twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது தெரியுமா? - கவிஞர் வைரமுத்து

    By Shankar
    |

    சென்னை: ஒரு எழுத்தாளனுக்கு தரும் உண்மையான மரியாதை அவர் எழுதிய புத்தகங்களை நூலகங்களுக்கு தொடர்ந்து வாங்குவதுதான் என்றார் கவிஞர் வைரமுத்து.

    நேற்று நடந்த எழுத்தாளர் அசோகமித்திரன் இரங்கல் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியது:

    Vairamuthu's tribute to Ashokamithran

    எழுத்துலகில் நல்லெழுத்து வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணி வரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக் கிடந்தது.

    ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை.

    நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. கரைந்த நிழல்கள் என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார். "படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று ஓர் இளம் நடிகை அடம்பிடிப்பாள். எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டுக் கடைசியில் தயாரிப்பாளர், 'தயவு செய்து வந்துவிடம்மா உன்னை இழிமொழியில் திட்ட விரும்பவில்லை ஏனென்றால் நீ என் மகளாகக்கூட இருக்கலாம்'" என்று சொல்வார். இப்படி நகையோடு கூடிய வலியும், வலியோடு கூடிய நகையும் அவர் எழுத்தில் இழையோடிக்கொண்டேயிருக்கும்.

    அவரது புலிக் கலைஞன் என்ற சிறுகதையைச் சிறந்ததாகச் சொல்வார்கள். அதைவிட அவரது 'பிரயாணம்' என்ற சிறுகதையைத்தான் ஆகச்சிறந்தது என்று அடையாளம் காட்டுவேன்.

    '40 ஆண்டுகளாக எழுதும் என்னை எந்த அரசியல் கட்சியும் அழைக்கவில்லை. ஏனென்றால் என்னைப்போன்ற எதார்த்தவாதிகள் அரசியலுக்குத் தேவையில்லை. நாங்கள் எதிர்த்தும் கோஷமிடமாட்டோம். அவர்களுக்கும் பயன்படமாட்டோம் என்று அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது,' என்று எழுதியிருக்கிறார்.

    வாழும்போது எழுத்தாளர்களைத் திண்டாடவிடுவதும் வாழ்ந்த பிறகு கொண்டாடுவதும் எழுத்தாளனுக்குத் தரப்படும் இரண்டு தண்டனைகளாகும்.
    அவருக்கு இனி பூப்போட வேண்டாம்; பூஜைசெய்ய வேண்டாம். அவரைப்போன்ற எழுத்தாளர்களின் நூல்களை விமர்சனத்திற்கு இடமின்றி நூலகங்களுக்கு வாங்கி வாசிக்கச் செய்வதுதான் அசோகமித்திரனுக்குச் செய்யப்படும் உண்மையான அஞ்சலி என்று கருதுகிறேன்.

    -இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

    English summary
    Poet Vairamuthu's speech at late writer Ashokamithran condolence meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X