ராஜ்கிரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜயகாந்த் & சத்யராஜ் தயங்கினார்கள்... கஸ்தூரி ராஜா
சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாண்டி முனி என்கிற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக 2006-ஆம் ஆண்டு இது காதல் வரும் பருவம் என்கிற படத்திற்கு இசையமைத்து இயக்கியிருந்தார்.
தற்சமயம் அவர் கொடுத்துள்ள பேட்டியில் இயக்குநர்கள் விசு, பாரதிராஜா, ராஜ்கிரன் உள்ளிட்ட பலரைப் பற்றி சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

விசுவின் வாய்ப்பு
விசுவிடம் கஸ்தூரி ராஜா, டி.பி.கஜேந்திரன் போன்றவர்கள் துணை இயக்குநர்களாக வேலை செய்தார்களாம். அந்தக் காலகட்டத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் துணை இயக்குநர்கள் பலர் இயக்குநர்களாக இருந்தனர். ஆனால் விசுவிடம் இருந்தவர்கள் பெரிதாக வரவில்லை என்றதும் திடீரென்று ஒரு நாள் மூன்று துணை இயக்குநர்களை அழைத்து தயாரிப்பாளர்களை அழைத்து வாருங்கள் நான் உங்கள் படத்தின் நடிக்கிறேன் என்று கூறினாராம்.

தயங்கிய கஸ்தூரி ராஜா
மற்ற இருவர்களும் தயாரிப்பாளர்களை தேடிச் சென்றுவிட்டார்களாம். ஆனால் உங்களை வைத்து படம் இயக்குவதற்கு எனக்கு மனம் வரவில்லை, எனக்கு சிறிது காலம் அவகாசம் கொடுங்கள் என்று கஸ்தூரி ராஜா அவரிடமே மேற்கொண்டு பணியாற்றினாராம். அதன் பிறகு அவருக்கு சம்பள உயர்வும் கொடுத்தாராம் விசு. வெளியே போன டி.பி.கஜேந்திரன் 'வீடு மனைவி மக்கள்' என்கிற படத்தை விசுவை வைத்து எடுத்து மிகப்பெரிய வெற்றி கொடுத்திருந்தாராம். அப்போது ராமராஜனுக்கு கதை சொல்லும் வாய்ப்பு கஸ்தூரி ராஜாவிற்கு கிடைத்துள்ளது.

கதை சொல்ல தெரியாது
அப்போது ராமராஜனை வைத்து படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த ராஜ்கிரனிடம் கதையை கூறியுள்ளார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் கதை சொல்லத் தெரியாதாம் இவருக்கு. அதனால் ராஜ்கிரன் இவருடைய கதையை நிராகரித்துள்ளார். பின்பு ஒரு கேசட்டில் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுவது போலவே தானும் பேசி ஒலிச் சித்திரம் போல் கொடுத்தாராம். அதனை கேட்ட ராஜ்கிரண் உடனே ஆயிரம் ரூபாய்க்காண காசோலையை முன் பணமாக கொடுத்தாராம். ராமராஜனுக்கு அந்த கதை பிடிக்காததால், நீங்களே அதில் நடித்துவிடுங்கள் என்று கஸ்தூரிராஜா ராஜ்கிரனை நடிக்கச் சொன்னாராம்.

தயங்கிய நடிகர்கள்
முதலில் விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கும் அந்தக் கதை சொன்னதாகவும், மாயாண்டி என்கிற கதாபாத்திரம் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக இருந்ததால் அவர்கள் நடிக்க தயங்கியதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மாயாண்டி என்கிற கதாபாத்திரத்தில் பெரிய நடிகர்கள் நடித்தால் அவர்கள்தான் தெரிவார்கள். புதுமுகம் நடித்தால்தான் மாயாண்டியாக தெரிவார் என்று ராஜ்கிரனை நடிக்க வைத்தாராம். இன்றுவரை ராஜ்கிரனுக்கு மாயாண்டி கதாபாத்திரமும் மீனாவிற்கு சோலையம்மா கதாபாத்திரமும் நிலைத்து நிற்கிறது என்று கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











