»   »  தமிழர்கள் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும்!- வைரமுத்து வேண்டுகோள்

தமிழர்கள் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும்!- வைரமுத்து வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது.

ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்த ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் இசைஅரங்கேற்றம் நடைபெற்றது.

Vairamuthu's appeal to Tamils

நாட்டுக் குறள் ஒலிப்பேழையை கவிஞர் வைரமுத்து வெளியிட திருச்சியை சேர்ந்த தங்கமணி தவமணி என்னும் அடிப்படைத் தொழிலாளி பெற்றோர்களின் குழந்தைகளான சூரியா, உமா, காவ்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் நாட்டுக் குறள் ஒவியப் பாடல் நூலும் வெளியிடப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் வள்ளுவருக்கு மணற்சிற்பம் அமைத்து மரியாதை செலுத்திய உலகப் புகழ்பெற்ற இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நடிகர் சிவக்குமாரால் கௌரவிக்கப்பட்டார். சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய திருக்குறள் பற்றிய மணல் ஓவிய அசைவூட்டுப்படம் திரையிடப்பட்டது.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, சிவக்குமார், இந்த விழாவில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஓவியங்கள் தீட்டிய டிராஸ்கி மருது, பரதநாட்டிய கலைஞர் பத்மாசுப்பிரமணியம், நீதியரசர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, "வள்ளுவர் விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளை மனப்பாடம் செய்து நடமாடும் திருக்குறள் பிரதிகளாகத் திகழவேண்டும்.

பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. என்பது இந்திய ஆட்சிப் பணி மட்டுமல்ல அதை இந்திய ஆராய்ச்சிப் பணி என்றும் குறிப்பிடத்தக்க வகையில் பாலகிருஷ்ணன் சிறந்த சிந்துவெளி ஆராய்ச்சியாளராகத் திகழ்கிறார்.

இங்கு திரண்ட கூட்டமெல்லாம் ஐ. ஏ. எஸ். அதிகாரத்திற்காகத் திரண்ட கூட்டமல்ல, வள்ளுவரின் 133 அதிகாரத்துக்குத் திரண்ட கூட்டம்," என வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.

பாலகிருஷ்ணன் கவிதையில் இடம்பெற்ற 'ஆண்கொத்தி மோகினி' என்ற சொல்லாட்சியையும் பாராட்டினார் வைரமுத்து.

விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், நீதியரசர் மகாதேவன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர்.

விழாவை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சங்கர சரவணன் ஆகியோர் தொகுத்து வழங்க வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக்குழுவின் நிறுவனர் சி. ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.

English summary
Poet Vairamuthu has appealed Tamil people to live like an example for Thiruvalluvar's Thirukkural.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil