முடிவு எடுத்தால் முதல்வர் தான்...விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
மதுரை : முடிவு எடுத்தால் முதல்வர் தான் என்ற வாசகத்துடன் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் தமிழக அரசியல் களமே பரபரக்க துவங்கி உள்ளது. விஜய் அரசியல் பிரவேசத்தை எப்போது அறிவிப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில் இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா சமயத்திலேயே விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படமும் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால் பீஸ்ட் டீசர் எப்போது, ப்ரீ ரிலீஸ் வியாபாரம் எப்படி உள்ளது என பீஸ்ட் பற்றிய தகவல்கள் தான் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

படங்களில் பிஸியான விஜய்
பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பே விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை வம்சி பைடபள்ளி இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். இது தமிழ், தெலுங்கில் உருவாக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வருகிறார் விஜய்.

விஜய்யின் அரசியல் ஆலோசனை
மற்றொரு புறம் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அவ்வப் போது விஜய் ரகசியமாக அரசியல் தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாகவும், இதனால் விஜய்க்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

முடிவெடுத்தால் முதல்வர் தான்
ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் பீஸ்ட் பட அப்டேட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், மதுரை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில், விஜய் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, முடிவெடுத்தால் முதல்வர் தான். 2021 ல் தளபதி (மு.க.ஸ்டாலின்), 2026 ல் தளபதி (விஜய்). 2026ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என விஜய்யின் போட்டோவிற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video

2026ல் தமிழக முதல்வர் விஜய்யா
இந்த போஸ்டரின் மற்றொரு புறத்தில், 2026 அரசியல் ஆலோசகர், தளபதி மக்கள் இயக்கம், தமிழ்நாடு என பிரசாந்த் கிஷோரின் போட்டோவும் போடப்பட்டுள்ளது. விஜய், பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பிரச்சனையாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் போஸ்டரில் பிரசாந்த் கிஷோரின் போட்டோ இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் முடிவெடுத்தால் முதல்வர் தான் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











