twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருமானமே இல்லாத தியேட்டர்ல திருட்டு விசிடி எடுக்கத்தான் செய்வான்!- திருப்பூர் சுப்பிரமணியம்

    By Shankar
    |

    சென்னை: வருமானமே இல்லாத ஒரு சில தியேட்டர்களில் திருட்டு விசிடி எடுக்கத்தான் செய்வார்கள்... என்ன செய்வது? என்று விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டுள்ளார்.

    சில தினங்களுக்கு முன் நடந்த மருது திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால் திருட்டு வீடியோ வெளியாகக் காரணம் தியேட்டர்கள்தான். எல்லா ப்ரிண்டும் தியேட்டர்களிலிருந்துதான் வெளியில் போகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் பொறுப்பு. தயாரிப்பாளர்கள் தான் திருட்டைத் தடுக்க உதவ முன்வர வேண்டும்," என்றார்.

    Tirupur Subramaniyam blasts actors in piracy issue

    விஷாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து வாட்ஸ் அப் மூலமாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் ஆடியோ:

    "திருட்டு விசிடி பற்றி விஷால் பேசியதைக் கேட்டேன். திருட்டு விசிடி என்னமோ தமிழ்நாடு திரையரங்குகளில் எடுப்பது போல மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிக் கிடையாது. தொடர்ச்சியாக 200 படங்கள் வெளியாகிறது என்றால், 5 முதல் 10 படங்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் திரையரங்கில் இருந்து எடுக்கப்படலாம். அது கூட அந்தத் திரையரங்க முதலாளியால் கிடையாது.

    சின்ன திரையரங்குகளில் ஒரு நாளுக்கு ரூ.2000 வருமானம் கூடக் கிடையாது. ஆகையால் அந்த திரையரங்கில் 3 அல்லது 4 ஆட்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் 2 மணிக்கு வேலை முடிந்து சென்றவுடன் வாட்ச் மேன் அல்லது ஆப்ரேட்டர் படுத்து தூங்குவார். அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தான் இந்த வேலை நடக்கிறது. அது கூட ஏதோ ஒரு சின்ன திரையரங்கில் தான் நடக்கிறது. அதைக் கூட தடுப்பதற்கு அதிகாலை 2 மணி முதல் 9 மணி வரை க்யூப் லாக் பண்ணி வைப்பதற்கு க்யூப்பில் கேட்டிருக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்துமே இதற்கு தயாராக இருக்கிறோம். சின்ன திரையரங்கில் நடப்பதை நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் நடப்பது போல பேசுகிறீர்கள். எல்லாத் துறைகளிலும் இருப்பது போல, இரண்டு மூன்று சதவிகித ஆட்கள் தப்பானவர்களாக இங்கும் இருக்கலாம். அவர்களை தண்டிப்பதற்கு நாங்களே தயாராக இருக்கிறோம்.

    ஒரு படத்தின் திருட்டு டிவிடி எங்கு எடுக்கப்பட்டது என்று கண்டறிய 54000 மட்டும்தான் செலவாகும் என்கிறீர்கள். வருடத்திற்கு 200 படங்கள் வெளியாகிறது என்றால் மொத்தம் ஒரு கோடி ஆகிறது. அனைத்து சங்கங்களும் ஆளுக்கு 20 லட்சம் போடலாம். திரையரங்கு உரிமையாளர் சங்கமும் 20 லட்சம் கொடுக்கத் தயார். எந்த படத்தின் டிவிடி வந்தாலும் நாமே போய் சோதனை செய்யலாம். நான் அடித்துச் சொல்கிறேன். அந்த 200 படங்களில் 190 படங்கள் வரை வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கும். ஆனால் நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் என்று மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்துதான் அதிக திருட்டு டிவிடிக்கள் வருகிறது. நீங்கள் வெளிநாட்டு உரிமை விற்கும் போது மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுகிறீர்கள். எல்லா உரிமையையும் கொடுத்துவிடுகிறீர்கள்.

    ஒவ்வொரு நாயகனும் வெளிநாட்டு உரிமையை வாங்கி இரண்டு வாரம் கழித்து வெளியிடலாமே. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கும் போது வெளிநாட்டு உரிமைக்கு ஓர் ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தற்போது முழுக்க டிஜிட்டல் மயம் என்பதால் எங்கு எடுத்தாலும் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட திரையரங்கிற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இணைந்து ஆறு மாதத்திற்கு படம் கொடுக்க வேண்டாம் என சொல்வோம். இரண்டாவது முறையும் அந்த திரையரங்கம், திருட்டு டிவிடி குற்றத்தில் பிடிபட்டால் அந்த திரையரங்கிற்கு படம் கொடுப்பதையே நிறுத்துவோம். திரையரங்கை மூட வலியுறுத்துவோம். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் அப்படியெல்லாம் தொழில் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.

    உங்கள் படம் வரும் போது மட்டுமே பேசுகிறீர்கள். முக்கியமான வீடியோ வெளிநாட்டில் இருந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வருகிறது என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். சின்ன திரையரங்குகளுக்கு என்ன வருமானம் பண்ணிக் கொடுக்கிறீர்கள். பெரிய நாயகர்கள் படம் வந்தால் அதிகமான விலை கேட்கிறீர்கள். நீலகிரி மாவட்டத்தில் 38 திரையரங்குகள் இருந்தது, தற்போது மொத்த மாவட்டத்திற்கும் சேர்த்து, ஊட்டியில் மட்டும் வெறும் 2 திரையரங்குகள் தான் இருக்கிறது தெரியுமா? ஒரு மாவட்டத்தில் இருக்கிற 36 திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பெரிய நடிகர்களின் படம் போடும் போது ரூ.300க்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என நீங்களே சொல்கிறீர்கள்.

    சென்னை திரையரங்குகளில் எத்தனை திரையரங்குகளில் நீங்கள் முன்பணம் அல்லது எம்ஜி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆனால் கோயம்புத்தூர், கடலூர் பகுதி தியேட்டர்கார்ரகள் அட்வான்ஸ் தரமாட்டேன் என்றால் எங்களது வருமானமே போச்சு என்று சொல்கிறீர்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகிற்கு மட்டும் 50, 40, 30 சதவீதம் என்பார்கள். எங்கே போனீர்கள் நடிகர்கள் எல்லாம்? சிறுதிரையங்கம் என்றால் 80 சதவீதம் கொடு, 5 லட்சம் அட்வான்ஸ் கொடு என்று கேட்டு அவனைப் போட்டு சாகடிப்பீர்கள். தியேட்டரை மூடினால் ஊருக்குள் பேசுவார்கள்.. மரியாதை வேண்டும் என்பதற்காக பலர் திரையரங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் நடிகர் சங்கத்தில் ஒரு நடவடிக்கை கூட எடுத்து விடாதீர்கள். டிக்கெட் ரூ.100க்கு மேல் விற்கக் கூடாது, விற்றால் ரசிகர்கள் எங்களிடம் சொல்லுங்கள் என நடிகர் சங்கம் சொல்ல வேண்டியதுதானே.

    கடந்த வாரம் டெல்லி கணேஷ் ஒரு ஆடியோ பேசியிருந்தார். தியேட்டர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார். முதலில் ஏன் உங்கள் பையனை நேரடி நாயகனாக்கினீர்கள். ரஜினி சார், கமல் சார் போல சிறு சிறு வேடங்களில் நடித்து நாயகனாக்கி இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னிறுத்தி பண்ணலாம். எடுத்தவுடனே விஜய் மாதிரி நேரடி நாயகன் என்று வந்துவிடுகிறீர்கள். விஜய்யை நாயகனாக்க அவங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா? கிட்டதட்ட 8 முதல் 10 படங்கள் சொந்த காசு போட்டு பண்ணினார். இயக்குநர்கள், நடிகர்கள் அவர்களின் மகன்கள் அனைவருமே நேராக நாயகன் தான் என்கிறீர்கள். படம் நன்றாக இருந்தால் ஓட்டுவதற்கு அனைவருமே தயாராக இருக்கிறார்கள். இறுதிச்சுற்று எங்கள் மல்ட்டிப்ளக்ஸில் இரண்டு ஷோ மட்டுமே போட்டோம். நன்றாகப் போனதால் 12 ஷோவாக எல்லா ஸ்கிரீனுக்கும் மாற்றினோம். நன்றாக இருந்து, ஜனங்கள் பார்த்தால் யார் என்ன என்பதெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை.

    எந்த திரையரங்க உரிமையாளர் ஒடுகிற படத்துக்கு திரையரங்கம் தரமாட்டேன் என்று சொல்லுவார். மக்கள் சிறிய படங்களைப் பார்க்க வருவதில்லை. அனைத்து நடிகர்களும்தான் வரவிடாமல் பண்ணிவிட்டீர்கள். ஏனென்றால் ஒரு பெரிய படத்திலேயே அவன் பையில் இருக்கும் மொத்த காசையும் பிடுங்கிவிடுகிறீர்கள். பின்பு எப்படி சிறிய படத்திற்கு வருவான்.

    அரசாங்கத்திடம் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யுங்கள். அனைத்து ஏரியாக்களுக்கும் சதவீத அடிப்படையில் படங்கள் தருகிறோம் என்று சொல்லுங்களேன். கார்ப்பரெட் கம்பெனிகளுக்கு 50 சதவீதம் கொடுப்பவர்கள் சிறு திரையரங்குகளுக்கும் கொடுங்கள். அந்த சிறு திரையரங்கில் கண்விழித்துப் படம் ஓடியதால் இன்று சொகுசாக வாழ்கிறீர்கள். யாரோ இரண்டு திரையரங்க உரிமையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லாதீர்கள்.

    நடிகர்களுக்கு ரூ. 5 கோடி, 10 கோடி, 30 கோடி, 40 கோடி என்று சம்பளம் வேண்டாம். லாபம் பொறுத்து சம்பளம் வாங்கலாம் என்று நடிகர் சங்கத்தில் இருந்து அறிவிக்க வேண்டியதானே. அதை விடுத்து ரூ.20 கோடி, 30 கோடி கொடு என்று தயாரிப்பாளரை நச்சரிக்க வேண்டியது ஏன்? மொத்தமாகக் கொடு, படப்பிடிப்பில் கேரவன் கொடு என்று கேட்கிறீர்கள். ஹீரோ, ஹீரோயின், காமெடியன் ஆளுக்கொரு கேரவன். ஏன் வெயிலில் நின்றால் கறுத்துப் போய்விடுவீர்களா?

    நாங்களும் வெயிலில் நின்று தான் தொழில் பண்ணுகிறோம். ஒரு படத்துக்கு சக்சஸ் மீட் என்று தயாரிப்பாளர் பணத்தில் ரூ.10 லட்சம், 20 லட்சம் என செலவு பண்ணுகிறீர்கள். 'பிச்சைக்காரன்' படத்துக்குத் தான் சக்சஸ் மீட் வைக்க வேண்டும். ஏனென்றால் வாங்கியதை விட 3 மடங்கு லாபம் கொடுத்தது அந்தப்படம்தான்.

    எதற்கு எடுத்தாலும் விநியோகஸ்தர் மீதும் திரையரங்க உரிமையாளர் மீதும் குறை சொல்லாதீர்கள். வெளிநாட்டில் பட வெளியீட்டை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் எந்த திரையரங்கில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது என்று நாங்களும் பார்க்கிறோம். எங்களுக்கு திருட்டு டிவிடிக்கு துணை போய் தொழில் பண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. எதற்கெடுத்தாலும் திருட்டு டிவிடிக்கு தமிழ்நாடு திரையரங்குகள் துணை போகிறது என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது.

    இப்போது டிவி உரிமை விற்பதில்லை. அதே போல வெளிநாட்டு உரிமையை விற்காமல் ஒரு 2 வாரங்கள் கழித்து விற்கலாமே. விற்றுப் பாருங்கள் அப்புறம் எப்படி திருட்டு டிவிடி வருகிறது என்று பார்க்கலாம்."

    திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்தப் பேச்சுக்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது அடுத்த கட்டுரையில்...

    English summary
    In an audio clip, exhibitor Tirupur Subramaniyan slammed actors and producers for blaming theater owners for video piracy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X