twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிபி ஸ்ரீனிவாஸ்... காதலை வளர்த்த குரல்.. கண்ணீர் துடைத்த குரல்- வைரமுத்து

    By Shankar
    |

    Vairamuthu and PB Srinivas
    சென்னை: பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ''அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல், கண்ணீரை துடைத்த குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது'' என்று கூறி உள்ளார்.

    பழம் பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள

    இரங்கல் செய்தி:

    அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்; கண்ணீரை துடைத்த குரல் இன்று முதல் பாடுவதை நிறுத்திக்கொண்டது. பி.பி.ஸ்ரீனிவாசின் குரல் வித்தியாசமான குரல். மழையில் நனைந்து வரும் காற்றாக சில்லிட்டு பரவும் தேன் குரல். மனதின் சந்து பொந்துகளை சலவை செய்யும் குரல். அதில் காதலின் லயமும் இருக்கும்; சோகத்தின் சுகமும் இருக்கும்.

    'காலங்களில் அவள் வசந்தம்', 'ரோஜா மலரே ராஜகுமாரி', 'மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்' என்று அவர் காதலை பாடும் போது அதில் கண்ணியம் இருக்கும். 'மயக்கமா கலக்கமா', 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்', 'கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்' என்று அவர் சோகத்தை பாடும் போது கண்ணுக்கு தெரியாத கண்ணீர் இருக்கும்.

    தாய் மொழி வேறாக இருந்தாலும் தமிழை தமிழாக உச்சரித்தவர் அவர். உடல் கடந்த வாழ்க்கை வாழ்கிறவன் மரணத்தை வெல்கிறான். அவர் உடல் மறைந்தாலும் உடலைப்போல் மறையாத பாடல்கள் காலமெல்லாம் காற்றோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்.

    நெஞ்சு வலிக்கிறது என்றாராம், உடனே உயிர் பிரிந்து விட்டதாம். அவர் பாடல்களைப் போலவே அவரது மரணமும் சுகமானது. காலங்களில் அவர் வசந்தம். கலைகளிலே அவர் சங்கீதம். பறவைகளில் அவர் ஆண் குயில். பாடல்களில் அவர் பி.பி.எஸ்.

    'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் திரையுலகில் அவர் பாடிய கடைசி பாடலை எழுதியவன் என்கிற முறையில் நான் மேலும் கண் கலங்குகிறேன். அவர் ரசிகர்களின் கண்ணீர் வரிசையில் முதலும் கடைசியுமாய் நான் நிற்கிறேன்.

    இவ்வாறு அந்த செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.

    English summary
    Poet Vairamuthu condoles for the demise of legendary play back singer PB Srinivas.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X