பாபா படம் நஷ்டம்.. ரஜினியின் பெருந்தன்மை.. மனம் நெகிழ்ந்த திருப்பூர் சுப்ரமணியம்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா திரைப்படம் 2002ம் ஆண்டு வெளியானது.
அதிக எதிர்பார்ப்பில் வெளியான பாபா திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
இதனையடுத்து விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தை ரஜினிகாந்த் திருப்பிக் கொடுத்த சம்பவம் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் மனம் திறந்துள்ளார்.

ரஜினியின் பாபா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களுக்கு மட்டுமே திரைக்கதை எழுதியுள்ளார். 1993ம் ஆண்டு வெளியான 'வள்ளி' படத்துக்குப் பிறகு, 2002ல் பாபா படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியிருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் பாபா வெளியானது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்தார். ஆனால், அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பிய பாபா மிகப் பெரிய தோல்வியடைந்தது.

ரஜினியின் கதையே பாபா
படையப்பாவின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பின்னர் வெளியான பாபா, ஆன்மிகம், அரசியல் என்ற கலவையில் உருவாகி ரஜினியின் ரசிகர்களை ஏமாற்றியது. அதுவே படத்தின் தோல்விக்கும் மிகப் பெரிய காரணமாக அமைந்தது. இப்படத்தின் கதையை ரஜினி தனது சொந்த வாழ்வில் இருந்தே எழுதியிருந்தார் என்பதே உண்மை. நாத்திகரான ரஜினி ஆன்மிகத்தின் பக்கம் எப்படி செல்கிறார், பாபாவிடம் இருந்து கிடைக்கும் 7 மந்திரங்கள் அவரது வாழ்வை எப்படி மாற்றியது என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன். ஆனால், பாபா ரஜினி ரசிகர்களிடம் கூட வரவேற்பை பெறாமல் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

பணத்தை திருப்பிக் கொடுத்த ரஜினி
படையப்பாவில் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கிடைத்த லாபத்தை பாபா மொத்தமாக சூறையாடியது. இதனால் பரிதவித்துப் போன விநியோகஸ்தர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினிகாந்த் திருப்பிக் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மனம் திறந்துள்ளார். அதில், பாபா படத்தின் தோல்வி குறித்து ரஜினிகாந்த் தன்னிடம் கேட்டறிந்தார். மேலும், மொத்தமாக எவ்வளவு நஷ்டம் என நீங்களே கணக்குப் போட்டு சொல்லுங்க எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பெருந்தன்மை
விநியோகஸ்தர்களுக்கு அவர்களது நஷ்டத்துடன் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாயும், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்துடன் சேர்ந்து கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்துவிடலாம் எனக் கூறினாராம் ரஜினி. முன்னதாக இன்னொரு படத்தில் நடித்து இந்த நஷ்டத்தை சரிசெய்துவிடலாம் என ரஜினியின் நண்பர் முரளி சொன்னதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினி, பாபாவின் நஷ்டத்தை இங்கேயே சரி செய்வோம் என கூறியிருந்தாராம். மேலும், நஷ்டத்துடன் கூடுதல் பணம் ஏன் என கேட்டதற்கு, நம்ம படம் லாபமா தான் இருக்கணும், யாருக்கும் நஷ்டம் இருக்கக் கூடாது என ரஜினி பெருந்தன்மையாக தெரிவித்தார். அதேபோல், நானாக சென்று ரஜினியிடம் நஷ்டம் குறித்து பேசாத நிலையில், அவரே என்னை அழைத்து பாபா பட நஷ்டத்தை சரிசெய்துகொடுத்தார், இதுதான் அவரது பெருந்தன்மை என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.


Click it and Unblock the Notifications











