ரஜினிக்காக தெரு தெருவாக இறங்கி பிரச்சாரம் பண்ணுவேன்- நடிகர் விஷால்- வீடியோ
சென்னை: தலைவர் ரஜினிகாந்துக்கு தொண்டனாக ரோட்ல இறங்கிப் போய் பிரச்சாரம் பண்ணுவேன் என்று நடிகர் விஷால் அதிரடியாகக் கூறியுள்ளார்.
திரையுலகில் இணையற்ற சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும்போதே தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார் ரஜினி. அவரது அறிவிப்பு வெளியான டிசம்பர் 31-ம் தேதி காலையிலிருந்தே தமிழக அரசியல் களம் இதுவரை காணாத பரபரப்பைக் கண்டு வருகிறது.
ரஜினியின் ஆன்மிக ஆரசியலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எதிர்பாராத பக்கங்களிலிருந்தெல்லாம் வந்தவண்ணம் உள்ளன. ரஜினியும் அசராமல், அரசியல் அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து அடுத்தடுத்து அதிரடி செய்து வருகிறார்.
31-ம் தேதி அரசியல் அறிவிப்பு, புத்தாண்டில் ரஜினி மன்றம் இணைய தளம் மற்றும் செயலி அறிவிப்பு, அடுத்த நாளே செய்தியாளர் சந்திப்பு, நேற்று கருணாநிதியுடன் சந்திப்பு, இன்று ஆர்எம் வீரப்பனிடம் ஆசி பெற்றது என தொடர்ந்து அரசியல் களத்தை சூடாகவே வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் திரையுலகிலிருந்து அவருக்கு பல ஆதரவுக் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால்.
ரஜினியின் அரசியல் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்," என்றார்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.