»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
சுனாமி அலைகளின் பெரும் தாக்குதலுக்கு ஆளாகிய கடலூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.

கடந்த டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாக இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, வாசல், உறவுகளை இழந்து அனாதைகளாயினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரங்கள் பல பக்கங்களில் இருந்தும் நீண்டன. இந்தி நடிகர் விவேக் ஓபராய் ஒரு படி மேலே போய், கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்திலேயே முகாமிட்டார். பெற்றோருடன் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை மட்டும் வழங்காமல் தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.

ஆனால் தமிழ் சினிமா நடிகர்களில் விஜயகாந்த்தைத் தவிர வேறு யாருமே அந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. நடிகர் சரத்குமார், தனது சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அருகே உள்ள கடலோர மக்களை மட்டும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சுனாமி பாதித்த பகுதிகளுக்கு தமிழ் நடிகர்கள் யாரும் போகவில்லை என்ற வாதம் பெரிதாக எழுந்தபோது, தமிழ் நடிகர்கள் அங்கு போனால் பிரச்சினை எழும் என்று சப்பைக் கட்டு கட்டினார் விஜயகாந்த்.

தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணுப்பா வசன புகழ் ரஜினியோ படத்துக்கு ரூ. 1 கோடி வாங்கும் அவரது மாப்பிள்ளை தனுஷோ பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டிக் கொண்டிருக்கும் கமலும் மும்பையில் இருந்து இரங்கல் தெரிவித்ததோடு சரி.

இந் நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு வந்தார் விஜய். அவருடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் வந்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட தாழங்குடா என்ற கிராமத்தில் மீனவர்களின் உடைந்த படகுகள், வீடுகளையும் பார்த்து கண் கலங்கிய விஜய், கிராமத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

சுமார் 1,000 பேருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று மக்களிடம் உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார்.

சுனாமி நிவாரணத்துக்காக சென்னையில் உண்டியல் ஏந்தி நிதி திரட்டிய விஜய், தனது சொந்தப் பணமாக ரூ. 15 லட்சத்தை வழங்கியதோடு மேலும் ரூ. 10 லட்சத்தைத் தர உறுதியளித்துள்ளார். இவரது ரசிகர் மன்றத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரிசி முட்டைகளை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil