கடவுள் கொடுத்த தேவதை தன்ஷிகா.. 2 மாதத்தில் திருமணம்.. விஷால் பேட்டி!
சென்னை: நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்து இருந்தார். இதையடுத்து, நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி வேகம் எடுத்த நிலையில், சாய் தன்ஷிகாவை காதலித்து வருவதாகவும், தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதி திருமணம் நடக்கும் என கூறியிருந்தார்.
ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடையாததால், இன்று விஷாலின் வீட்டில் சாய் தன்ஷிகாவின் பெற்றோர் மற்றும் விஷாலின் பெற்றோர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த போட்டோவை நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஷால் பேட்டி: இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், இன்னைக்குத்தான் என்னுடைய கடைசி பேட்லர் பிறந்தநாள். இன்னைக்கு எனக்கும் சாய் தன்ஷிகாவிற்கும் காலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பலரும் எனக்கு இணையத்தின் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கம் கட்டிடத்திற்காக ஒன்பது வருடங்களாக காத்துக் கொண்டிருந்தோம் இன்னும் இரண்டு மாதங்களில் கட்டிடத்தின் திறப்பு விழா கோலாகலமாக நடக்க உள்ளது. தன்ஷிகாவிடம் நான் ஒரு வேண்டுகோளை வைத்தேன், அவர்களும் என்னுடைய வேண்டுகோளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு காத்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
என் தேவதை: என்னுடைய பிறந்த நாளில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் நாங்கள் திட்டம் போட்டு இருந்தோம். தற்போது, நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிய இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைய உள்ளதால், தன்ஷிகாவும் இதற்கு ஒத்துக்கொண்டார். ,இதற்காக ஒன்பது ஆண்டுகள் காத்திருந்தேன் இன்னும் இரண்டு மாதம் தானே. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணைவியை கடவுள் எனக்கு தேவதையாக அனுப்பி இருக்கிறார். பல ஊர்களில் பார்க்கும் பெரியவர்கள் அனைவரும் எப்போது கல்யாணம் என்று கேட்கிறார்கள், அவர்களின் ஆசிர்வாதத்தோடு நிச்சயம் விரைவில் திருமணம் நடக்கும்.
2 மாதத்தில் திருமணம்: நடிகர் சங்கம் கட்டிடம் திறக்கப்பட்ட அடுத்த முகூர்த்தத்திலேயே என்னுடைய திருமணம் இருக்கும். இதற்காக பொருளாளர் கார்த்தியிடம், நடிகர் சங்க திருமண மண்டபத்தை புக் செய்து விட்டேன். இந்த மண்டபம் பத்துமா என கார்த்தி கேட்டார். எது எப்படி இருந்தாலும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தான் என்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது மட்டும் தான் என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது என நடிகர் விஷால் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











