திருச்சி "லிங்கா"வுக்கு சிக்கல் தீர்ந்தது - போராட்டத்தை கைவிட்டு விட்டு கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!
திருச்சி : விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததால், திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. அங்கு 12 தியேட்டர்களில் லிங்கா படம் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம் தமிழகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை நாளை வெளியிட முடிவு செய்யப்பட்டு, தமிழகத்தின் பெரும்பாலானப் பகுதிகளில் தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

லிங்கா படம் வெளியாகும் தியேட்டர்களில், பேனர் கட்டுவது, கட்டவுட் வைப்பது உள்ளிட்டப் பணிகளில் ரஜினி ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், திருச்சியில் மட்டும் லிங்கா படம் ரிலீசாக உள்ள தியேட்டர்கள் முடிவு செய்யப்படாமல் குழப்பம் நிலவியதால், ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சினையின் காரணமாக நாளிதழ்களில் இன்று வெளியான லிங்கா பட விளம்பரத்திலும் தியேட்டர்கள் பற்றிய அறிவிப்பில்லை. இதனால் லிங்கா படத்தை ரிலீஸ் நாளன்றே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை எனில் இன்று மாலை சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட அவர்கள் முடிவு செய்திருந்தனர். இதனால், திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே இருந்த பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. மேலும், திருச்சியில் 12 தியேட்டர்களில் லிங்கா ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து திருச்சி ரஜினி ரசிகர்கள் தங்கள் போராட்ட முடிவைக் கைவிட்டனர். லிங்காவைக் காண ஆர்வமுடன் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











