For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கைவிட்ட கணவர்-கமிஷனரிடம் டிவி நடிகை புகார்

  By Staff
  |

  அலைபாயுதே ஸ்டைலில் தான் காதலித்து மணம் புரிந்து கொண்ட கணவர், தன்னைக் கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவாகி விட்டார். அவரைக் கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான சுபாஷினி என்கிற ஸ்ரீதேவி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

  சென்னை வளசரவாக்கம் சுப்ரமணி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி என்கிற சுபாஷினி (28). இவர் முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். சில டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். திடீரென இவர் சின்னத்திரைக்கு விடை கொடுத்து விட்டு ஒதுங்கினார்.


  அதன் பிறகு இவர் குறித்த தகவலே எதிலும் இல்லை. இந்த நிலையில் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் பெங்களூரைச் சேர்ந்தவள். அங்கு என்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் பேஷன் டிசைனிங் படித்து வந்தேன். பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தேன்.

  நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளேன். என்னுடன் நடிகைகள் த்ரிஷா, ஸ்னேகா, தீபா உள்ளிட்டோர் மாடல்களாக இருந்தனர். நான் ஒரு காலத்தில் த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கினேன். அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தேன்.

  டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன். டிவி தொகுப்பாளராகவும் இருந்துள்ளேன். விளம்பர படங்கள் தொடர்பாக என்னை சந்தித்த கீழக்கரையை சேர்ந்த முஷாமில் என்பவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது.


  இருவரும் நெருங்கிப் பழகினோம். பின்னர் யாருக்கும் தெரியாமல் ரகசியப் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். பிறகு எங்களது காதலும், கல்யாணமும் அனைவருக்கும் தெரிய வந்தது.

  அவர் என்னை முஸ்லிம் மதத்திற்கு மாற்றினார். நானும் முஷாமிலும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தோம். அவருடன் ஒன்றாக குடும்பம் நடத்த ஆரம்பித்த பின்னர் தான் அவரது உண்மையான உருவம் புரிந்தது. அவர் ஒரு முழு நேர சூதாடியாக இருந்தார்.

  நானும் முஷாமிலும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தோம். குடித்து விட்டு பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பார். அதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இடையில் நான் 2 முறை கர்ப்பமானேன். ஆனால், கட்டாயபடுத்தி என்னை கருகலைப்பு செய்ய வைத்தார்.

  இந் நிலையில் மீண்டும் கர்ப்பமானேன். ஆனால், நிறைமாத கர்ப்பிணியாக உள்ள என்னை விட்டுவிட்டு கணவர் முஷாமில் தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டார்.

  நான் அவரைப் பார்க்க முயன்றபோதும் என்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவரது நண்பர் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் வரதட்சணை எதிர்பார்ப்பதாகவும், வராவிட்டால் 2வது கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

  இன்னும் சில தினங்களில் எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது. என் குழந்தைக்கு தகப்பன் வேண்டும். அது அனாதையாகி விடக்கூடாது. நடிகையாக இருப்பதை விட குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம் என ஆசையோடு தான் காதலித்து திருமணம் செய்தேன். இன்று நிர்க்கதியாக விடப்பட்டுள்ளேன்.

  எனது கணவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது 2வது கல்யாண முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார் சுபாஷினி என்ற ஸ்ரீதேவி.

  இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X