திடீரென அவசரம் காட்டும் வடிவேலு… நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் தேதி இது தானா?
சென்னை: வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
லைகா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தை வடிவேலுவின் ஃபேவரைட் சுராஜ் இயக்கியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இம்சை அரசனுக்கு வந்த சோதனை
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. 2006ம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் வடிவேலு. சிம்புதேவன் இயக்கிய இந்தப் படத்தை ஷங்கர் தயரித்திருந்தார். இந்தப் படம் கொடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட்டால், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டினார் வடிவேலு. அதனால், காமெடி கேரக்டரில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்த வடிவேலு, பின்னர் தேவையில்லாமல் பல பஞ்சாயத்துகளில் சிக்கினார்.

கம்பேக் கொடுக்குமா நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்?
இதனிடையே, ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 24ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு கமிட் ஆகியிருந்தார். ஆனால், வடிவேலுவுக்கும் சிம்பு தேவனுக்கும் பிரச்சினை ஏற்பட படமும் அப்படியே முடங்கிப் போனது. ஒருகட்டத்தில் பிரச்சினை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றதால், வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால், பல வருடங்களாக படங்கள் இல்லாமல் வீட்டில் இருந்த வடிவேலுவுக்கு இப்போது எல்லா பிரச்சினைகளும் முடிந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதியில் அவசரம்?
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது. வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் ஷிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல் கம்போசிங்காகவே லண்டன் வரை சென்று வந்தது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழு. படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

விரைவில் அறிவிப்பு
அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிசம்பர் 9ம் தேதி வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி 2, உதயநிதியுடன் மாமன்னன் ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். சந்திரமுகி 2, மாமன்னன் படங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், அந்தப் படங்களின் அப்டேட் வெளியாகும் முன்னரே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய வடிவேலு ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதாலேயே இந்த அவசரம் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.


Click it and Unblock the Notifications











