சக்தித் திருமகன் டிரெய்லர்: அரசியல் ஊழலை தோலுரிக்கும் வசனங்கள்.. அதை மட்டும் தவிர்த்து இருக்கலாம்!
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் டிரெய்லர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரெய்லரில் வரும் ஒரு வசனம், "வாழ்க்கை என்பது சுயநலத்துக்காக மட்டும் வாழ்வதல்ல. மற்றவர்களுக்காகவும் வாழ வேண்டும்" என்பதுதான் படத்தின் மையக் கருத்தை உணர்த்துவது போல் உள்ளது.
தேர்தல் அரசியல் என்பது பலருக்கு ஒரு முடிவில்லாத ஆதாரம். வாக்கு கேட்டு கொடியேற்றி கொள்ளையடிப்பது என ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கிறது. படத்தின் இந்த டிரெய்லர் அரசியல் பின்புலத்தை மையமாக வைத்து நகர்வது போல் தெரிகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரியாக செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதை சக்தித் திருமகன் திரைப்படம் விளக்குகிறது. "நீங்க அரசியல்வாதியா இருந்தா கட்சி ஆரம்பிச்சு விளையாட வேண்டியது தானே, பிரபலமாகணும்னு நினைச்சா நல்ல விஷயங்களை செய்து காமிக்க வேண்டியது தானே" போன்ற வசனங்கள் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.
ஒரு சாதாரண மனிதன் எப்படி அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுகிறான், அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், "அவன் செத்து தொலையனும் சார், என் கையாலேயே கொல்லணும்" போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றன.
அமைச்சர்கள் முதல் கலெக்டர்கள் வரை பாதி செக்ரட்டரியேட் அங்கு இருக்கும் என்பது போன்ற வசனங்கள் படத்தின் பிரமாண்டத்தை உணர்த்துகின்றன. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் சஸ்பென்ஸ் கலந்து நகர்வது போல் உள்ளது. படத்தின் முடிவில் "உன் பேர் என்ன" என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் காட்சி மிகவும் சிறப்பாக உள்ளது.
பண பலம் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் ஏழைகளை எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை இப்படம் தோலுரித்து காட்டுகிறது. மேலும், படத்தில் வரும் வசனமான "எல்லோரும் பயந்து ஒதுங்கினால் யார் தான் எழுந்து சண்டை போடுவது" என்ற கேள்வி சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அருவி, வாழ் படங்களை இயக்கிய இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிர்பாலினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 19ம் தேதி திரையரங்குகளை இந்த படம் தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கன் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு விஜய் ஆண்டனிக்கு இன்னொரு வெற்றியை இந்த சக்தித் திருமகன் பார்சல் செய்யும் என நம்பலாம்.
டிரைலரிலேயே ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் எந்தவொர் சென்சார் கட்டும் இல்லாமல், பயன்படுத்தப்பட்டு இருப்பது டிரைலரை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் என்பதற்காக வைக்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், எப்படியோ சென்சாரில் இந்த வார்த்தைகள் எல்லாம் ம்யூட் செய்யப்படும் என்றே தெரிகிறது. இதை மட்டும் கொஞ்சம் தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











