அஜித் படத்தால் பட்டதே போதும்.. தீபாவளி ரேஸில் இருந்து விக்னேஷ் சிவனின் LIK விலக இதுதான் காரணம்?
சென்னை: இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் (Dude) திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசியாக நாங்களும் தீபாவளிக்கு வருகிறோம் என விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படமும் அக்டோபர் 17 ரிலீஸ் என அறிவித்தது.
அதில் விருப்பமே இல்லையென்றாலும் பிரதீப் ரங்கநாதன் மாற்றி மாற்றி தனது படங்களின் அப்டேட்களை வெளியிட்டு வந்தார். எப்படியும் ஒரு படம் தான் தீபாவளிக்கு வரும் என்றும் இல்லையென்றால் அது பிரதீப் ரங்கநாதனுக்கே பாக்ஸ் ஆபீஸ் தோல்வியாக முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

மேலும், விக்னேஷ் சிவனின் எல்ஐகே திரைப்படம் தான் பின்வாங்கும் என்றும் குறிப்பிட்டு இருந்த நிலையில், தற்போது அதுவே நடந்துள்ளது. விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிவிப்பிலேயே தெளிவாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிடிவாதம் பிடித்த நிலையில் தான் எல்ஐகே பின் வாங்குவதாக அறிவித்து புதிய ரிலீஸ் தேதியையும் வெளியிட்டார்.
பொங்கலுக்கு குட் பேட் அக்லி வந்திருக்கணும்: கடந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித் குமாரின் விடாமுயற்சி வெளியாகும் என்றும் பொங்கலுக்கு குட் பேட் அக்லியை ரிலீஸ் செய்ய மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டது. ஆனால், கடைசியில், பொங்கலுக்கு விடாமுயற்சி வருகிறது, நீங்க கொஞ்சம் தள்ளிப் போங்க என அஜித் சொன்ன நிலையில், குட் பேட் அக்லி ரிலீஸ் தள்ளிப் போனது. ஆனால், கடைசியில் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகவில்லை. பொங்கலுக்கு திட்டமிட்டபடி விடாமுயற்சிக்கு முன்னதாக குட் பேட் அக்லி படம் வெளியாகி இருந்தால் 300 முதல் 400 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்தனர்.

தீபாவளியை விட முடியாது: பொங்கலுக்கு செய்த அதே தவறை மீண்டும் தீபாவளிக்கு செய்துவிடக் கூடாது என்பதில் தெள்ளத் தெளிவாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இருப்பதால் தான் விக்னேஷ் சிவனின் எல்ஐகே படத்தின் டீசருக்கு வரவேற்பு கிடைத்த நிலையிலும் டியூட் படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் உறுதியாக உள்ளனர்.
டிராகன் வெற்றியை அறுவடை செய்யணும்: ஒருவேளை எல்ஐகே வெளியாகி சொதப்பி விட்டால், அதன் பின்னர், டிராகன் படத்தின் வெற்றியை டியூட் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக அறுவடை செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும். இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. டியூட் படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தமிழ்நாட்டில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
குட்டி ரஜினி: டியூட் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன் எனக் கூறியுள்ளார். குட்டி தனுஷ் என பிரதீப் ரங்கநாதனை சொல்லி வரும் நிலையில், குட்டி ரஜினியாக மாற அனைத்து வேலைகளையும் அவர் பார்த்து வருகிறார் என்கின்றனர்.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்குமா?: டியூட் திரைப்படத்தின் பாடல்கள் ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்த நிலையில், அதன் பின்னர் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. நாய்க்கு பிரதீப் அடித்த லிப் கிஸ் காட்சிகளும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்த படம் பிரதீப்புக்கு வெற்றிப் படமாக அமைந்தால் 150 கோடி முதல் 200 கோடி வரை வசூல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே நேரம் தீபாவளிக்கு பல இளம் நடிகர்கள் படங்களும் வெளியாக உள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸ் குறையவும் வாய்ப்புகள் அதிகம். இதில், கொடுமை என்னவென்றால் டிசம்பர் 18ம் தேதி அவதார் படத்துடன் எல்ஐகே மோதுகிறது.


Click it and Unblock the Notifications











