»   »  விவேகம் - ஆக மொத்தம் மூணு.. ச்சீயர்ஸ்!

விவேகம் - ஆக மொத்தம் மூணு.. ச்சீயர்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொஞ்ச நாள் முன்னால வரைக்கும் அஜித் விஜய் ரெண்டு பேர்ல யார் நல்ல ஹிட்டு குடுத்து அவங்கவங்க ரசிகர்கள சந்தோஷப்படுத்துறதுங்குற போட்டி பலமாவே இருந்துச்சி. ஆனா இப்ப அது அப்டியே தலைகீழாகிடுச்சி போல. ஆறு மாசத்துக்கு முன்னால விஜய்க்கு ஒரு பைரவான்னு அஜித் ரசிகர்கள் சந்தோஷப்பட்டாங்க. இப்ப விஜய் ரசிகர்கள் முறை!

வீரம், வேதாளம்னு இரண்டு படங்களைக் குடுத்தப்புறம் சிவா - அஜித் கூட்டணியில் மூன்றாவது படம். போஸ்டர், டீசர் ட்ரெயிலர் அத்தனையும் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்க, படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

Vivegam readers review

விவேகம் டீசர் வெளியான ஓரிரு தினங்கள்ல அந்த டீசர ஃப்ரேம், பை ஃப்ரேமா அலசி ஆராஞ்சி பாத்து ஒருத்தர் விவேகம் படத்துக் கதை இப்டித்தான் இருக்கும்னு சொல்லிருந்தாரு. அதாவது டீசர்ல வர்ற ஒரு அஜித் போலீஸ்னும், பின்னால திரும்பி நிக்கிற அஜித் உலக நாடுகள் பலவற்றில் தேடப்படுற மிகப்பெரிய கிரிமினல்னும் அவர் தான் படத்தோட வில்லன்னும் சொல்லிருந்தாங்க. உண்மையில சிவாவும் அவரோட டீமும் இந்தக் கதை எழுதுனவர தேடிக் கண்டுபுடிச்சி அவர அவங்களோட அடுத்த படத்துக்கு கதை எழுத யூஸ் பண்ணிக்குங்கன்னு சொல்றேன். ஏன்னா அந்தக் கதையே நல்லாருந்துச்சி!

இந்த ஹாலிவுட் படங்கள்லதான் டாம் க்ரூஸு, மேட் டாமன், டாம் ஹாங்க்ஸெல்லாம் குறுக்கயும் மறுக்கயும் ஓடி ஓடி சண்ட போட்டுக்கிட்டு இருப்பாங்க. என்னன்னு கேட்டா, உலகத்தையே அழிக்கப்போற பெரிய திட்டம் எதையோ முறியடிக்க போராடிக்கிட்டு இருக்கேன்னுவாங்க. அந்தத் திட்டம் உலகத்துலயே இவங்களுக்கு மட்டுதான் தெரியும். ஒட்டுமொத்த கவர்மெண்ட்டே இவங்களுக்கு எதிரா இருக்கும். ஆனாலும் இவங்க தனி ஆளா நின்னு உலகத்தக் காப்பாத்திருவாங்க. மிஷன் இம்பாஸிபிள், போர்னே, ஜேம்ஸ்பாண்ட் படங்கள்னு பல படங்கள்ல இதான் கதை. இப்ப அப்படி ஒரு தையிலதான் அஜித்தும் நடிச்சிருக்காரு!

Vivegam readers review

"மாப்ள... முப்பதாயிரம் ரூவா முழுசா குடுத்ததுக்கு அந்த நேப்பாள்கார கூர்க்கா காலையிலதான் கரெக்டா சோலி பாத்தான்"ன்னு கவுண்டர் புலம்புற மாதிரி, மூணு படம் வரிசையா குடுத்ததுக்கு இந்தப் படத்துலதான் சிவா 'சிறப்பா' வேலை பாத்துருக்காரு. ஆரம்பம் படத்து கதைய லைட்டா பட்டி டிங்கரின் பாத்து விவேகம் கதையாக்கிட்டாரு.

படத்துல மிகப்பெரிய பிரச்சனை கேமராவும், எடிட்டிங்கும். படம் பார்ப்பவர்கள் எதையுமே ஒழுங்காவோ தெளிவாவோ பாத்துறக் கூடாதுங்குறதுல இவங்க ரெண்டு பேருமே ரொம்ப கவனமா இருந்துருக்காங்க. பெரும்பால காட்சிகள்ல கேமாராவை தோளில் வைச்சிகிட்டே ஷூட் பண்ணிருக்காங்க. ஆட்டி ஆடிக்கிட்டு அதுவே எரிச்சல். ரெண்டு செகண்டுக்கு மேல எந்த ஷாட்டையுமே காமிக்கிறதில்லை. டக்கு டக்குன்னு காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. ஒருவேளை இந்த மாதிரி பண்ணா படம் ஸ்பீடா இருக்க மாதிரி இருக்கும்னு யாரும் ஐடியா குடுத்தாங்களா தெரியல.

ஒரு படத்துல எந்த கேரக்டரச் சுத்தி கதை நகருதோ மக்களும் அந்த கேரக்டரா இருந்துதான் படம் பாப்பாங்க. உதாரணமா ஹீரோவச் சுற்றி நடக்குற கதைன்னா, மக்களும் தங்களை அந்த ஹீரோ இடத்துல பொறுத்திக்கிட்டு கதையில பயணிப்பாங்க. இந்தப் படத்துல அந்த மாதிரி கதையோட நம்மால பயணிக்கவே முடியல. அஜித்திடம் இருக்கும் பரபரப்போ இல்லை பதற்றமோ படத்தோட எந்த சூழல்லயும் நமக்கு வரவே இல்ல.

படத்துல சூப்பரா இருக்கது விவேக் ஓபராய் மட்டும்தான். செம கெத்தா இருக்காரு. ஆனா பாருங்க கெத்தா வேஷம் போட்டு சிங்கம் படத்து விஜயகுமார் ரோல்ல நடிக்க வச்சிருக்காங்க. சிங்கத்துல விஜயகுமார் 'சரியா சொன்னீங்க தொரைசிங்கம்', 'சபாஷ் தொரை சிங்கம்'ன்னு சொல்ற மாதிரி விவேக் ஓபராய் படம் முழுக்க அஜித்துக்கு பில்டப் மட்டுமே குடுத்துக்கிட்டு இருக்காரு. 'அவன் யாருக்கும் பயப்பட மாட்டான்', 'அவன் போரடாம போவ மாட்டான்' 'அவன கொன்னாலும் சாகமாட்டான்'... சார் நீங்க இதயே திரும்பத்திரும்ப சொன்னீங்கன்னா ஒருத்தரும் தியேட்டருக்கு வரமாட்டான்!

அஜித்துக்கு பில்ட் அப் குடுக்கற வசனங்கள் எழுதுன கேப்புல கொஞ்சம் மற்ற வசனங்களும் படத்துல இருக்குன்னு மைண்டுல வச்சிருந்துருக்கலாம். காஜல் அகர்வால் பேசுற வசனமெல்லாம் ஒண்ணாப்பு ரெண்டாப்பு புள்ளைங்க எழுதிக்குடுத்த மாதிரி இருக்கு. இந்த ஃபீனிக்ஸ் பறவை உதாரணம் ஒண்ணு கிடைச்சி போச்சு இவங்களுக்கு. இவங்க தொல்லை தாங்காம ஃபீனிக்ஸ் பறவையே தற்கொலை பண்ணிக்கிற வரைக்கும் விடமாட்டாங்க போல.

கதைக்கும் கெட்டப்புக்கும் வசனத்துக்கும் சம்பந்தமே இல்லாம காமெடி பண்ண முயற்சிக்கிறாரு கருணாகரன். ட்ரெயிலர்ல "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்'ன்னு கருணாகரன் சொன்னதும், 'ஒரு டீ சொல்லுங்க'ன்னு தல சொல்லுவாரே. அதுதான் படத்துலயே செம்மையான காமெடி. அப்ப மத்ததெல்லாம் எப்டின்னு நீங்களே யோசிச்சுக்குங்க.

அக்சரா ஹாசன் ஒரு சின்ன ரோல். அவங்க ஒரு ஹேக்கர். நானும் வட ஆப்ரிக்காவுலயும் பாத்துருக்கேன் தென் ஆப்ரிககவுலயும் பாத்துருக்கேன். இப்புடி ஒரு ஹேக்கரப் பாத்ததே இல்லை. ஒரு சின்ன ஃபோன மட்டும் வச்சிக்கிட்டு அவங்க போற இடங்கள்ல உள்ள சிசிடிவி கேமரா, டெலிஃபோனd, Road Block ன்னு கண்ணுல படுற அனைத்தையும் ஹேக் பண்றாங்க!

அஜித் ரெண்டு கடந்த ரெண்டு படத்துல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆன மாதிரி தெரிஞ்சாரு. இந்தப் படத்துல மறுபடி பழையபடி ஆயிட்டாரு. வசன உச்சரிப்பெல்லாம் சிலது கேக்க முடியல.. "You..... will..... see........ my..... " சொல்லிக்கிட்டே இருங்க. இந்தா அந்த ஒரு சோடா வாங்கிட்டு வந்துடறேன்னு போயிடலாம். சர்வைவா பாட்டுல ஆளு செமை சூப்பரா இருக்காரு. இண்ட்ரோ சீன் நல்லாருக்கு. அதுலயும் பாலத்துலருந்து பல்டி அடிக்கிற சீன்ல லிங்கா க்ளைமாக்ஸ் கண்ணு முன்னால வந்து போச்சு.

இண்டர்வல்ல வழக்கம்போல அஜித்த ஒரு பத்து பதினைஞ்சி புல்லட்ட்ல சுட்டு, ஒரு மலையிலருந்து தூக்கி வீசிடுறாய்ங்க... கீழ விழுந்த உடனே கால்ல கையில குத்தியிருந்த குச்சியெல்லாம் புடுங்கி வீசிட்டு எக்ஸர்சைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறாரு. அட தல... அந்த நாலஞ்சி புல்லட்டு உடம்புக்குள்ள பாய்ஞ்சத எடுக்க மறந்துட்டிங்களே... நமக்கு ஞாபகம் இருக்கு, அவரு மறந்துட்டாரு பாருங்க.

இத்தனை புல்லட்டு, இத்தனை ஃப்ராக்சரையெல்லாம் ஹாஸ்பிட்டலுக்கு போகாம 'நடந்தே' குணப்படுத்திக்கிட்டவங்க உலகத்துலயே நம்ம தமிழ் ஹீரோக்கள் மட்டும்தான்!

சக்கரைப் பொங்கல் வடைகறி காம்பினேஷன் மாதிரி இருக்கிறது அஜித் - காஜல் அகர்வால் ஜோடி. கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிசிக்ஸ்னு எதுவுமே செட் ஆகல. அஜித் - காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனம்.

படத்துல நல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா இண்ட்ரோ சீன், சர்வைவா பாட்டு, ஒரு சில காட்சிகளில் கேமரா மற்றும் விவேக் ஓபராய். அஜித் ஒரு சில ஆங்கிள்ல செமையா இருக்காரு. மீசையில்லாம இந்த முழு வெள்ளைத் தலை பாக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அனிருத் குறை சொல்ற அளவுக்கு இல்லை. திரைக்கதை மற்றும் மேக்கிங் மெகா சொதப்பல்.

மொத்தத்துல அஜித் இருக்கார் அப்டிங்குற ஒரே காரணத்துக்காக பாக்கலாம். மத்தபடி... என்னத்த சொல்ல!

- முத்து சிவா

English summary
Muthu Siva's comical review on Ajith's Vivegam movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more