Bison: பைசன் படம் பார்த்த பாஜக அண்ணாமலை.. எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்லி இருக்காரு பாருங்க!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் பைசன். இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் அப்லாஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படம் முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 35 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தைப் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். ஹரி நாடார் ஒருவரைத் தவிர, இப்படி இருக்கையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பைசன் படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், " அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் - காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

வேலிகளைக் கடந்து வளர வேண்டும்: அர்ஜுனா விருது வென்ற இந்திய கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். அவரது சாதனை அத்தனை எளிதாக கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தை தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் திரு. மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிப்புத் திறன்: கதாநாயகன் துருவ், இந்தத் திரைப்படத்திற்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் பசுபதி, லால் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். சகோதரர் மாரி செல்வராஜ், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாக தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரியாக்ஷன்: இந்த பதிவில் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் ஆகியோரை டேக் செய்துள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. காலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாதிய படங்கள் எடுக்க கூடாது என்று அறிக்கை வெளியிடுகிறார், மதியம் அண்ணாமலை பைசன் படத்தை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகிறார். இது அரசியல் தளத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











