கமலின் விக்ரமுடன் மோதும் காத்து வாக்குல ரெண்டு காதல்...ரிலீஸ் தேதியை அறிவித்த டைரக்டர்
சென்னை : கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக டைரக்டர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இதனால் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது.
டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ள முக்கோண காதலை மையமாகக் கொண்ட படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. ரெமான்டிக், காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இளைஞர்களை ஈர்த்த பாடல்கள்
இந்த படத்தின் டூட்டூட்டூ, நான் பிழை போன்ற பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டு, அனைவரிடமும் பாராட்டை பெற்றது. அதிலும், சத்யா படத்தில் வலையோசை பாடல் போன்ற கெட்அப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் பஸ்சில் பயணம் செய்யும் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படம் காதல் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்படலாம் என முதலில் கூறப்பட்டு வந்தது.

ரிலீஸ் தேதி அறிவித்த விக்கி
ஷுட்டிங் முடிந்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது. இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள டைரக்டர் விக்னேஷ் சிவன், ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் மட்டும் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஏப்ரல் 28 ம் தேதி காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக விக்னேஷ் சிவன் புதிய போஸ்டருடன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

ஒரே நாளில் இரு படங்கள்
ஏற்கனவே விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடித்து வரும் கமலின் விக்ரம் படம் ஏப்ரல் 28 ம் தேதி தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அதே ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் படத்துடன் மோதுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஹீரோ - வில்லன் என விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படங்களில் எதற்கு மக்கள் ஆதரவு தரப் போகிறார்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

ஹீரோவா– வில்லனா
மாஸ்டர் படத்தில் முதல் முறையாக விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தொடர்ந்து பேட்ட படத்தில் ரஜினிக்கு, விக்ரம் படத்தில் கமலுக்கு என வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார்கள். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. அதே சமயம் அவர் ஹீரோ ரோலில் நடித்துள்ள படமும் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











