படையப்பா எழுந்து வா... ரஜினி நலமடைய வைரமுத்து ட்வீட்
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்திற்கு அக்டோபர் 28 ம் தேதி இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரஜினி நலமாக இருப்பதாக லதா ரஜினிகாந்த்தும் தெரிவித்திருந்தார்.
கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ரத்த ஓட்டத்தை சரி செய்வதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. ரஜினி டிஸ்சார்ஜ் பற்றி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினியின் உடல்நிலையை கண்காணிக்க சிறப்பு டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரஜினி விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நெருங்கிய நண்பரும், சினிமா பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து, ரஜினி விரைவில் குணமடைய வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.
வைரமுத்து தனது ட்வீட்டில்,
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிக்காக மாஸான பஞ்ச் டயலாக்குகள் அடங்கிய பல சூப்பர்ஹிட் பாடல்களை வைரமுத்து எழுதி உள்ளார். வைரமுத்துவின் ட்வீட்டிற்கு பலரும் ரஜினி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











