மீண்டும் கிராமத்து கெட்டப்பில் சசிகுமார்… எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நந்தன் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார் தற்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார்.
சசிகுமார் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார்.
கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சரவணன் இயக்கும் நந்தன் படத்தில் சசிகுமார் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

நடிப்பில் பிசியான சசிகுமார்
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம். முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரையுடன் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், அடுத்து ஈசன் என்ற படத்தை இயக்கினார். அதன்பின் படம் இயக்காமல், தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சசிகுமார், அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். கடந்த இரு வாரங்களில் நான் மிருகமாய் மாற, காரி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நந்தன் முதல் தோற்றம்
எப்போதுமே கிராமத்து கெட்டப்புகளில் உருவாகும் படங்களுக்கு கச்சிதமாக பொருந்திவிடுவார் சசிகுமார். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு கிராமத்துப் பின்னணியில் உருவாகவுள்ள நந்தன் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை உதயநிதி வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை பகுதியில் வாழும் நிலக்கிழார் ஒருவருக்கும், அவருடைய நிலத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளிகளுக்கும் இடையேயான வணிக உறவை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் தயாராவதாக சொல்லப்படுகிறது.

வித்தியாசமான லுக்கில் சசிகுமார்
கூலி தொழிலாளிகளின் வாழ்வியலையும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும் பின்னணியையும் நந்தன் படத்தில் பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், தனது தோற்றத்தை ரொம்பவே வித்தியாசமாக மாற்றியமைத்துள்ளார். முக்கியமாக அவருடைய பற்கள் கறையாக இருக்கும் வேண்டும் என்பதற்காக, தொடர்ச்சியாக ஒன்றரை மாதம் எப்போதும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாராம். சசிகுமாரின் இந்த புதுமையான லுக், ரசிகர்களிடமும் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடன்பிறப்பே கூட்டணி
சசிகுமார் மனைவியாக பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, நடித்து வருகிறார். அதேபோல், நிலக்கிழார் என்ற முக்கியமான கேரக்டரில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்து வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான 'கத்துக்குட்டி' மூலம் இயக்குநராக அறிமுகமான இரா.சரவணன், அதனைத் தொடர்ந்து 2021ல் ஜோதிகா, சசிகுமார் இணைந்து நடித்த 'உடன் பிறப்பே' என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் அவர் நந்தன் படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது. உடன்பிறப்பே படத்தை தொடர்ந்து சரவணன் - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications











