அச்சச்சோ.. விபத்தில் சிக்கிய ஸ்பைடர்மேன் நடிகர்.. மண்டையில் அடிபட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதி
ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படப்பிடிப்பில் நடிகர் டாம் ஹாலண்டுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கிளாஸ்கோவில் நடந்த சண்டைக் காட்சியின்போது இந்த விபத்து நிகழ்ந்தது.
சண்டைக் காட்சியின்போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, லேசான மூளை அதிர்ச்சி உறுதிசெய்யப்பட்டது. டெட்லைன் செய்திப்படி, அவர் முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகரின் பாதுகாப்பிற்காக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத ஒரு சண்டைக் காட்சியின் போது இந்த காயம் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர். சில நாட்களில் அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புவார் என ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் வேறு எந்த நடிகர் அல்லது படக்குழு உறுப்பினருக்கும் காயம் ஏற்படவில்லை. படப்பிடிப்பு ஷெட்யூலில் மாற்றங்கள் குறித்து விவாதிக்க நாளை ஒரு தயாரிப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாம் ஹாலண்டுக்கு சமீபத்தில் டிஸ்லெக்ஸியா மற்றும் ADHD இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலை சில சமயங்களில் அவரது நடிப்பு திறனை எப்படி பாதிக்கிறது என்பதையும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஹாலண்ட் ஒருமுறை பேசும்போது, "எனக்கு ADHD மற்றும் டிஸ்லெக்ஸியா உள்ளது. சில சமயங்களில் ஒரு காலித் தாளைக் கொடுக்கும்போது அது பயமுறுத்துவதாக இருக்கும். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கும்போது இதுபோன்ற சவால்களை எதிர்கொள்கிறோம்" என்று கூறினார்.
"ஒரு இளம் வயதினராகவோ அல்லது பெரியவராகவோ, ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்திக்கவும், மாற்றங்களைச் செய்யவும் உங்களைத் தூண்டும் எதனுடன் நீங்கள் தொடர்பு கொண்டாலும், அதை அதிகம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஏழு வயதில் தனக்கு டிஸ்லெக்ஸியா இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதை சமாளிக்க தான் எடுக்கும் முயற்சிகள் பற்றியும் டாம் ஹாலண்டு முன்பு பகிர்ந்துள்ளார். உலகளவில் ஸ்பைடர் மேனாக பிரபலமான டாம் ஹாலண்ட் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வதை அறிந்த அவரது ரசிகர்கள் டாம் ஹாலண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். சமீபத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆரும் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











