»   »  லிங்கா விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்! - வேந்தர் மூவீஸ் மதன்

லிங்கா விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்! - வேந்தர் மூவீஸ் மதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று வேந்தர் மூவீஸ் மதன் எச்சரித்துள்ளார்.

ரஜினியின் லிங்கா படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் விநியோகித்தவர் வேந்தர் மூவீஸ் மதன்.

Vendhar Movies Madhan warned distributors in Lingaa issue

இந்தப் படத்தை அவரிடமிருந்து வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் படத்துக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள், போராட்டங்களின்போது, எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தார். இப்போதுதான் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈராஸ் நிறுவனத்திடமிருந்து ‘லிங்கா' திரைப்படத்தை ரூ.67 கோடிக்கு வாங்கினேன். உடனே இப்படத்தை விநியோகஸ்தர்கள் அனைவரும் பலத்த சிபாரிசுகளுடன் வந்து எங்களை வற்புறுத்தி என்ஆர்ஐ என்ற முறையில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அவ்வாறு வாங்கியதில் கோவை, சேலம் தவிர மற்ற விநியோகஸ்தர்கள் ரூபாய் 3 கோடியே 30 லட்சம் தராமல் ஏமாற்றி விட்டார்கள். நான் அதையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் படத்தை வெளியிட அனுமதி கொடுத்தேன்.

ஆனால் இவர்கள் படம் வெளியான ஐந்தாவது நாளே படத்தை பற்றி மிக மோசமாக, ரஜினி சாரை பற்றி இழிவாக ஊடகங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால் படத்தின் வசூல் பலமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக செய்திகளின் தாக்கம் சென்னையில் அதிகமாக இருப்பதால் நான் நேரடியாக வெளியிட்ட சென்னை நகர வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அதில் மட்டும் என்று நாலே கால் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

விநியோகஸ்தர்களின் தரக்குறைவான நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி பலமுறை நான் சொல்லியும் கேட்கவில்லை. நான்கு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள் நானே ரஜினிகாந்த் அவர்களிடம் பேசி தகுந்த இழப்பீட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். அதையும் அவர்கள் கேட்கவில்லை.

மாறாக உண்ணாவிரத போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், கீழ்தரமான அறிக்கைகள் என்று தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை நான் சொல்வதை கேட்டு ஒழுங்காக நடந்திருந்தால் ரஜினி அவர்கள் இன்னும் பெரிய அளவில் உதவி செய்திருப்பார்கள். ஆனால் இவர்களையெல்லாம் மன்னித்து பெரிய மனதோடும் அன்போடும் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களுடன் இணைந்து ஒரு பெரிய தொகையை வழங்கியுள்ளார்கள்.

இதை ரஜினி சார் அவர்களின் அழைப்பின் பெயரில் கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தமிழ் திரைப்பட சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, விநியோகஸ்தர்-தயாரிப்பாளர் அன்பு செழியன் ஆகியோர் மேற்படி பணத்தை சரியான முறையில் பிரித்து கொடுக்க முன்வந்தனர்.

அதற்காக ஒரு சரியான தீர்வையும் கொடுத்தனர். ஆனால் விநியோகஸ்தர்களில் நான்கு பேர் மட்டும் அவர்களை மதிக்காமல் எங்கள் நான்கு பேருக்கும் இவ்வளவு வேண்டும் என்றும் யார் யாருக்கு எவ்வளவு வேண்டுமென்றும் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் வழக்கமான ப்ளாக்மெயில் வேலையை தொடங்கிவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ‘லிங்கா' படத்தை திட்டி, ரஜினி சாரை திட்டி, ராக்லைன் வெங்கேடஷ் அவர்களைத் திட்டி, வேந்தர் மூவிஸை திட்டி அறிக்கை விட்டவர்கள் தற்போது ரஜினி சாரின் அழைப்பின் பேரில் செட்டில்மெண்டில் கலந்துகொண்டுள்ள கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் மூத்த விநியோகஸ்தருமான சுப்ரமணியம் அவர்களைத் திட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் இந்த பணியை அவரை செய்யுமாறு கேட்டுக் கொண்டது ரஜினிகாந்த் அவர்களும், ராக்லைன் வெங்கேடஷ் அவர்களும்தான். மேலும் இந்த இழப்பீட்டு தொகையையும் ராக்லைன் வெங்கேடஷ் அவர்கள் திருப்பூர் சுப்ரமணியம் அவர்களிடம்தான் கொடுத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிமேல் இதுபோல் அறிக்கை வெளியிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். இதுவரை பரபரப்பாக அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்த சிங்காரவேலன் இப்போது மௌனமாக இருப்பது ஏன்? மற்ற விநியோகஸ்தர்களுக்கு துரோகம் செய்துவிட்டு அவர் மட்டும் தனியாக ஏதும் வாங்கிக் கொண்டாரா அப்படி என்றால் வாங்கிய பணம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தராமல் எங்கே போனது? இதுமட்டும் போதாது என்று போராட்டம் நடத்திய செலவுகளையும் வழக்கு நடத்திய செலவுகளையும் எனக்கு தனியாக கொடுத்தாக வேண்டுமென்று மிரட்டி வருகிறார் சிங்காரவேலன்.

இந்த மோசடி விநியோகஸ்தர்கள் மீதும் எனக்கு ஒப்பந்தப்படி பணம் தராமல் ஏமாற்றிய விநியோகஸ்தர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ரஜினிகாந்த் தரும் பணத்தை சரியான அளவில் எல்லோருக்கும் ஒரே அளவு சதவிகிதத்தில் பிரித்துத் தரவேண்டும்.

அதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து ஒரு கமிட்டியை உருவாக்கி இதை சுமூகமாகவும், நியாயமாகவும் முடித்து கொடுக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் தியேட்டர் டெபாசிட் முழுமையாக திருப்பி கொடுக்கப்பட வேண்டும்.

அதற்கு அந்தந்த ஏரியா விநியோகஸ்தர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். கீழ்த்தரமான அறிக்கைகள் தருவதை நிறுத்திவிட்டு ப்ளாக்மெயில் செய்யும் கலாச்சாரத்தை அடியோடு கைவிட்டு விட்டு நியாயமான பாதைக்கு வரவேண்டுமென விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Lingaa main distributor Vendhar movies Madhan warned his dis distributors to stop their blackmail activities in Lingaa compensation issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil