»   »  முதற்படத்தில் முத்திரை பதித்தவர் - வசந்த்

முதற்படத்தில் முத்திரை பதித்தவர் - வசந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

மகேந்திரனின் திரைமொழிக்குப் பிறகு ஓரளவு மென்மை கைவரப்பெற்ற திரைமொழியை இயக்குநர் வசந்திடம் காணலாம். முழுமையாக மகேந்திரனோடு ஒப்பிட முடியாது என்றாலும் அந்தக் கலையமைதியின் சாயல் வசந்த் இயக்கிய தொடக்க நிலைப் படங்களில் காண்பட்டது. வசந்தின் அடையாளம் கேளடி கண்மணியும் நீ பாதி நான் பாதியும்தான். அதற்குப் பிறகு அவர் இயக்கிய படங்கள் பல வகைமைகளில் அலைபாய்ந்தன. ஆனால், கேளடி கண்மணியும் நீபாதி நான்பாதியும் நேர்கோட்டுக் காதலுக்கு மாற்றான காதல்களைக் கூறிய திரைப்படங்கள். அவ்வாறு கூறுகையில் அக்காதல்களை இருவகையாய்க் கிளைபிரித்து அதே திரைப்படத்தில் ஓர் ஒப்பீட்டையும் நிகழ்த்தியிருப்பார்.

அகவையில் மூத்தவர்களுக்கு வரும் காதலைச் சொல்வதில் நம் திரைப்பட இயக்குநர்களுக்குத் துணிச்சலே இருந்ததில்லை. வளர்ந்து அரும்பு மீசை முளைக்கத் தொடங்கும் நிலையிலிருந்து வாலிபப் பருவம் வரையிலான காதலையே இங்கே படமாக எடுத்தார்கள். இது ஆடவனின் வளர்நிலைப் படிகள்தாமே தவிர, காதலுக்குரிய பெண் இளமை மாறாக் குமரியாகவே இருப்பாள். அவ்விருவர்க்குமான காதலையே தொன்று தொட்டு இங்கே திரைப்படங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Vasanth, a first film wonder

காதலைத் தாண்டிய திரைப்படங்களை எடுப்பதற்கு இங்கே பல வணிகத் தடைகள் இருக்கின்றனதாம். அதனாலோ என்னவோ இளம்பருவ முதற்காதலைத்தான் மீண்டும் மீண்டும் படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செக்குமாட்டுத் தனத்தை முதல் மரியாதை திரைப்படத்தில் வெற்றிகரமாக உடைத்தவர் பாரதிராஜா. அவரும் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் முதிர்ச்சியடையாச் சின்னஞ்சிறுசுகளின் காதலைக் கூறியவர்தான். அதற்குக் கழுவாய் (பரிகாரம்) போலத்தான் முதல் மரியாதை என்னும் திரைப்படத்தை அவர் எடுத்திருக்க வேண்டும். "என்ன இது... வயசானவரோட காதலைப் படமாக எடுத்திருக்கே... இந்தப் படம் ஓடுமா ஓடாதா என்பது தெரியாது... அதனால் எனக்குச் சம்பளமாக எதுவும் வேணாம்," என்று இளையராஜா கூறியதாகச் சொல்வார்கள்.

முதல் மரியாதையில்கூட காதலர்தான் அகவையில் மூத்தவர். காதலி சின்னஞ்சிறிய அறியாப் பெண்தான். ஆனால், வசந்த்தின் கேளடி கண்மணியில் இளமை கடந்த வாழ்க்கையினர் ஒரு காதலை உணர்வார்கள். காலஞ்சென்ற பிறகு அவர்கள் தங்கள் பிள்ளைகளால் சேர்த்து வைக்கப்படுவார்கள். இன்றைக்கு நினைத்துப் பார்க்கும்போதும் அன்று கேளடி கண்மணி உணர்த்திய அதே நெகிழ்ச்சியை அடைகிறேன். பாடகர் பாலுவைப் போன்ற கனத்த உடலுடைய ஒருவரைக் காதலராகக் காட்டுவதற்குத் தம் திரைக்கதைமீது அவ்வியக்குநர் கொள்ளும் அழுத்தமான நம்பிக்கைதான் காரணம். ஓர் இயக்குநர் தம் முதற்படத்தில் அத்தகைய முயற்சியை மேற்கொண்டார் என்றால் அன்றிருந்த திரைக்கதைச் சூழலும் இதற்குத் தோதாக இருந்தது என்றே கருதலாம்.

Vasanth, a first film wonder

கணவனும் மனைவியும் மகளும் என்னும் அன்பான குடும்பம். அவ்விருவர்க்கும் அன்பு மகளே எல்லாமுமாய் இருக்கையில் மனைவி திடுமென இறந்துவிடுகிறாள். தனியொருவராக நிற்கும் தந்தை தம் மகளை வளர்த்து ஆளாக்குகிறார். வீட்டுக்கே வந்து மகளுக்குத் தனிப்பாட வகுப்பெடுக்கும் ஆசிரியையுடன் தந்தைக்குக் காதல் தோன்றுகிறது. தாயிழந்த மனமுடையில் இருக்கும் மகள் தந்தைக்கும் ஆசிரியைக்குமான உறவு முறியவதற்குக் காரணமாகிறாள். பிற்பாடு மகளுக்கும் ஒரு காதல் வரும்போது தந்தை எவ்வொரு எதிர்ப்பையும் காட்டாமல் ஏற்றுக்கொள்கிறார். தன் காதலைப் போன்றதுதானே தன் தந்தையினதும் என்றுணரும் மகள் அந்த ஆசிரியையைத் தன் காதலனோடு சேர்ந்து தேடிப் பிடித்துச் சேர்த்து வைக்கிறாள். இவற்றுக்கிடையில் கல்லூரி வேடிக்கைகள், ஜனகராஜின் கனவு கண்டால் பலிக்கும் நகைச்சுவைகள் என்று நல்ல கதம்பமாய் அமைந்த படம் கேளடி கண்மணி. வசந்தின் திரைக்கதையில் மகேந்திரனின் திரைக்கதையளவுக்குப் பன்முடிச்சுகள் இல்லை என்றாலும் கேளடி கண்மணியால் அவர் நமக்குள் தூண்டியெழுப்பும் நல்லுணர்ச்சியை அன்று படம் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அடைந்திருப்பார்கள். ஒரு திரைப்படம் செய்து காட்டும் அத்தகைய மாயவிளைவு என்றாவது ஒருமுறைதான் நிகழும்.

எண்பதுகளின் இறுதியில் ஆண்டுக்கு ஓர் இயக்குநர்கள் எதிர்காலத்தில் நன்கு சிறக்கப் போகின்றவர்களாகத் தோன்றினர். சுரேஷ்கிருஷ்ணா, விக்ரமன், கே. எஸ். இரவிக்குமார், பார்த்திபன், வசந்த் போன்றவர்கள் அவ்வரிசையினர். அவர்களில் இரவிக்குமார்தான் அடிக்கடி படமெடுத்துக் கொண்டிருந்தார். அவை ஒரே தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து வந்தன. அவ்வியக்குநர்கள் இனிமேல் எடுக்கவுள்ள படங்கள் வழியாக அடைய முடியாத உயரத்தை அடையப் போகின்றவர்கள் என்ற உறுதியையும் அன்றைய இதழாளர்கள் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கு அவர்களுடைய முதற்படங்கள் கட்டியங்கூறுமாறு அமைந்தன. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் வணிக வெற்றியை நோக்கியே படமெடுக்குமாறு தள்ளப்பட்டார்கள். பிறகு அவர்களிடமிருந்து தோல்விப் படங்களே நமக்குக் கிடைத்தன. பாலசந்தர் சென்ற பாதையில் சென்றிருந்தால் வசந்த் மேலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கக் கூடும்.

ஓர் இயக்குநராக வசந்தின் அடித்தளம் மிகச் சிறப்பானது. பாலசந்தரின் மாணவர்களில் தனியாய்க் குறிப்பிடப்பட வேண்டியவர் அவர். புதுப்புது அர்த்தங்களிலும் புன்னகை மன்னனிலும் பணியாற்றிய பின்னர் அவர்க்கு ஒரு திரைப்படத்தை எப்படிச் செய்வது என்பது தெளிவாய்ப் பிடிபட்டிருக்கும். ஆனால் மிகச்சிறந்த கதையை அடைவதில் வசந்த் தடுமாறியபடியே இருந்தார் என்றுதான் சொல்வேன். முன்னாள் இதழாளரான அவர்க்கு ஒரு கதையைச் செய்வது எளிமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், திரைப்போக்குகளுக்கேற்பத் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்னும் முயற்சியில் அவருடைய திரைமொழியின் மென்குரல் நசுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. கேளடி கண்மணியில் வெளிப்பட்ட அந்த அன்புணர்ச்சி பிறகு வெளிவந்த அவர் படங்களில் மட்டுப்பட்டே இருந்தது.

Vasanth, a first film wonder

வசந்த் தம் நேர்காணல் ஒன்றில் நீ பாதி நான் பாதி திரைப்படத்தின் தோல்வியைப் பற்றிக் கூறுகையில் கண்கலங்கிவிட்டார். அந்தத் திரைப்படம் காதலுக்குத் தன்னை ஈவதில் உள்ள இருவேறு நிலைகளைச் சுட்டியது. தம் திறன்கள் அனைத்தையும் பிழித்து கொட்டிய படமாக அதை அவர் ஆக்கியிருக்க வேண்டும். முதற்படத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இயக்குநரின் இரண்டாம் படம் படுதோல்வியடைந்தது. தம்மை வளர்த்தெடுத்த கவிதாலயா நிறுவனத்திற்கென்று எடுத்த படம். அந்தத் தோல்வி வசந்தின் மனத்தைப் பாதித்திருக்க வேண்டும். பிறகு அவருடைய படமாக்கங்கள் வேறு திசைகளில் நகர்ந்தன. நமக்கு வசந்த் என்றதும் அவருடைய முதலிரண்டு படங்களே மறவாத நினைவுகளாகத் திகழ்கின்றன.

English summary
Magudeswaran's article on Director Vasanth's initial stage success movies like Keladi Kanmani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X