For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளையராஜா குடிப்பதில்லை.. ஆனா ஏழு மணிக்கு மேல எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார்!- விவேக்

By Shankar
|

இசைஞானி இளையராஜாவுக்கு மது அருந்தும் பழக்கமில்லை... ஆனால் ஏழு மணிக்கு மேல எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார், என தனக்கே உரிய பாணியில் பேசி கலகலக்க வைத்தார் நடிகர் விவேக்.

இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் போர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேச்சு சிறப்பாக அமைந்தது.

அந்த பேச்சிலிருந்து...

"இசைப்பிரியா தொடர்பான அந்த ஒரு காட்சியையே நம்மால தாங்கிக்க முடியல. தமிழனாக, மனிதனாகப் பிறந்த யாராலுமே தாங்கிக்க முடியாத காட்சி அது.

Vivek pours praises on Maestro Ilayaraaja

அந்த சென்சிடிவ் விஷயத்தை ஒரு திரைப்படமாக்கி, தமிழர்களுக்கு காணிக்கையாகத் தர வேண்டும் என்று இங்கே உள்ளவர்கள் கூட நினைக்காத நேரத்தில், கன்னடத்திலிருந்து ஒரு இயக்குநரும், தெலுங்கிலிருந்து ஒரு தயாரிப்பாளரும் வந்து படமாக்கியிருப்பதை என்ன சொல்லிப் பாராட்டுவது!

முன்பெல்லாம் சாப்ட்வேர் பற்றி கதைகள் வந்தன. இப்போதெல்லாம் ஹார்ட்வேர் கதைகள்தான்... லுங்கியை மடித்துக் கட்டி, அரிவாளைத் தூக்கிக் கொண்டு, நாக்கை மடித்துக் கடித்தபடி கிளம்பிட்டாங்க.

ஆனால் இந்தப் படத்தில் கமர்ஷியல் அயிட்டங்கள் இருக்கா, கவர்ச்சி இருக்கா, பஞ்ச் டயலாக் இருக்கா, எவ்வளவு தியேட்டர்ல போட முடியும், சேட்டிலைட்ல என்ன வரும், எப்எம்எஸ் போகுமான்னெல்லாம் யோசிக்காம, இந்தப் படத்தை நாம எடுக்கணும், அதுக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எடுத்த படக்குழுவுக்கு பலத்த கைத்தட்டலைத் தரவேண்டும்.

இந்த விழாவுக்கு நான் வரக் காரணம், படத்தின் போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த ஷிர்டி பாபாவின் படம். அவர் வாழ்ந்த சித்தர். அடுத்து, வாழுகின்ற சித்தரான இசைஞானி இளையராஜா.

இந்தப் படத்தோட ஹீரோயின்... இசைப்பிரியா என்ற அந்த போராளியின் கேரக்டரைப் பண்ணியிருக்காங்க. இனிமே நீங்க பெரிய ஹீரோயினாகலாம்... ராஜா சாரையே பார்த்து, எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு கூட சொல்லலாம். அந்த மாதிரி அவர் எவ்ளோ பார்த்திருக்கார்... அவர் பார்க்காததில்லே... விஜய் கூட நடிக்கலாம்.. அஜீத் கூட நடிக்கலாம். இன்னும் பெரிய பெரிய ஹீரோக்களோட நடிக்கலாம். ஆனால் அதிலெல்லாம் கிடைக்காத கவுரவம் உனக்கு இந்த முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது. இனிமே எனக்கு படமே வேணாம், கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிடுறேன்னிட்டு நீ போனா கூட... - ஏன்னா இப்போ அதான் பேஷன், பீக்ல இருக்கும்போது திருமணம் பண்ணிக்கிறேன்னு சொல்றது ஒரு ட்ரெண்டு... புரிஞ்சவங்க புரிஞ்சிக்கங்க.. புரியாதவங்க கேட்டுத் தெரிஞ்சிக்கங்க..

அடடா பீல்டை விட்டு போயிடுவாங்க போலிருக்கேன்னு நிறைய வாய்ப்புகள் வரலாமே... நான் தப்பா சொல்லல..

இதுக்கு மேல எவ்வளவு உயரத்துக்குப் போகலாம்... உனக்கு பேசத் தெரியல.. அதாவது நீ பிறக்கறதுக்கு முன்பிருந்தே அவர் இசை அமைச்சிக்கிட்டிருக்கார். நீ போன பிறவியில பொறக்கறதுக்கு முன்னாடியிருந்தே கூட அவர் இசையமைச்சிருப்பார்.

இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின், மற்றும் உள்ள எல்லாரும் புதுமுகங்கள்தான். ஆனா இசைஞானி இளையராஜாவின் இசை வந்ததும், இந்தப் படம் உலகத் தரத்துக்குப் போய்விடுகிறது. அதான் உண்மை.

இந்திய இசையின் கவுரவம் இசைஞானி இளையராஜா... உலக இசையின் ஆச்சர்யம் இசைஞானி இளையராஜா.. தமிழ்நாட்டின் செல்லம் இசைஞானி இளையராஜா.

தமிழ்நாட்டின் ஏழரை கோடி.. இது நேத்து கணக்கு... நாளைக்கு எவ்வளவோ தெரியாது... ஆனா அவ்வளவு கோடி பேர்களின் ரேஷன் அட்டைகளில் இல்லாத, ஆனால் அவர்களின் இதயத்தில் இடம்பெற்ற பெயர் இசைஞானி இளையராஜா.

சார் பாருக்கே போனதில்லே... ஆனா இவர் பாட்டில்லாத பாரே இல்ல... இசைஞானி மது அருந்துவதே இல்லை.. ஆனா மது அருந்தியவர்களுக்கு இசைஞானி இசையை விட்டா வேறு கம்பெனியே கிடையாது. சார், எவ்வளவு பார்ல, எவ்வளவு கார்ல, எத்தனை பேருக்கு கம்பெனி குடுத்துக்கிட்டிருக்கார் தெரியுமா... ஆனா அவர் குடிக்காமல்.

அது என்னவோ.. என்ன மாயமோ தெரியல... மத்த நேரத்திலெல்லாம், மத்தவங்க பாட்டா கேக்கறான். ஆனா இதயம் கசிந்து உருகி ஒரு உன்னதமான நிலைக்கு அவன் தள்ளப்படும்போது, அவன் கேட்க விரும்புவது இசைஞானி இசையை மட்டும்தான்.

அவர் குரலுக்கு ஒரு வசீகரமான மயக்கம் இருக்கிறது. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி குரலுக்கு ஒரு வசீகரம் உண்டு. அதுபோல இசைஞானி இளையராஜாவின் குரலுக்கு ஒரு வசீகரமுள்ளது. தமிழ்நாட்டில் எல்லாருக்கும் பிடித்த குரல்களில் இவையெல்லாம் வரும். இந்தப் படத்தில் இசைஞானி குரலில் ஒரு பாடல் வந்தது. அடடா என்று கேட்க ஆரம்பிக்கும்போதே, பல்லவியுடன் பாடல் நின்றுவிட்டது. ஆனால் நம் எல்லோருக்கும் முழுப் பாடலையும் கேட்க வேண்டுமே என்ற ஏக்கம் வந்தது பாருங்கள்... அதுதான் இளையராஜாவின் வெற்றி.

அந்தப் பாடல் நிச்சயம் இந்தப் படத்தின் ஒரு ஹைலைட்டாக இருக்கும்.

மொசார்ட் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை. பாக் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை. பீத்தோவன் வாழ்ந்த காலத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை. இங்கே, தென்னிந்தியாவில் தியாகப் பிரம்மம், முத்துசாமி தீட்சிதர் மற்றும் ஷ்யாமா சாஸ்திரி ஆகியோர்தான் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைச் செய்து, சங்கீதத்தை வளர்த்தார்கள்.. அவர்கள் காலத்தில் நாம் வாழவில்லை. ஆனால் நமக்கெல்லாம் இருக்கிற ஒரே சந்தோஷம்.. இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதுதான்.

நீங்கள் எப்பேர்ப்பட்டவருடைய இசையில் இந்தப் படத்தை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு உதாரணம், ராஜா சாரின் பாடலை, அன்னக்கிளியில் ஆரம்பித்து.. இப்போ இந்தப் படம் வரைக்கும் உள்ள பாடல்களை வரிசையா போட்டு கேட்டிங்கன்னா, அதாவது பிரேக் விடாம... அப்படியே நான் - ஸ்டாப்பா கேட்டிங்கண்ணா ரெண்டு மூணு மாசமாகும், அதிலிருந்து வெளிய வர்றதுக்கு! அவ்வளவு நீண்ட நெடிய இசைப்பயணத்தை அவர் நடத்தியிருக்கிறார்.

யாரோடும் ஒப்பிடுவதை விரும்பாதவர் இசைஞானி... காரணம் அதற்கு அப்பாற்பட்டவர் அவர். பொதுவாக இசையமைப்பாளர்கள் ஒரு காட்சியைப் பார்க்க வேண்டும். பார்த்த பிறகு ஹார்மோனியத்தை அமுக்க வேண்டும்... அதில் தொட்ட பிறகு அந்த சத்தத்தை அவர்கள் கேட்க வேண்டும். அதன் பிறகு இசையமைக்க வேண்டும். இதுதான் மனிதனால் முடியக் கூடியது.

ஆனால், இவர் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, குனிந்து எழுதுகிறார். எழுதுவதை வாசித்தால், அந்தக் காட்சிக்கான இசை அப்படியே வருகிறது. இப்படி நொட்டேஷன் எழுதக் கூடிய ஒரே இசையமைப்பாளர், தென்னாசியாவிலேயே இசைஞானி இளையராஜா ஒருவர்தான்.

ஏனென்றால், எதை தியானம் செய்கிறாயோ அதுவாகவே நீ மாறிவிடுவாய். நீ வேறு, ஆர்மோனியம் வேறு, அதில் வரும் இசை வேறு என மூன்றாகப் பிரிந்திருந்தால் அது கஷ்டம்.. நீயும் ஆர்மோனியமும் அதில் வரும் இசையும் ஒண்ணாகிடறீங்க.. அது யோகம். அதானால்தான் அவரை சித்தர்ங்கிறோம். அந்த Oneness அவருக்கு கிடைச்சிருச்சி. அதனால் அவர்கள் கண்கள் இமைப்பதே நின்றுவிட்டது. சித்தர்களுக்கு ஒரு அளவுக்கு மேல சில சக்திகள்... அவருக்கு வந்து கான்டாக்ட் வேற கான்டாக்ட்ல இருக்கார் அண்ணன். நீயும் நானும் பேசறதெல்லாம் அவருக்குப் புரியாது. அவரு பேசறது சில சமயம் நமக்குப் புரியாது. அவர் வேற ஒரு லெவல்லருந்து நம்ம திட்டுவாரு.. அறிவுரை கூறுவார். சில விஷயங்கள் சொல்வார்.. நமக்குப் புரியாது. நாமெல்லாம் சாதாரண மனிதப் புழுக்கள்.

நாம அவர் இசையைக் கேட்கணும்.. அதற்குக் கைத்தட்டணும்.. சாயங்காலங்களில் ஜாலியா இருக்கணும், அவர் பாடல்களைக் கேட்டுக்கிட்டே. இப்படியொரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்துட்டிருக்கிறோம்.

ஹௌ டு நேம் இட் என்ற ஒரு இசை ஆல்பம் முதல் முதலா இசைஞானி இசையில் வந்தது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டு. அதுல ஸ்டடி பார் வயலின்-னு வர்ற ஒரு பாடலை அவர் எங்கே வைத்து எழுதினார் தெரியுமா... அதைச் சொல்லி விளம்பரம் தேடிக்கொள்பவர் அல்ல அவர். அந்த நிலையிலும் அண்ணன் இல்லை. அதைத் தாண்டிய மிகப்பெரிய இசைஞானி அவர். ஆனால் இதைச் சொல்வதன் மூலமாக, இந்த விஷயம் இசைப் பிரியர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மேடையில் சொல்கிறேன். எங்கே வைத்து எழுதினார் தெரியுமா... அறையில் வைத்தோ, ஸ்டுடியோவில் வைத்தோ, வீட்டில் வைத்தோ, அல்லது அவருக்குப் பிரியமான தோட்டத்தில் அமர்ந்தோ அந்த நொட்டேஷன்களை எழுதவில்லை.. அவர் விமானத்தில் சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தபோது, பேப்பரில் இப்படி எழுதினால், அது அப்படி வரும் என்ற அசாத்திய நம்பிக்கையோடு எழுதியிருக்கிறார்.

இது போன்ற ஒரு அசாத்தியமான இசைத் திறமை என்பது 'மேல' கான்டாக்ட் இல்லேன்னா வராது. கீழே இருக்கும்போதே அவருக்கு அந்த கான்டாக்ட் அதிகம்னா.. மேலே ப்ளைட்ல போகும்போது இன்னும் பக்கமாயிடுதில்ல! கடகடகடன்னு வந்து விழுது.. அப்படியே டவுன்லோட் பண்ணி இறக்கிடறார் பேப்பர்ல!!

அப்பேர்ப்பட்ட மாபெரும் இசைஞானியைத்தான் உங்கள் படத்துக்கு இசையமைக்க வைத்திருக்கிறீர்கள்... இதுவே உங்களுக்கு மாபெரும் பாக்கியம்".

-இவ்வாறு பேசினார் விவேக்.

English summary
Actor Vivek's speech about Maestro Ilayaraaja is the highlight of the audio launch of Porkalathil Oru Poo, the life story of Isaipriya.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more