ராம் அப்துல்லா ஆண்டனி பட இசை வெளியீட்டு விழா.. பொடி வைத்து பேசிய விஜய்யின் அப்பா!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பின்னர் தனது வீட்டிலேயே முடங்கி உள்ளார். 41 பேர் உயிரிழந்த சோகம் அவரை ஆட்கொண்டுள்ளது என்றாலும் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விரைவில் கரூருக்கும் உயிரிழந்தவர்களின் ஊருக்கும் சென்று வர விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், ராம் அப்துல்லா ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசும்போது, " தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் வந்துள்ளது. ஆனால் இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல் கோட்டை படத்தைப் போல ஆழமான திரைக்கதையுடன் எந்த படமும் வெளியாகவில்லை. எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்து விஜய்க்கும் நீங்கள் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அந்த கொடுப்பினையும் பாக்கியமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

நான் சமீபகாலமாக சினிமா நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை. 7 மணிக்கு டின்னரை முடித்து விட்டு, 9 மணிக்கு தூங்கிவிடுவேன், அதனால் தான் இந்த வயதிலும் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த விழா பகலில் நடப்பதால் ஒப்புக் கொண்டேன். இது மட்டும் இல்லாமல், 11.30 மணிக்கு எனது அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் ஒன்று உள்ளது. எனவே நான் பாதியில் கிளம்பி விடுவேன். ராம் அப்துல்லா ஆண்டனி படத்தின் டிரைலரைப் பார்த்ததும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.
சுவாரஸ்யமான டிரைலர்: டிரைலரில் ஒரு முக்கியமான விசயம் கொடுத்து உள்ளார்கள். அதில் போஸ்ட்மார்டம் செய்தால் கூட கண்டுபிடிக்க கூடாது என்று வசனம் உள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சில நேரங்களில் சொன்னால் தப்பு ஆகிவிடும், ஆனால் டிரைலரில் அப்படி சொல்லி இருப்பது தவறு இல்லை. டிரைலரில் ஒரு சேலஞ்சும் விடுகிறார்கள், அதாவது, 'இந்த கேஸ் முடியுற வரைக்கும் சிரிக்க கூடாது என்பதுதான் அது.
பெரிய ஸ்டார்களை வைத்து: இப்போது உள்ள டிரெண்ட்டே சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் பண்ணலாம். போட்ட பணத்தை எடுத்துவிட முடியும்.அதேபோல் புதுமுக, இளம் நடிகர்களை வைத்து படம் பண்ணலாம், ஆனால் நடுத்தரத்தில் இருக்கும் நடிகர்களை வைத்து படம் பண்ண யாரும் தயாராக இல்லை. அப்படி நடுத்தர நடிகர்களை வைத்து படம் எடுத்தால் தயாரிப்பாளர் காணாமல் போய்விடுவார், இயக்குநர் காணாமல் போய்விடுவார். இப்படியான படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் இப்போது இல்லை. பெரிய ஸ்டார்களின் படத்தை தயாரிக்கத்தான் தயாரிப்பாளர்கள் உள்ளார்கள். இந்த படத்தை எடுக்க தயாரிப்பாளருக்கு 2.5 கோடிகள் செலவாகி உள்ளது. இயக்குநர் மீது தயாரிப்பாளருக்கு இருந்த நம்பிக்கைக்கு நன்றி.

நம்பிக்கை முக்கியம்: அந்த நம்பிக்கைதான் வெற்றி பெற வைக்கும். மனிதனுக்கு அடிப்படையிலேயே நம்பிக்கை மிகவும் முக்கியம். நாம் ஜெயிப்போம் என்று நினைத்து ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிப்போம். வயது, அனுபவம், அறிவு, திறமை இது எல்லாம் பிறகுதான், முதலில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை உள்ளவன் தான் ஜெயிப்பான்" என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











