வெற்றிமாறனின் விடுதலை ரிலீஸ் அப்டேட்… இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து வெளியிட முடிவா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் வெற்றிமாறன் பேசிய அரசியல் கருத்துகள் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் எப்போது ரிலீஸ் ஆகும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதிக்கட்டத்தில் விடுதலை
தமிழில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. சமீபத்தில் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்ற விடுதலை ஷூட்டிங் நிறைவடைந்தது. இதுவே விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து விடுதலை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் வெற்றிமாறன் பிசியாக உள்ளார்.

அரசியல் பேசிய வெற்றிமாறன்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு குறித்தும், சோழர்கள் இந்து கடவுளாக நிறம் மாற்றப்படுவது குறித்தும் பேசியிருந்தார். மேலும், திருவள்ளூவருக்கு காவி துண்டு அணிவிப்பது பற்றியும் பேசினார். வெற்றிமாறனின் இந்த பேச்சு, அரசியல் உலகிலும் திரையுலகிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறனுக்கு எதிராகவும் ஆதராகவும் பெரிய யுத்தமே நடந்து வருகிறது.

விடுதலை ரிலீஸ் தேதி
இதனிடையே விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, சத்தியமங்கலம் வனப்பகுதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காடுகளில் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடைபெற்றன. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வனப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது,. இந்நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வந்த விடுதலை பட ஷூட்டிங் முடிவுக்கு வந்தது குறித்து விஜய் சேதுபதி அப்டேட் கொடுத்திருந்தார், இதனையடுத்து இப்போது ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

நவம்பரில் முதல் பாகம்
விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், அதன் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, விடுதலை முதல் பாகம், நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் விடுதலை படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விடுதலை படம் குறித்து ரிலீஸ் தேதிகள், வெற்றிமாறன் ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளன.


Click it and Unblock the Notifications











