Sakthi Thirumagan :விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் சூப்பரா? சுமாரா? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: விஜய் ஆண்டனி தயாரித்து, அவரே நடித்துள்ள திரைப்படம் சக்தித் திருமகன். இப்படத்தை அருவி, வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி, வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண், கண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
மழைவால் கிராமத்தில் ஒரு பெண் கை குழந்தையுடன் வாழ்ந்து வருகிறாள். அவள் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறாள். அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன விசாரணை நடத்திய போது, பெரிய செல்வாக்கு படைத்த சிலர் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது போல, உடலை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு நாடகமாடி உள்ளனர். அதேபோல, இந்தப் பெண்ணின் கை குழந்தையை காட்டில் வீசிவிட்டு சென்ற விடுகிறார்கள். இந்த கதை ஒரு பக்கம் இருக்க, வில்லன் அரசியல்வாதிகளிடமும், அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு படைத்தவராக இருக்கிறார். அந்த செல்வாக்கை பயன்படுத்தி, நினைத்ததை சாதித்து வருகிறார். இவரிடம் பயிற்சி எடுத்தவர் தான் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி.

படத்தின் கதை: வில்லன் பெரிய அளவில் செய்து வரும் தொழிலை, ஹீரோ விஜய் ஆண்டனி சிறிய அளவில் செய்து வருகிறார். அதாவது, தமிழகத்தில் கவர்மெண்ட், தமிழக அரசியல் யாருக்கு எது வேண்டுமானாலும் போன் காலிலேயே முடித்து, அதற்கான கமிஷனை எடுத்துக்கொள்கிறார்.அப்போது தான், ஹீரோவான விஜய் ஆண்டனிக்கு ஒரு பெரிய டீலை முடித்துக்கொடுக்கும் வேலை வருகிறது. இதை கச்சிதமாக விஜய் ஆண்டனி செய்து முடித்து ரூ 6000 கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறார். இந்த விஷயம் வில்லனின் காதுக்கு போக, விஜய் ஆண்டனிக்கு எதிராக வில்லன் திரும்புகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் சக்தி திருமகன் திரைப்படத்தின் கதை.
மைனஸ்: படத்தில் ஹீரோ ஒரு ஊழல் செய்பவர் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அதை அழுத்தமாக சொல்லவில்லை. அதேபோல படத்தினுடைய வில்லன் எந்த விஷயத்தையும் நேரடியாக செய்யாததால், வில்லன் மீது எந்த ஒரு பயமும் வரவில்லை. படத்தில், ஒரு வலுவான வில்லன் இல்லாதது மிகப் பெரிய மைனஸ் என்று சொல்லலாம். அதேபோல இரண்டாம் பாதியில் ஹீரோ வில்லனை எப்படி எதிர்த்து சண்டை போட்டார் என்பதற்கு அழுத்தமான காட்சி அமைப்பு இல்லை. படத்தினுடைய ஹீரோயின் அறிமுகமான போது ஒரு சுவாரஸ்யமாக இருந்தது. ஹீரோயினால் பெரிய திருப்பம் கதையில் ஏற்படும் என காத்திருந்தால், அதெல்லாம் எதுவுமே இல்லை என்று வந்த வேகத்திலேயே ஹீரோயின் சென்று விட்டார்.
ஒருமுறை பார்க்கலாம்: இந்தத் திரைப்படத்தை சிவாஜி, ஜென்டில்மேன் கதையை மனதில் வைத்துக் கொண்டு எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த திரைப்படத்தின் களமே வேறு. இந்த திரைப்படத்தை அனைவருக்கும் புரியும்படி ஒரு படமாக எடுத்து இருந்தால், இந்த திரைப்படம் ஒரு சிறப்பான படமாக அமைந்திருக்கும். இருந்தாலும் இந்த திரைப்படம் ஓகே ரக படம் என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











