் போல. ஒவ்வொரு படத்துலயும் வில்லன் குரூப்புல ஒரு மொட்டை வெட்டியா இங்கிட்டும் அங்கிட்டும் சுத்திகினு இருக்கான்.

    ஒரு பதினைஞ்சி இருவது வருஷத்துக்கு முன்னால ஹீரோ கேஷூவலா சண்டை போடுற மாதிரி காட்ட ஃபைட்டுக்கு இடையில அவரு வேற எதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி காமிப்பாங்க. உதாரணமா ஜெமினி படத்துல காலேஜ் க்ளாஸ் ரூம்ல நடக்குற ஃபைட்டு ஒண்ணுல ரெண்டு பேர அடிச்சி வீசிட்டு மூணாவது ஆள் வர்ற கேப்புல விக்ரம் கைல வச்சிருக்க புத்தகத்த திறந்து படிப்பாரு. பழைய ரஜினி, பிரபு படங்கள்லயெல்லாம் இது மாதிரி காட்சிகள் நிறைய இருக்கும்.

    அந்த மாதிரி வழக்கொழிஞ்சி போன சண்டைக்காட்சி ஒண்ணு இதுலயும். மவுத் ஆர்கன் வாசிச்சிக்கிட்டே விஷால் சண்டை போடுறாப்ள.. ஒவ்வொருத்தனையும் அடிச்சிட்டு கிடைக்கிற கேப்புல மவுத்தார்கன் வாசிக்கிறாரு. மவுத்தார்கன் வாசிச்சிக்கிட்டே ஒருத்தன் மவுத் ஆவப் போறான்னு நினைச்சி சிரிச்சிட்டு இருந்தேன். அதுக்கும் மேல க்ளைமாக்ஸ பெரிய துப்பாக்கி வச்சிருந்த வில்லன்கிட்ட ஒரு சின்ன செடியப் புடுங்கி சண்டை போடுவாரு பாருங்க... உலக அரங்கிலேயே இப்படி ஒரு சண்டையை ஒருத்தர் கூட வைத்ததில்லைன்னு மார்தட்டிச் சொல்லலாம். வாழப்பழத்த வச்சி வெட்டுன பர்னிங் ஸ்டார் சம்பூர்ணேஷயெல்லாம் தூக்கி கடாசிட்டாப்ள.

    இப்பல்லாம் கிரீன் டீ குடிக்கிறத ரொம்பப் பெருமையா பல பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அத கிண்டல் பண்றதுக்காகவா என்னனு தெரியல படத்துல ரெண்டு சீன்ல ஹீரோயின் குடுக்குற கிரீன் டீய குடிச்சிட்டு, "இது கழுதை மூத்திரம் மாதிரி இருக்கு," "இது காண்டாமிருக மூத்தரம் மாதிரி இருக்கு"ன்னு விஷால் கமெண்ட் அடிக்கிறாரு.

    'அஞ்சாதே' படத்து வில்லன் குரூப் டெம்ப்ளேட்ல ஆள மட்டும் மாத்தி துப்பறிவாளன்ல நடிக்க வச்சிருக்காரு. அதாவது பாண்டியராஜனுக்கு பதிலா பாக்யராஜ்.. பிரசன்னாவுக்கு பதிலா வினய்.. மொட்டைக்கு பதிலா இன்னொரு புது மொட்டை. பாக்யராஜ் ஆளும் கெட்டப்பும் சிறப்பு. மணிரத்னம் பட ஹீரோக்கள் மாதிரி ஒரே ஒருவார்த்தை வசங்களத்தான் வச்சிருக்காங்க. அதே மாதிரி வினய்யும். எனக்குத் தெரிஞ்சி படத்துல அவரு பேசுன லென்த்தியான வசனம் 'ஒரு காஃபி!

    ஷெர்லாக் அருகிலிருக்கும் டாக்டர் வாட்சன் கேரக்டரில் பிரசன்னா. அனைத்து காட்சிகள்லயும் இருக்குறார்.. க்ளைமாக்ஸில் தன் பாத்திரத்துக்கு நியாயம் செய்றார்.

    மிஷ்கினோட அனைத்து படங்கள்லயும் ஒரே மாதிரியான காட்சிப்பதிவுகள் அலுக்குது. கதைக் களத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வெளிநாட்டு பாணி சண்டைக் காட்சிகள வைக்கிறது இந்தப் படத்துலயும் தொடருது. முட்டிக்கு கீழ காலமட்டுமே காட்டிக்கிட்டு இருக்க காட்சிகள் இந்தப் படத்துல கொஞ்சம் கம்மி. பாடல்கள் இல்லாதது நிம்மதி. படத்துக்கு ப்ளஸ்ஸூன்னு பாத்த வெகு சில காட்சிகள சொல்லலாம்.
    கதை அளவுல பெரிய குறை இல்லன்னாலும் ஒரு துப்பறியும் படத்துக்கு உண்டான விறுவிறுப்பை இந்தப் படம் நமக்குத் தர மறுக்குது. மொத்தத்துல நம்ம மனசு ஆறுதலுக்கு ஒரு தடவ பாக்கலாம்னு வேணா சொல்லிக்கலாம்.

    மிஷ்கின் சார் இனிமே உங்களுக்கு எதாவது வெளிநாட்டுப்படங்கள் புடிச்சிதுன்னு வைங்க... அந்தப் படத்துப் பேர மட்டும் சொல்லுங்க.. நேரடியா நாங்களே பாத்துக்குறோம்... ஏன் நீங்க வேற அதயே திரும்ப எடுத்துக்கிட்டு... உங்களுக்கும் நேரம் மிச்சம், எங்களுக்கும்!

    - முத்து சிவா

    English summary
    Audience review of Mysskin - Vishal's thupparivaalan movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X