கமல் தயாரிப்பில் உதயநிதிக்கு பதிலாக சீனில் வரும் விஜய் சேதுபதி... எல்லாம் இதுதான் காரணமா?
சென்னை: விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ள கமல், உதயநிதியையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் படத்தில் நடிக்க வைக்க கமிட் செய்திருந்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி, கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

கமல் - உதயநிதி கூட்டணி
ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பட தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்த உதயநிதி, ஒருகட்டத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார். இதனிடையே விக்ரம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த கமல்ஹாசன், மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். முதலில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ஒரு படத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் விக்ரம் வெற்றி விழாவில் பேசும் போது, ராஜ்கமல் ஃபிலிம்ஸின் அடுத்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார் என, அவரை மேடையில் ஏற்றி அறிவித்தார். இந்தப் படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக உள்ளதாகவும் கமல் அப்போது கூறியிருந்தார்.

மாமன்னன் தான் கடைசி
இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஏஆர் ரஹமான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி, மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என உறுதியாகக் கூறிவிட்டார். மேலும், கமல் தயாரிப்பில் ராஜகமல் ஃபிலிம்ஸ்காக நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுவதாகவும் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இதனால், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருந்த படம் என்ன ஆனது என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது.

கமலின் புதிய முடிவு
நடிப்பில் இருந்து விலகினாலும் தொடர்ந்து பட தயாரிப்பில் மட்டும் உதயநிதி கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது. கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் உடன் உதயநிதியும் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உதயநிதி நடிக்கவிருந்த படத்தில் அவருக்குப் பதிலாக இன்னொரு முன்னணி ஹீரோவை களமிறக்க கமல் முடிவு செய்துள்ளாராம். இந்த தகவலின் படி கமல் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அன்புத் தம்பி விஜய் சேதுபதி
விக்ரம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து, கமல்- விஜய் சேதுபதி இடையே நல்ல நட்பு காணப்படுகிறது. விஜய் சேதுபதியை தனது தம்பி என்ற ரீதியில் பேசி வருகிறார் கமல். சமீபத்தில் கூட விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போதும் விஜய் சேதுபதிக்காகவும், அவர் மீதான அன்பிற்காகவும் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் எனவும் கமல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமல் தயாரிப்பில் உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











