17 ஆண்டுகளுக்கு முன்பே, தந்தை மீதுள்ள அக்கறையில் ஓய்வெடுக்கச் சொன்ன விஜய்...எஸ்.ஏ.சி எனும் உழைப்பாளி
சென்னை: இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம் டா மாப்ள.
அதன் பிறகு விக்டிம் என்கிற ஆந்த்தாலஜியில் மிரேஜ் என்கிற பகுதியை இயக்கியிருந்தார்.தற்சமயம் ஜெயம் ரவி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கும் நடந்த பாசமிகு சம்பவம் ஒன்றை ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

எம்.ராஜேஷ்
எஸ்.எம்.எஸ் திரைப்படம் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் இயக்குநர் எம்.ராஜேஷ். அதன் பிறகு அவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படங்களின் வெற்றிகள் மூலம் ஹாட்ரிக் அடித்தார். ஆரம்பத்தில் மௌனம் பேசியதே திரைப்படத்தில் இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் ஒரு கட்டத்தில் அதிக துணை இயக்குநர்கள் இருந்ததால் அந்தப் படத்திலிருந்து வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அதன் பிறகு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சேர்ந்துள்ளார்.

மிலிட்டரி ஒழுக்கம்
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரனிடம் சுக்ரன், நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். இயக்குநரின் படப்பிடிப்பு தளம் ஒரு மிலிட்டரி கூடாரம் போல் இருக்கும் என்றும் அதனால் அனைவரும் ஒழுக்கமாக இருப்பார்கள் என்றும் நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் தனக்கு வசனம் எழுத வாய்ப்பு கொடுத்ததாகவும் அது மட்டுமின்றி படத்தின் சில காட்சிகளை துணை இயக்குநர்களை டைரக்ட் செய்ய சொல்வார் என்றும் அவரைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.

சுக்ரன் விஜய்
சுக்கிரன் படம் துவங்கப்பட்டபோது முதலில் அதில் விஜய் நடிப்பதாக இல்லை. அவருக்கு ஆர்வமும் அப்போது இல்லையாம். பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் கதை கூறியபோது அந்தக் கதை அவருக்கு பிடித்ததால் ஐந்து நாட்கள் கால் சீட் கொடுத்து நடித்தாராம். அப்போது அவரை வைத்து மொத்த காட்சிகளையும் படு வேகமாக எடுத்துவிட்டாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தச் சமயத்தில் இந்த படத்துடன் நீங்கள் ஓய்வு பெறுங்கள் அப்பா. ஜப்பான், சைனா, லண்டன் போன்ற நாடுகளுக்கு அம்மாவை அழைத்துக் கொண்டு சுற்றுப்பயணம் சென்று வாருங்கள் என்று விஜய் அக்கறையுடன் கூறினாராம்.

சினிமாதான் வாழ்க்கை
அப்போது, நான் சினிமாவில் இல்லை என்றால் சோர்வடைந்துவிடுவேன். சினிமாவில் இருந்தால்தான் என்னால் உற்சாகமாக இருக்க முடியும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாராம். அவர் கூறி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல திரைப்படங்களை இடைப்பட்ட காலத்தில் இயக்கி இன்றுவரை படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று எம்.ராஜேஷ் தனது இயக்குநரைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











