விஜய் சேதுபதியின் காமெடியான ரவுடிசம்… நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல்… 7ம் ஆண்டில் ‘நானும் ரவுடி தான்’
சென்னை: விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்த திரைப்படம் நானும் ரவுடி தான்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.
நானும் ரவுடி தான் படம் உருவான போது தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது.

நானும் ரவுடி தான்
2012ல் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான 'போடா போடி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அடுத்த படத்திற்காக பல முயற்சிகள் செய்த விக்னேஷ் சிவனுக்கு விஜய் சேதுபதியும் நயன்தாராவும் ஒன்றாக கை கொடுத்த படமே 'நானும் ரவுடி தான்.' இதில் இன்னொரு சிறப்பாக தனுஷ் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி என கலக்கல் கூட்டணியில் உருவான இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

மேஜிக்கல் மேக்கிங்
ஆனால், நானும் ரவுடி தான் படம் வெளியானதும் டாக் ஆஃப் தி டவுனாக மாறியது. விஜய் சேதுபதி, நயன்தாரா இருவருமே நடிப்பில் வெரைட்டி காட்ட, விக்னேஷ் சிவன் மேக்கிங்கில் பிரமாதப்படுத்தினார். ரொம்பவே சிம்பிளான கதையை வைத்துக்கொண்டு காட்சிகள் மூலம் திரைக்கதையை நகர்த்தியது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் போன நயன்தாராவிற்கு அவரது அப்பா உயிரிழந்தது தெரியக்கூடாது என்பதற்காக விஜய் சேதுபதி செய்யும் அட்ராசிட்டிகள் முதல் பாதி என்றால், இரண்டாம் பாதி இன்னும் மாஸ் காட்டியது.

காமெடி ரவுடி
தன்னை பெரிய ரவுடியாக பில்டப் செய்யும் பாடி லேங்குவேஜில் விஜய் சேதுபதி அதகளம் பண்ணிருப்பார். உண்மையில் விஜய் சேதுபதியை பெரிய ரவுடியாக நினைத்துக்கொள்ளும் நயன்தாரா, அவரது உதவியோடு வில்லன் பார்த்திபனை பழிவாங்க கணக்குப் போடுவார். இதனை சமாளிக்க முடியாமல் விஜய் சேதுபதி மொக்கை வாங்குவதும், இறுதியாக நயன்தாராவின் லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதும் தான் மொத்த கதையும். தன்னைத் தானே பெரிய ரவுடியாக காட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி, காதலுக்காக எப்படியெல்லாம் பாடாய்படுகிறார் என காமெடி கலட்டாவாக விருந்து படைத்தார் விக்னேஷ் சிவன்.

கை கூடிய காதல்
2015 அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான நானும் ரவுடி தான் வித்தியாசமான கதைக்களம், புதுமையான திரைமொழி என மாஸ் காட்டியது. இதற்கெல்லாம் ஆஃப் ஸ்கீரினில் பலமாக இருந்தது அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும். நானும் ரவுடி தான் படத்துக்காக அனிருத் போட்ட காதல் மெலடியில், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலில் விழுந்தனர். அப்போது கை கூடிய காதல், இன்று திருமணம், இரட்டை குழந்தை என எல்லாம் சுகமாக சென்றுவருகிறது. காதலிக்காக ரவுடியாக இருப்பதை விட ரவுடி போல நடிப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது 'நானும் ரவுடி தான்.' இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆனதை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பு போஸ்டருடன் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











